தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை சர்வதேசத்திற்கு எடுத்துரைக்கவும் அதற்காக நீதிகேட்டும் ஐ.நா.வை நோக்கி உறுதியுடன் நடந்து செல்லும் சிவந்தனுக்கு புலம்பெயர் தமிழ் மக்கள் அனைவரும் தமது ஆதரவைத் தொடர்ந்து வழங்க வேண்டுமென சிறிலங்காவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானிய முதன்மைப் பிரதிநிதியுமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
“கடந்த 23 ஆம் நாள் இலண்டனில் இருந்து ஐ.நாவை நோக்கி நடந்து செல்லும் மனிதநேயப் போராட்டத்தை ஆரம்பித்த சிவந்தன் மிகவும் உறுதியுடன் நடந்து இன்றுடன் (புதன்கிழமை) 12 நாட்களைக் கடந்துள்ளார். பல்வேறு கஸ்டங்கள், தடைகள், காலநிலை மாற்றங்கள் இருந்த போதிலும் அவர் இடைவிடாது தனது இலட்சியத்தை அடையும் வரை மிகவும் உறுதியுடன் இப்போராட்டத்தைத் தொடர்ந்துள்ளார்.
தாயகத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு நீதிகேட்டு அதற்கு உடந்தையானவர்களை சர்வதேசம் தண்டிக்க வேண்டும், தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகள் மற்றும் தமிழ் இளைஞர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், தமிழினத்திற்கு நீதி கிடைக்கும் வரை சிறிலங்காவை சர்வதேச சமுகம் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து அவர் இப்போராட்டத்தைத் தொடர்ந்துள்ளார்.
இத்தருணத்தில் புலம் பெயர் தமிழ் மக்கள் அமைதியாக இருப்பதோ அல்லது வேடிக்கை பார்ப்பதோ உசிதமல்ல. மாறாக அவரின் போராட்டம் வெற்றி பெற அனைத்து வகையிலும் தங்களின் ஒத்துழைப்பை நல்க வேண்டும்.
கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னர் புலம் பெயர் நாடுகளை மையப்படுத்தியதாக ஐ.நா.வை நோக்கி மேற்கொள்ளப்படும் இவ் உணர்வு பூர்வமான போராட்டம் நிட்சயமாக சர்வதேச சமுகத்தை திரும்பிப் பார்க்க வைக்கும் என்பதே உண்மை.
அது மாத்திரமின்றி தமிழ் மக்களின் விடிவுக்காவும் எமது கொள்கை, இலட்சியம் என்பனவற்றை வென்றெடுக்கவுமே அவர் இவ்வாறானதொரு உறுதிமிக்க போராட்டத்தைத் தொடர்ந்துள்ளார். இப்போராட்டத்தின் ஊடாக எமது புலம் பெயர் மக்களின் உணர்வு, ஒற்றுமை, எழுட்சி என்பன மீண்டும் புத்துயிர்பெற வழிவகுக்கும்.
அவரின் இப்போராட்டத்திற்கு தமிழ் நாடு, மலேசியா உட்பட பல நாடுகளில் இருந்தும் தமிழின உணர்வாழர்கள் தமது ஆதரவையும் வாழ்த்துக்களையும் தொடர்ந்து தெரிவித்து வரும் இவ்வேளை எமது உறவுகளும் அவருக்கு ஆதரவை வழங்க வேண்டும்.
இதேவேளை திட்டமிட்டபடி எதிர்வரும் ஆறாம் திகதி அவர் ஜெனிவாச் சென்றடைவதில் தாமம் ஏற்படுவதால் இறுதி நாள் ஒன்று கூடல் பற்றி பின்னர் அறிவிக்கப்படும் அதேவேளை இறுதிநாள் ஒன்று கூடல் ஜெனிவாவில் ஐ.நாவிற்கு முன்பாக ஈகைப்பேரொளி முருகதாசன் சதுக்கத்தில் நடைபெறும் வேளை புலம் பெயர் மக்கள் பெருமளவில் அதில் கலந்து கொண்டு சிவந்தனின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும்” என ஜெயானந்தமூர்த்தி அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to சிவந்தனுக்கு புலம்பெயர் தமிழ் மக்கள் அனைவரும் தமது ஆதரவைத் தொடர்ந்து வழங்க வேண்டும்