பிணங்களின் எரியும் புகையில்
புகுகிறது பள்ளி சீருடைகள்;
பிணங்களின் அழுகிய நாற்றத்தில்
மறந்தன மரண பயம்;
பிணங்களின் முறிந்த உறுப்பில்
முடங்கின உயிர் பறித்த வலி;
பிணங்களின் தெருவோர குவியலில்
அறுந்தன உயிரின் ஆசை;
பிணங்களின் பிணமென்னும் பெயரில்
கிடக்கின்றன எம் – வீரமும் உறவுகளும்;
பிணமென்றே பெயர் வைத்தேன்
வேறென்ன எம்மக்கள் -
பிணமாகிப் போகவே படைத்தாயே?
வெடித்த குண்டுகள் வீரம் பேச
உழைத்த உழைப்பெல்லாம் மண்ணாய் போக
பயமும் கதறலுமாய் பதறித் திரிந்த உடம்புகளில் -
ஈக்கள் மொய்க்க..,
எலும்பு கடித்து நாய்கள் திரிய..,
உடம்பு காட்டி என் தமிழச்சிகள் கருக..,
வெட்டி சாய்த்த மரம் போல -
எம்மக்கள் வீழ்ந்து குவிந்திருப்பதை கண்டாயோ?
பற்றி எரிகிறது மனம்
வெறும் படமென்று எண்ணி
உச்சு கொட்டி போகிறது உலகம்
மறந்தோர் மறந்து
வலித்த உணர்வுகளையும் தொலைத்து
மிச்சம் மீதிக்காய் அழுது -
வெறும் வரலாற்றில் கணக்காகிப் போயினறே என்மக்கள்;
வேறென்ன சொல்ல எமை -
முடிவில் -
பிணமென்றே பெயர் வைத்தேன்; அதில்
என்னையும் பூட்டிவைத்தேன்!!
வித்யாசாகர்.
**************************************
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்
0 Responses to பிணமென்றே பெயர் வைத்தேன்: கவிதை வடிவம் வித்யாசாகர்