மௌமான இடத்தில் மாவீரர்களில் அமைதி மொழி…
இரண்டு மாவீரர்நாள் சிறப்புக் கட்டுரைகள்.
ரிச்சாட் ஈ பேட்டின் அனுபவங்களும் ஒரு மரணித்த மாவீரனின் பாதணியும்..
உலகத்தில் உள்ள மனிதன் ஒவ்வொருவனுமே பிரபஞ்சத்தின் ஓரங்கம்தான். சுயநலவாதிகள் மற்றவருக்கு பயங்கரவாதி பட்டம் கட்டினாலும், மாறாக துரோகிப் பட்டம் கட்டினாலும் எவரையுமே பிரபஞ்சத்திலிருந்து வேறுபட்டவர்கள் ஆக்கிவிட முடியாது..
1934ம் ஆண்டில் ஒரு நாள்…
இந்த உண்மையை அறிந்து உலகிற்கு சொல்ல விரும்பினான் ரிச்சாட் ஈ போர்ட் என்ற ஒரு தனி மனிதன்…
போலிமை நிறைந்த உலக மாந்தர்கள் அனைவரையும் விட்டுவிட்டு, தனிவழி விலகினான்..
அவன் தன்னந்தனி மனிதனாக மனிதர்களே இல்லாத பனி மூடிய அன்டாட்டிக் தென் துருவத்திற்குப் போய்ச் சோந்தான்…
அங்கு அவனைத்தவிர வேறு யாருமே இல்லை.. தனிமை.. தனிமை…தனிமை அது மட்டுமே துணை..
அந்தத் தனிமைக்குள்தான் மனித இனம் என்பது தனித்தில்லை என்ற இரகசியம் புதைந்து கிடப்பதைக் கண்டு கொண்டான்..
தனிமைக்குள் நின்றபோதுதான் தான் தனிமனிதனில்லை என்பதும், அந்த அன்டாட்டிக் கொடுங் குளிரிலும் அவனுக்காக இந்தப் பிரபஞ்சம் அவனோடு கைகோர்த்திருப்பதும் தெரிந்தது.. அழகான சூதுவாதற்ற ஓசையற்ற நம்பிக்கை மெல்லென இதயத்தை கவ்வியது… அந்தக் கடுங்குளிரிலும் அவன் இதயத்தில் கதகதப்பான சூடு பரவுவதை உணர்ந்து கொண்டான்…
யாருமற்ற அந்த மதிய நேரம் கடற்புறத்தின் அழகையும்… அதன் சக்தியையும் பார்த்து வியந்தபடி மரக்கட்டைபோல ஆடாது அசையாது நின்றான்..
அமைதி மாலையாகி பின் இரவாகி அவன் மேல் விழுந்தது..
அதோ அழகிய வானம்…
அண்ணார்ந்து நட்சத்திரங்களைப் பார்த்தான்…
கோள்கள் தங்கள் சரியான பாதையில் சுற்றி வருவதையும், வானில் நட்சத்திரக் கூட்டங்கள் தொடர்ந்து நகர்ந்து கொண்டிருப்பதையும், பருவகாலங்கள் சரியான இடைவெளியில் மாறி மாறி வருவதையும் அங்கிருந்தே கூட்டிக் கழித்துப்பார்த்தான்… அடடா.. இவையெல்லாம் எப்படி ஒத்திசைந்து இயங்குகின்றன என்று ஆழமாக யோசித்தான்..
அப்போது ஓசையற்ற அமைதியின் வரவை உணர ஆரம்பித்தான்..
ஒரு கணம் அவன் அந்த அமைதியின், வெளியில், லயத்தின் ஒரு பாகமாகவே மாறிவிட்டான்.. அந்த ஒரே கணத்தில் தான் பிரபஞ்சத்துடன் ஒன்றிவிட்ட அதிசயத்தைக் கண்டு கொண்டான். அப்படி ஓர் அமைதியை வாழ்வில் அவன் அனுபவித்ததே இல்லை.. இந்தப் பிரபஞ்சத்தில் மனித இனம் தனித்தில்லை என்பதை அந்த லயத்தில் உணர்ந்தான்…
வேகமாக தனது சிறு குடிசைக்குள் ஓடினான்…
அந்த லயத்தை உலக மக்களுக்காக விரைவாக எழுதினான்…
மெதுவான தாள லயத்துடன், தந்திக் கம்பிகளின் அதிர்வு போல ஓர் இசை… பூமிக்கோளத்தின் இசை ஒருவேளை இதுதானோ… ?
அந்த லயத்தை உணர்ந்து நானும் அதில் பங்கேற்க ஆரம்பித்தேன்.. அந்தக் கணத்தில் மனிதன் பிரபஞ்சத்தின் ஒரு பாகம் என்பதில் சந்தேகம் இல்லை என்று உணர்ந்தேன்.. அந்த இயக்கம் அவ்வளவு ஒழுங்காக.. இசைவாக… கச்சிதமாக.. இருந்ததால் அதை தற்செயலானது என்று கூறிவிட முடியவில்லை… இந்த முழுமைக்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும். இந்த முழுமையில் மனிதனும் ஓர் அங்கம், அவன் விபத்தல்ல. அந்த லயம் எனது இதயத்தில் இருந்த நம்பிக்கையின்மையை தொட்டு அதை வேரோடு அழித்தது.. பிரபஞ்சம் ஒரு படைப்பு.. ஒரு குழப்பமல்ல.. பகல் இரவுபோல் மனிதனும் பிரபஞ்சத்தின் உரிமையோடு கூடிய பாகம்தான் என்று எழுதி முடித்தான்.
