முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தனது பாராளுமன்ற உறுப்பினருக்கான மாதாந்த ஓய்வூதியத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாவீரர்கள் படையினரால் கைது செய்யப்பட்டு காணாமல்போயுள்ள போராளிகள் தளபதிகளின் பிள்ளைகளின் கல்விச் செலவுக்காக ஒதுக்கியுள்ளார்.அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததன் காரணமாக அவருக்கு தற்போது மாதாந்த ஓய்வூதியம் இலங்கை பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த பணத்தை அவர் மேற்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாவீரர்கள் மற்றும் படையினரால் கைது செய்யப்பட்டு காணாமல்போயுள்ள போராளிகள் தளபதிகளின் பிள்ளைகளின் கல்விச் செலவுக்காக மாவீரர்களை நினைவு கூரும் இக்கார்த்திகை மாதத்தில் இருந்து வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார். இதற்காக தற்போது அவர் மாவீரர்களின் குடும்பங்களுடன் தொடர்பு கொண்டு அதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்: “நான் எனது சொந்த மண்ணுக்காகவும் அந்த மக்களுக்காகவுமே பாராளுமன்ற உறுப்பினராக இருந்தேன். அக்காலகட்டத்தில் எனது மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் எமது கொள்கைக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தேன். இதன் காரணமாக என்னால் மீண்டும் நாட்டுக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. நான் ஏனையவர்களைப்போல் பல பக்கமும் நடித்திருந்தால் தற்போது மீண்டும் எனது மாவட்டத்தில் நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருப்பேன்.
ஆகவே நான் நேசித்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தமது உயிரைத் தியாகம் செய்த அந்த மாவீரர்களை நான் மதிக்கின்றேன். எனவே இன்று குடும்பத் தலைவரை இழந்து அல்லது தலைவியை அல்லது இருவரையும் இழந்து தவிக்கும் அக்குடுபத்தைச் சேர்ந்த குழந்தைகளை காப்பாற்ற வேண்டியது எனது கடமை என இத்தருணத்தில் நான் நினைக்கின்றேன்.
அக்குடும்பங்கள் தற்போது பெரும் பொருளாதாரக் கஸ்டத்தில் உள்ளனர். அதன் காரணமாக நான் தற்போது வெளிநாட்டில் இருந்தாலும் எந்தவித பொருளாதார வருமானமுமின்றி இருப்பதால் எனது ஓய்வூதியத்தை அவர்களுக்கு வழங்கத் தீர்மானித்தேன்.
இந்த மாவீரர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்யுமாறு நான் பிரித்தானியா உட்பட சில நாடுகளில் இயங்கிவரும் மாவீரர்களின் குடும்பங்களுக்கு உதவி வழங்கும் அமைப்புகளிடம் வேண்டுகோள் விடுத்தபோதிலும் அதற்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை.
இதனால் நானே எனது பணத்தை அதாவது ஓய்வூதியத்தை வழங்குவதென முடிவெடுத்தேன். இதேவேளை தற்போது நான் முதற்கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மாவீரர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்ய ஆரம்பித்துள்ள போதிலும் எதிர்காலத்தில் வடகிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த இதுவரை எதுவித உதவியும் கிடைக்காதவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கும் வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளேன்.
இதை என்னால் மாத்திரம் செய்து விட முடியாது. எனவே உதவி புரிய முன்வருவோர் என்னுடன் தொடர்பு கொண்டால் அந்த மாணவர்களின் விபரத்தை என்னால் வழங்க முடியும். அவர்களே நேரடியாக அந்த மாணவர்களுக்கு தமது உதவிகளை வழங்க முடியும்.” என அவர் தெரிவித்துள்ளார்.
S Jeyananthamoorthy
moorthymp@yahoo.com



0 Responses to ஓய்வூதியத்தை மாவீரர்கள் பிள்ளைகளின் கல்விச் செலவுக்காக ஒதுக்கிய எஸ்.ஜெயானந்தமூர்த்தி