Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மே 24ஆம் நாள் திங்கள் முதல் வேட்புமனுத்தாக்கல் ஆரம்பம்

கனடா தழுவி யூன் 20ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை தேர்தல்

வட்டுக்கோட்டைத்தீர்மானம் மீதான வாக்குக்கணிப்பு, நாடு கடந்த தமிழீழ அரச பிரதிநிதிகளை தெரிவதற்கான தேர்தல் என வலுவாக நகர்ந்த கனடியத் தமிழ் மக்கள் தற்போது தமது வாழும் தேசம் தழுவிய வலுக்கட்டுமானமான கனடிய தமிழர் தேசிய அவையை அமைப்பதற்கான முயற்சியில் முழுமையாக இறங்கியுள்ளனர்.

நாடு கடந்த தமிழீழ அரச கட்டுமானத்திற்கு கனடாவில் இருந்தான வலுவை வழங்கி நிற்கும், கனடிய தமிழர் தேசிய வலுக்கட்டுமானமாக அமையவுள்ள கனடியத்தமிழர் தேசிய அவை, நாம் முன்னெடுக்கும் கனடா தழுவிய செயற்பாடுகளை அனைத்துத் தமிழர் அமைப்புக்களையும் ஒருங்கிணைத்து நேர்த்தியாகவும், வலுவுடனும் முன்னெடுக்கும் பணியை ஆற்றும்.

கனடியத் தமிழரின் தலைமைத்துவ அமைப்பாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரிதிநிதிகளைக் கொண்டு அனைத்து தமிழர் அமைப்புக்களையும் இணைத்து பயணிக்கவுள்ள கனடியத் தமிழர் தேசிய அவைக்கு கனடா தழுவி 22 உறுப்பினர்கள் தெரிவாக உள்ளனர்.

இதில் 9 உறுப்பினர்கள் தேசியப் பட்டியல் மூலம் கனடா தழுவி மக்கள் அளிக்கும் வாக்குக்கள் மூலம் தெரிவாவர். இதில் 5 ஆசனங்கள் பொதுப்பட்டியல் மூலமும், 2 ஆசனங்கள் பெண்களுக்கும், 2 ஆசனங்கன் இளையோருக்கும் என அமையும். 18 வயது முதல் 30 வயது வரையுள்ளோர் இளையோர் பட்டியலில் போட்டியிட தகுதியுடையோர்.

ஏனைய 13 இடங்களும் விகிதாசார அடிப்படையில், மாகாண பட்டியல் உறுப்பினர்களாக தெரிவாவர். இதில் 7 பேர் ஒன்ராரியோ மாகாண உறுப்பினர்களாக ஒன்ராரியோ தழுவி மக்கள் அளிக்கும் வாக்குக்கள் மூலம் தெரிவாவர். இதில் 3 ஆசனங்கள் பொதுப்பட்டியல் மூலமும், 2 ஆசனங்கள் பெண்களுக்கும், 2 ஆசனங்கன் இளையோருக்கும் என அமையும்.

கியூபெக் உட்பட கிழக்கு கனடாவில் அங்குள்ள மக்கள் அளிக்கும் வாக்குக்களின் அடிப்படையில் நான்கு மாகாண பட்டியல் உறுப்பினர்களாக தெரிவாவர். இதில் 2 ஆசனங்கள் பொதுப்பட்டியல் மூலமும், 1 ஆசனம் பெண்களுக்கும், 1 ஆசனம் இளையோருக்கும் என அமையும். இவ்வாறு மேற்கு கனடாவில் அங்குள்ள மக்கள் அளிக்கும் வாக்குக்களின் அடிப்படையில் இரண்டு மாகாண பட்டியல் உறுப்பினர்கள் தெரிவாவர்.

கனடிய தமிழர் தேசிய அவையின் யாப்பிற்கு அமைய 20 சதவீத பெண்கள் மற்றும் 20 சதவீத இளையோரின் பிரிதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கனடிய தமிழர் தேசிய அவைக்கான தேர்தலுக்கான செயற்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் பிராந்திய மட்டங்களில் அமையவுள்ள பிராந்திய கவுன்சில் உறுப்பினர்களுக்கான தேர்தலும் சக காலத்திலேயே நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வட்டுக்கோட்டை தீர்மான வாக்குக்கணிப்பை சிறப்புற நடாத்திய கனடியத் தமிழர் தேர்தல் ஆணையகமான தமிழர் தேர்தலுக்கான கனடியக் கூட்டமைப்பே கனடியத் தமிழர் தேசிய அவைக்கான தேர்தலையையும் நடாத்தவுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியையும் தேர்தலுக்கான செயற்குழு தெரிவித்துள்ளது.

வரும் திங்கள் மே மாதம் 24ஆம் நாள் முதல் போட்டியிட விரும்புகின்றவர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய ஆரம்பிக்கலாம் எனவும், சனிக்கிழமை யூன் 5ஆம் நாள் மாலை 9 மணிவரை வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் தமிழர் தேர்தலுக்கான கனடியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. வேட்புமனுக்கள் மற்றும் அது குறிக்க மேலதிக விபரங்களை திங்கள் முதல் தமிழர் தேர்தலுக்கான கனடியக் கூட்டமைபப்பு இணையத்தளமான றறற.வயஅடைநடநஉவழைளெ.உய இல் தரவிறக்கம் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் குறித்த மேலதிக விபரங்கள் தொடர்ந்தும் வரும் நாட்களில் தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகள், துண்டுப்பிரசுரங்கள் வாயிலாக எடுத்து வரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புகளுக்கு திங்கள் முதல் 1-888-759-5002 என்ற தொலைபேசி இலக்கத்தில் அழைக்கலாம்.

0 Responses to கனடியத் தமிழர் தேசிய அவைக்கான தேர்தலுக்கு தயாராகும் கனடியத் தமிழர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com