சிறிலங்காவில் போருக்கு பின்னரான நிலைமைகளை நேரில் பார்வையிடவும் போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாக ஐ.நா. விசாரணைக்குழு ஒன்றை அமைப்பது தொடர்பான பூர்வாங்க பேச்சுக்களை நடத்துவதற்கும் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான ஆலோசனைக்குழுவின் தலைவர் லியோன் பஸ்கோ நாளை கொழும்பு செல்லவுள்ளார்.இன்று திங்கட்கிழமை நியூயோர்க்கிலிருந்து புறப்படும் லியோன் பஸ்கோ எதிர்வரும் 16 ஆம் 17 ஆம் திகதிகளில் சிறிலங்காவில் தங்கியிருந்து பல விஜயங்களை மேற்கொள்வார் என்றும் பல்வேறு தரப்பினை சந்தித்துப்பேசுவார் என்றும் ஐ.நா. பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனும் சிறிலங்காவின் அரச அதிபர் மகிந்த ராஜபக்சவும் விடுத்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்ட சிறிலங்காவில் போருக்கு பின்னர் மேற்கொள்ளப்படவுள்ள தேசிய நல்லிணக்க நடைமுறைகள், மனித உரிமைகள் பாதுகாப்பு படிமுறைகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வில் கடைப்பிடிக்கவேண்டிய செயன்முறைகள் ஆகியவை தற்போது என்ன நிலையில் உள்ளன என்பது தொடர்பில் லியோன் பஸ்கோ தனது விஜயத்தின்போது முக்கியமாக கவனம் செலுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது விஜயத்தின்போது, அரச அதிபர் மகிந்த, உயர் அரச அதிகாரிகள், எதிர்க்கட்சி தலைவர்கள், தமிழ் கட்சிகள் பிரதிநிதிகள், பொதுமக்கள் அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோரை லியோன் பஸ்கோ சந்திப்பார் என்றும் ஊடகவியலாளர் சந்திப்பிலும் அவர் கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல மாதங்களுக்கு முன்னர் கொழும்புக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்த லியோன் பாஸ்கோவின் பயணம், போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. செயலாளர் நாயகம் தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர் குழு ஒன்றை அமைப்பதாக அறிவித்ததை அடுத்து, சிறிலங்கா அரசினால் - திகதிகள் கொடுக்கப்படாமல் - இழுத்தடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



0 Responses to ஐ.நாவின் உயர் அதிகாரி சிறிலங்கா விஜயம்: முக்கிய பேச்சுக்களில் ஈடுபடுவார்