Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மிக மோசமான மனித உரிமை மீறல்களை கடந்த காலத்தில் மட்டுமல்லாது தற்போதும் புரிந்துவருகின்ற சிறிலங்கா அரசு சர்வதேசத்தின் மத்தியில் இலங்கையில் ஒரு பிரச்சினையையும் இல்லை என்ற பொய்த் தோற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் கொழும்பில் நடத்துகின்ற சர்வதேச இந்திய திரைப்பட விழாவினை புறக்கணித்து இந்திய திரைப்பட துறையில் கவனஈர்ப்பினை ஏற்படுத்திய தமிழ் திரையுலகத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எமது மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டு, இலட்சக்கணக்கானோர் அகதிகளாகி அடுத்த வேளை உணவிற்காக கையேந்தும் நிலையினை எதிர்கொண்டு ஏதிலிகளாக்கப்பட்டுள்ளனர். எமது மக்களின் அடுத்த கட்ட வாழ்க்கை என்பது மிகவும் மோசமானதாகவே அமைந்து காணப்படுகின்றது.

இலங்கையின் அனைத்து மக்களும் ஒரே நாட்டு மக்களே, அனைவருக்கும் தாமே தலைவர் எனக் கூறிவருகின்ற மகிந்தராஜபக்சவும் அவரது அரசும் எமது மக்களை மாற்றான் தாய் பிள்ளைகளாகக் கருதி அவர்களை முட்கம்பி வேலிகளுக்குள் முடக்கியும், அவர்களின் சொந்த ஊர்களில் கொண்டு சென்று இறக்கி விட்டும் சென்றுள்ளனர்.

அவர்கள் உண்மையில் எமது மக்களை தமது மக்களாகக் கருதினால் கேளிக்கை நிகழ்வுகளையோ, விழாக்களையோ பெரும் எடுப்பில் நடத்தமாட்டார்கள் என்பது வெளிப்படையான விடயமாகும்.

மிக மோசமான மனித உரிமை மீறல்களை புரிந்ததுடன் தற்போதும் புரிந்துவருகின்ற அரசு சர்வதேசத்தின் மத்தியில் இலங்கையில் ஒரு பிரச்சினையையும் இல்லை என்ற பொய்த் தோற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்து நடத்திவருகின்றது. இதன் அடிப்படையிலேயே இன்று கொழும்பில் தொடங்கியுள்ள இஃபா எனப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவிற்கான ஏற்பாட்டினையும் மேற்கொண்டது.

ஆனாலும் எமது மக்களின் உணர்வுகளைப் புரிந்து இந்த நிகழ்வினை முழுமையாகப் புறக்கணிப்பதென்று தாய்த் தமிழகத் திரையுலகு எந்தவித தயக்கமும் இன்றி முடிவெடுத்தது மட்டுமன்றி இந்தியாவின் ஏனைய முன்னணி மாநிலங்களைச் சேர்ந்த திரையுலகின் பிரபலங்களையும் நிகழ்வில் பங்கெடுக்காத வகையிலான அழுத்தங்களை மேற்கொண்டனர். அந்த அழுத்தங்கள் பாரியஅளவில் வெற்றியையும் ஈட்டித்தந்திருக்கின்றது.

தமிழ் திரையுலகுனருடன் தமிழ்த் தேசியப்பற்றாளர்களும் இணைந்து இந்தநிகழ்விற்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

இதன் அடிப்படையில் இந்தியாவின் சூப்பஸ்ரார் நிலையில் உள்ள எந்த ஒரு நடிகரும் பங்குகொள்ளாமலேயே இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெறும் நிலையினை எதிர்கொண்டிருப்பது சிங்கள அரசிற்கு மிகுந்த தலைகுனிவை எற்படுத்தியிருக்கும் என்பது அவர்களுக்கு ஒரு படிப்பனவாக அமையும் என நாம் நம்புகின்றோம்.

எமது மக்களின் மனங்களைப் புரிந்து அவர்களின் இரத்தம் தம்மில் கலந்துள்ளது என்பதனை மீண்டும் தாய்த் தமிழக உள்ளங்கள் நிரூபித்துள்ளமையை இட்டு நாம் உள்ளார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்வதில் நிறைவடைகின்றோம்.

எமது மக்களின் 60ஆண்டுகால அடிமைத் தளையில் இருந்து விடுதலைபெற எமக்கான அரசியல் பயணத்தின் வீச்சில் உங்களின் மூச்சும் என்றென்றும் வலுச்சேர்ப்பதாய் அமையவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கின்றது.

0 Responses to சர்வதேச இந்திய திரைப்பட விழாவினை புறக்கணித்த தமிழ் திரையுலகத்துக்கு நன்றி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com