Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

''போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு விடுதலைப்புலிகளே சம்மதித்தபோது, தமிழகத்தில் இருக்கும் வைகோவும் பழ.நெடுமாறனும் தடையாக இருந்தார்கள்'' என்று தனது முதல் பேட்டியில் குறிப்பிட்ட குமரன் பத்மநாதன், அடுத்தடுத்துக் கொடுத்து வரும் பேட்டிகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்றியும் அதன் தேசியத் தலைவர் பிரபாகரன் பற்றியுமே வார்த்தை விமர்சனங்களைப் பாய்ச்ச ஆரம்பித்திருப்பது, தமிழீழ ஆதரவாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சி!

கே.பி யின் புதிய குற்றச்சாட்டுகளுக்கு ஜூனியர் விகடனுக்கு வைகோ வழங்கிய செவ்வி:

கேள்வி: தமிழீழம் என்பது அழிந்துபோன இலட்சியம் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறாரே கே.பி?

வைகோ: இதைச் சொல்ல, துரோகி கே.பி-க்கு அதிகாரம் கொடுத்தது யார்? இரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப்படும் தமிழ் ஈழ மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் துரோகப் படலமும் தொடர்ந்தே வந்திருக்கிறது. இதில் இன்றைய அத்தியாயம் கே.பி. கொலைபாதகன் ராஜபக்ஷ அரசின் கைக் கூலியாகத் தமிழினத்துக்கு துரோகம் செய்வதையே இன்றைய தொழிலாகக்கொண்டு மாறிவிட்ட கே.பி-யிடம் இந்த வார்த்தைகளைத் தானே எதிர்பார்க்க முடியும்?

தமிழீழம் வேண்டும், வேண்டாம் என்று முடிவெடுக்க, பல பத்து ஆண்டுகளுக்கு முன்னால் வட்டுக்கோட்டையில் தீர்மானம் போட்ட ஈழத் தந்தை செல்வநாயகத்தின் மறுவடிவமா இவர்? எத்தனை நாட்டு இராணுவம் சூழ்ந்து வந்தாலும் தமிழீழ இலட்சியத்தை விடாமல் களத்தில் நின்று போராடிய புலிப் போராளியா?

2002-ம் ஆண்டில் விடுவிக்கப்பட்டு 2008-ம் ஆண்டில் ஊடகத் தொடர்பாளராக அறிவிக்கப்பட்டார். இப்போதுவிடுதலைப் புலிகள் அமைப்புக்கு நானே தலைவர்என்றும், ‘பிரபாகரன் தன்னை அப்பொறுப்பு வகிக்கச் சொன்னார்என்றும் முழுப் பொய்யைச் சொல்லி தனக்குத்தானே முடிசூட்டிக் கொண்டவர்தான் இந்த கே.பி.! அப்படிப்பட்டவர் பேசும் பேச்சா இது?

2008-ம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதி மாவீரர் தின உரையில், தலைவர் பிரபாகரன், ‘பெரிய ஆயுத பலம்கொண்ட பாரிய சக்திகளை எதிர்த்து நாங்கள் நிற்கிறோம். எத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்தாலும்,எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும், எத்தனை சக்திகள் எதிர்கொண்டாலும், தமிழரின் சுதந்திர விடிவுக்காகத் தொடர்ந்து நாம் போராடுவோம். சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரம் ஆகிவிட்ட எமது மாவீரர்களின் வழியே சென்று, நாம் எமது இலட்சியத்தை அடைவோம் என்று உறுதி எடுத்துக்கொள்வோமாக! புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்!’ என்று அறிவித்தார்.

உலகத்தின் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தமிழர் உள்ளமெல்லாம் இருக்கும் ஒரே தீர்வுதனித் தமிழ் ஈழம்தான். கடந்த 40 ஆண்டு காலமாக ஒவ்வொரு நாளும் தமிழனைக் கொன்ற ஒன்றுபட்ட இலங்கைக்குள் இனி தமிழனுக்கு நிம்மதி என்பது வரவே வராது. இதை நாம் சொல்லவில்லைஅமெரிக்க மருத்துவர் எலின் ஷான்டர் சொன்னார். ‘இனி இரண்டு தமிழர்கள் சந்திக்கும்போது, அடுத்த ஆண்டு தமிழீழத்தில் சந்திப்போம் என்று உறுதி எடுங்கள்என்றார் அவர். எலின் ஷான்டர் உடம்பில்கூட தமிழ் இரத்தத்துக்கான துடிப்பும் தவிப்பும் ஓடுகிறது. கே.பி. உயிர் வாழ்வதோ சிங்கள இரத்தத்தில்!

