
சில நாட்களாக வன்னியின் பெரும்பாலான பகுதிகளுக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மேற்கொண்ட பயணம் தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் -
நாங்கள் ஒவ்வொரு மக்களைச் சந்தித்தபோதும் அவர்கள் கேட்டுக் கொண்டது தடுப்பில் இருக்கின்ற தமது பிள்ளைகளை மீட்டுத் தரும்படியும், காணாமல் போயுள்ள தமது உறவுகளை அறிந்து சொல்லும்படியும். ஒவ்வொரு மக்களும் மரங்களின் கீழே தற்காலிக கொட்டில்களை அமைத்தே வாழ்ந்து வருகின்றார்கள். எந்தவித அடிப்படை வசதிகளும் குறித்த மக்களுக்கு வழங்கப்படவில்லை.
அனேகமாக ஒவ்வொரு வீடுகளுக்கும் சீமெந்துப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் சீமெந்துடன் கலந்து கல் அறுக்க மணல் ஏற்றவோ, ஏனைய கூலிகளுக்கோ எந்தவித வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. உதாரணமாக நெடுங்கேணி பிரதேசத்தில் கமநல அபிருத்தி பணிமனையில் உழவூர்திகள் காணப்படுகின்றன. ஆனாலும் அவற்றினை மக்கள் 2500 ரூபாவிற்கே கூலிகொடுத்து அமர்த்த வேண்டியுள்ளது.
குறித்த பணிமனை அரச செயலகத்திற்குக் கீழ் செயற்படுகின்ற ஒரு பணிமனையாகும். அதேவேளை மக்கள் மணல் ஏற்றுவதற்கு வன்னியின் அனைத்துப் பகுதிகளிலும் பிரதேச சபைகளுக்கு பணம் கொடுத்தே மணல் ஏற்றவேண்டிய நிலையில் உள்ளனர். எந்தவித தொழில் முயற்சிகளுக்கான உதவிகளும் வழங்கப்படவில்லை.
விவசாயம் செய்வதற்கு விதை தானியங்களோ, உள்ளீடுகளோ வழங்கப்படவில்லை. மீன்பிடிக்கான அனுமதிகளோ, உபகரண உதவிகளோ போதிய அளவில் வழங்கப்படவில்லை. இந் நிலையில் பிரதேச சபைக்கும், ஏனைய அமைப்புக்களுக்கும் பணம் கொடுத்து எந்த அடிப்படையில் மக்களால் தமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளமுடியும்.
பாடசாலை செல்கின்ற தாய் தந்தையரை இழந்த பிள்ளைகளின் நிலை மிக மோசமாக உள்ளது, அவர்களைப் பராமரிக்கும் உறவினர்கள் தமது நிலைப்பாட்டினைப் பார்த்துக் கொள்வதில் நெருக்கடிகளை எதிர்கொள்கின்ற சூழலில் அநாதரவான பிள்ளைகளை எவ்வாறு பராமரித்துக் கொள்ள முடியும். எனவே குறித்த பிள்ளைகள் மிகவும் சுகாதாரமற்ற முறையில், போசாக்கான உணவுகள் அற்ற நிலையில், சீருடைகள், புத்தகங்கள் என அனைத்தாலும் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்.
குடிநீர், மருத்துவம், போக்குவரத்து உட்பட்ட எந்தவிதமான அடிப்படைத் தேவைகளும் வன்னியில் முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில் அந்த மக்களின் வாழ்வு கழிகின்றது என்று கூறினார்.





0 Responses to வன்னியில் மக்கள் அனுபவிக்கும் அவலம் என்ன? விளக்குகிறார் சிவசக்தி ஆனந்தன்