கணவர், மகன்கள், மகள்கள் யாரும் அருகில் இல்லாத நிலையில் தவித்த அவருக்கு சில மாதங்களுக்கு முன்பு உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து கனடாவில் உள்ள தன் மகள் வினோதினியுடன் சென்று வாழ விரும்பினார். ஆனால் முடியவில்லை.
தமிழ்நாட்டிலும் அவர் சிகிச்சை பெற இயலாத சூழ்நிலை ஏற்பட்டதால் ஈழத்தில் உள்ள தன் சொந்த ஊரான வல்வெட்டித்துறைக்கு திரும்பினார். தற்போது அங்குள்ள அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். அவர் முன்பு படுத்தபடுக்கையாக இருந்தார்.
சமீப காலமாக எழுந்து உட்கார்ந்து பேசும் அளவுக்கு அவர் உடல்நிலை தேறியுள்ளது.
பார்வதி அம்மாளை அவரது நெருங்கிய உறவினரும், முன்னாள் எம்.பி.யுமான சிவாஜிலிங்கம் அரசு அனுமதி பெற்று பராமரித்து வருகிறார். வல்வெட்டித்துறை அரச மருத்துவமனையில் அவருக்கு எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. என்றாலும் அவரது மனம் மகன்கள், மகள்களை பார்க்க ஏங்குகிறது.
இதை அவர் பல தடவை கண்ணீர் மல்க சிவாஜிலிங்கத்திடம் கூறியுள்ளார். இதையடுத்து பார்வதி அம்மாளின் மகன், மகள்களை ஈழத்துக்கு வர வைக்க சிவாஜிலிங்கம் முயன்றார். ஆனால் அதற்கு வெற்றி கிடைக்கவில்லை.
வேலுப்பிள்ளை-பார்வதி அம்மாள் தம்பதியருக்கு மனோகரன், பிரபாகரன் (தமிழீழ தேசியத் தலைவர்) என்ற 2 மகன்களும், ஜெகதீஸ்வரி, வினோதினி என்ற 2 மகள்களும் உள்ளனர். இவர்களில் 63 வயதாகும் மனோகரன் டென்மார்க் நாட்டில் வசித்து வருகிறார்.
மூத்த மகள் ஜெகதீஸ்வரி தனது கணவர் மதியாபரனுடன் சென்னையில் வசித்து வருகிறார். இளைய மகள் வினோதினி தனது கணவர் ராஜேந்திரனுடன் கனடா நாட்டில் வசித்து வருகிறார்.
ஈழத்துக்கு சென்றால் சிங்கள அரசு கைது செய்து சித்ரவதை செய்யும் என்ற எண்ணத்தில் இவர்கள் செல்லவில்லை.
பார்வதி அம்மாளுக்கும் தனது மகன், மகள்களின் நிலை நன்கு புரிந்துள்ளது. எனவே பேரன், பேத்திகளையாவது பார்த்து விட முடியுமா என்று ஏங்குகிறார். ஆனால் அதற்கும் வாய்ப்பு மிக, மிக குறைவாகவே உள்ளது.
வல்வெட்டித்துறை அரச மருத்துவமனை மருத்துவ அதிகாரி மயிலேறும் பெருமாள் கூறுகையில், பார்வதி அம்மாள் நன்கு தேறி வருகிறார். உறவினர்கள் யாரையாவது பார்த்தால் அவருக்கு மகிழ்ச்சி அதிகமாகும். முகம் பிரகாசமாகி விடும் உறவுகளின் பாசத்துக்காக அவர் ஏங்குகிறார் என்றார்.
விடுதலைப்புலிகள் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் சிங்களவர்கள் தற்போது தைரியமாக தமிழர்கள் பகுதிகளுக்கு வந்து சுற்றி பார்க்கிறார்கள். சுற்றுலா வரும் சிங்களவர்கள் வல்வெட்டித்துறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பார்வதி அம்மாளை பார்க்கத் தவறுவதில்லை. வாரத்துக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் பேர் அந்த மருத்துவமனைக்கு வந்து செல்கிறார்கள்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் பார்வதி அம்மாளுக்கு பழங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுத்து செல்கின்றனர். சிலர் பார்வதி அம்மாள் காலைத் தொட்டு வணங்குகிறார்கள்.
உலகத் தமிழர்களின் ஒரே அடையாளமாக திகழ்ந்த பிரபாகரனை பெற்ற வீரப்பெண்மணி என்று சிங்களவர்களே பார்வதி அம்மாளை புகழ்ந்து செல்வது குறிப்பிடத்தக்கது.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to உறவினர்கள் பாசத்துக்காக ஏங்கும் தேசியத் தலைவரின் தாயார்!