கேள்வி: விடுதலைப் புலிகள், சாதாரண மக்கள் மீது வன்முறையைத் தூண்டி துன்பம் விளைவித்ததாக கே.பி. சொல்கிறாரே?

வைகோ: இது மட்டுமா சொல்கிறார் அவர்? கோலாலம்பூரில் இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, விமானத்தில் வசதியுள்ள உயர் வகுப்பில் தான் பயணித்ததாகவும், கொழும்பு சென்றவுடன் ராஜபக்ஷவின் சகோதரன் கோத்தபாய வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு அவர் கேக்கும் தேநீரும் தந்து உபசரித்ததாகவும், மிக அன்போடு தன்னிடம் பேசியதாகவும், அதன் பின் தான் ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டதாகவும், அதிகாரி ஒருவர் தனக்கு எந்நேரமும் உதவியதாகவும், உலகில் யாருடனும் பேசும் தொலைபேசி வசதியும், தொடர்புகொள்ள மின் அஞ்சல் வசதியும் செய்யப்பட்டு உள்ளதாகவும் கே.பி. கூறியிருக்கிறார்.

சிங்கள அரசுக்கும், தனக்கும் பரஸ்பரப் புரிதலும், நம்பிக்கையும், நட்பும் வளர்ந்துகொண்டே வருவதாகவும் கூறியிருக்கிறார். நீண்ட காலத்துக்கு முன்பே யுத்தம் முடிந்துவிட்டதாக கோத்தபாயாவிடம் சொன்னதாகவும் கூறியிருக்கிறார்.

சிங்கள அரசால் சிங்காரித்து பூஜிக்கப்படும் கே.பி., 2009 மே 17-க்கு முன்னதாகவே யுத்தம் முடிந்துவிட்டதாகக் கூறிய கே.பி., விடுதலைப் புலிகளைப் பற்றியும், உயிர் கொடுத்துப் போராடிய போராளிகள் பற்றியும், எவருக்கும் நடுங்காத அதன் தலைவர் பற்றியும் உயர்வாகப் பேசுவார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

புலிகள், எப்போதேனும் அப்பாவி சிங்கள மக்களை தேடிப்பிடித்துக் கொன்றதுண்டா? பாலியல் துன்பம் இழைத்ததுண்டா? அவர்கள் வாழும் இடத்தில் குண்டு போட்டதுண்டா? அதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறார் கே.பி.? ஆனால், அப்பாவித் தமிழ் மக்களை சிங்கள இராணுவம் கொன்றதற்கு லட்சக்கணக்கான ஆதாரங்கள் உண்டே?

காட்டுக்குள் வழி தவறி வந்த சிங்களப் பெண் ஒருத்தியை தமிழர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தார் என்று கேள்விப்பட்டதும், அதற்கு மிகக் கடுமையான தண்டனை விதித்தவர் பிரபாகரன். புலிகளால் யுத்தத்தில் கொல்லப்பட்ட சிங்கள இராணுவ வீரர்களுக்கு அவர்கள் நாட்டு மரியாதையுடன் நல்லடக்கம் செய்தவர் பிரபாகரன். பிணைக் கைதியாகப் பிடித்துவைக்கப்பட்ட சிங்கள இளைஞன் ஒருவனது மனைவி அவனைப் பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தபோது உடனே அனுமதி கொடுத்தது புலிகளது இயக்கம். அப்படிப்பட்ட இயக்கத்தைத்தான் கே.பி. கொச்சைப் படுத்துகிறார்.

எட்டு தமிழ் இளைஞர்களின் ஆடைகள் அப்புறப்படுத்தப்பட்டு அம்மணக் கோலத்தில், கண்கள் கட்டப்பட்டு, கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டு, இழுத்து வரப்பட்டு, சிங்களச் சிப்பாய்கள் எட்டி உதைத்து மிதித்து மண்டியிட்டு உட்காரவைத்து எந்திரத் துப்பாக்கியால் பின்னந் தலையில் சுட்டு, இரத்த வெள்ளத்தில் துடிதுடிக்கச் செய்து சாகடித்தார்களே..! இதை இணைய தளங்களில், சனல் 4 தொலைக்காட்சியில் காண்பித்தார்களே. இதற்கு என்ன பதில் இருக்கிறது?

சிங்களவன் வெறிகொண்டு திலீபனின் நினைவிடத்தை உடைத்தான். மாவீரர் துயிலும் இடங்கள் உடைக்கப்பட்டன. வாழ்க்கையின் வசந்த காலத்தில் சுகங்களைத் தேடாமல் மண்ணுக்காக மடிந்த எம் இளைஞர்களும், இளம் பெண்பிள்ளைகளும் கல்லறைக்குள்கூட நிம்மதியாய் கிடக்கக் கூடாது என்பதற்காக, எல்லாக் கல்லறைகளையும் உடைத்தானேஅதைப்பற்றி தனது பேட்டியில் ஒரு சொல் சொல்ல, கே.பி-க்கு முதுகெலும்பு உண்டா?

ஆபரேஷன் எல்லாளனில் பங்கேற்ற கரும்புலி வீரர்களின் உடலை நிர்வாணமாக்கி, சிங்களத் தெருவில் ஊர்வலம் விட்டதும், பெண் போராளிகளைப் பாலியல் வல்லுறவு செய்து அந்தப் படங்களை வெளியில் விட்டதும் கே.பி. கண்ணுக்கு காட்டுமிராண்டித்தனமாகத் தெரியவில்லையா?

கேள்வி: இலங்கையின் அனைத்துத் தரப்பு மக்களிடமும் தான் மன்னிப்புக் கோருவதாக கே.பி. சொல்கிறாரே?

வைகோ: எனக்கு உயிர்ப்பிச்சை தாருங்கள் என்பதை வேறு வார்த்தையில் கேட்டிருக்கிறார் கே.பி. ராஜபக்ஷேயின் ராஜ்யத்தில் தனது மிச்ச நாட்களைக் கழிக்க வேண்டிய நேரத்தில் கே.பி-யால் இப்படித்தான் பேச முடியும்.

அயர்லாந்து நாட்டின் தலைநகராகிய டப்ளினில் கூடிய நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் முன் வைக்கப்பட்ட ஆவணங்களின்படி, ராஜபக்ஷ ஒரு போர்க் குற்றவாளி. போர் குறித்த ஜெனிவா ஒப்பந்தங்களை மீறியவர் என்று நிரூபிக்க எத்தனையோ ஆதாரங்களை பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு ஊடகங்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.

2005-ம் ஆண்டு முதல் 2009 வரை கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையையும், கடைசி ஐந்து மாதங்களில் நடத்திய கொடூரங்களையும்ஆயிரம் கே.பி-கள் பேட்டிகள் கொடுத்தாலும் மறைக்க முடியாது. வெள்ளைக் கொடியை ஏந்தி வந்த நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட போராளிகளை பட்டப்பகலில் சுட்டுப் பொசுக்கிய பாவத்துக்கு, பத்திரிகையாளர் மேரி கெல்வின் என்ற ஒரு சாட்சியே போதும்.

மருத்துவமனைகள் மீது, பள்ளிகள் மீது, குடியிருப்புகள் மீது குண்டுகள் போட்டதை சட்டிலைட் படங்கள் இன்னமும் பேசிக்கொண்டே இருக்கின்றன. உலகம் தடை செய்த ஆயுதங்கள், குண்டுகள் அனைத்தும் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வளவையும் ஒரு துரோகியின் பேட்டியால் மறைக்கப் பார்க்கிறார்கள்.

ராஜபக்ஷவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற கருத்து உலக நாடுகளில் ஓங்கி வருகிறது. அதைத் திசை திருப்பவே இதுபோன்ற நாடகங்கள் நடத்தப்படுகின்றன!.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to தமிழீழத்தைக் கைவிட கே.பி. யார்?: ஜூனியர் விகடனுக்கு வைகோ வழங்கிய செவ்வி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com