இந்த அமைதிகலந்த அனுபவத்தை எழுதி மறபடியும் உலக மாந்தர்க்கு ஒப்படைத்தவன்தான் உலகப்புகழ் பெற்ற அறிஞன் அட்மிரல் ரிச்சாட் ஈ பேர்ட் என்பவனாகும்…
பிரபஞ்சம் ஒரு படைப்பு அது குழப்பமல்ல என்ற வரி இங்கு நமக்கு முக்கியம்…
இப்படிப்பட்ட அமைதி நிறைந்த பிரபஞ்சம் புதுமாத்தளனிலும், முள்ளிவாய்க்காலிலும் ஏன் மாபெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது…
பின்…
2009 மே 18ம் திகதியன்று அனைத்துக் குழப்பங்களையும் ஏன் ஒரேயடியாக நிறுத்தியது.. ?
மாபெரும் பேரமைதி நிலவும் இடமாக முள்ளிவாய்க்கால் மறுபடியும் மாறியது.. மே 18ம் திகதிக்குப் பிறகு பேரமைதி அங்கு சுனாமி வெள்ளம் போல புகுபுகுவெனப் புகுந்து மூடிக்கொண்டது..
பெருங்குழப்பத்தை ஏற்படுத்தி, உலகத்தைப் பார்க்க வைத்து, பின் சட்டென மௌனத்திரையைப் போட்டது காலம்..
அந்த மௌனத்தின் பொருள் அறியாத அறியாமை நிறைந்த எதிரிகள் தடயங்களை அழிக்க நாற்புறமும் ஓடினார்கள்…
அவர்கள் ஓடிய காலடிகளை தவிர அங்கு வேறு சத்தங்களே இல்லை… அமைதி… இறுக்கமான அமைதி…
அந்த அமைதிக்குள் சிறீலங்கா இராணுவத்திற்கு ஒரு தூபி கட்டினார்கள்…
கோத்தபாயவும், மகிந்த ராஜபக்ஷவும் அவர்களுக்காக தீபம் ஏற்றினார்கள்..
அங்கு மரணித்த மாவீரர்களும், மக்களும் எதுவுமே செய்யாது அமைதியாகக் கிடந்தார்கள்…கட்டாயமாக திணிக்கப்படும் தூபிகளும் தீபங்களும் மௌனத்தின் முன் பெறுமதியற்றவை என்ற செய்தியை அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்..
ஆனால் இதை அறியாத மக்களோ.. ஏன் இந்த மௌனம் என்று கேட்டார்கள்…
ஆயுதங்கள் ஏன் மௌனிக்க வேண்டும் ? பலர் அலப்பாரித்தார்கள்…
ஆனால் அந்த மௌனப் போரின் உள்ளார்ந்த பெறுமதியைப் பார்க்க மறந்தவர்களே அதிகத்திலும் அதிகம்..
ஆம்..
உலகில் எவராலுமே அழிக்க முடியாதது சலனமற்ற மௌனமான அமைதிதான்..
மாவீரரும் மரணித்த மக்களும் இந்தப் பிரபஞ்சத்தில் தனித்து விடப்பட்டவர்கள் அல்ல என்பது அந்த மௌனத்தின் செய்தியாகும்..
ஆயுதப்போரை விட ஆபத்தானது மௌனப் போர்.. அந்தப் போரை வென்றவர்கள் உலகில் எவரும் இல்லை..
றிச்சாட் ஈ பேட் என்பவன் தனியாகவே தென் துருவத்திற்கு ஓடி உலகிற்கு சொன்ன அற்புதமான செய்தியின் கருமணியே அதுதான்.
உறைந்துபோன தென்துருவ மௌனத்தில்தான் உண்மையின் ஓசை கேட்கிறது என்றான் அவன்..
அதோ…
யாருமற்ற தென் துருவம்போல கிடக்கும் முள்ளி வாய்க்காலில் ஒரு காற்று மௌனமாக வீசுகிறது..
தந்திக்கம்பிகளின் அதிர்வுபோல மெல்லிய ஓசை கேட்கிறது..
அந்த மௌன மொழியே நிலையான இன்பம்… அதில் யாதொரு குழப்பங்களும் இல்லை..
பிரபஞ்சத்தின் கணக்கு பிழையானதல்ல..
அதுபோல மௌனித்துக் கிடக்கும் மாவீரர் கனவும் பிழையானதல்ல..
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை என்பார் கவிஞர்..
அதுபோல பிரபஞ்சத்தின் ஓரங்கமாகிவிட்ட மாவீரரின் மௌன மொழிக்கும் விலையேதுமில்லை..
விலையற்ற அந்த மௌனமே நம் விடிவின் போர்க்கருவி…
அதோ முள்ளிவாய்க்காலில் ஒரு கிழிந்துபோன பாதணி அமைதியாகக் கிடக்கிறது.. நேற்று அதை அணிந்திருந்த புலி வீரனை இன்று காணவில்லை..
ஆனால் அவனுடைய கிழிந்த சப்பாத்தை தலையில் ஏந்தியபடி பெருமையுடன் சுழலுகிறது பூமி..
ஆரவாரமான போரைக் கவனித்தது போல ஆரவாரமற்ற மௌனத்தையும் அவதானித்தால் அதில் ஆயிரம் அர்த்தங்கள் தெரியும்..
ஓ மரணித்த வீரனே உன் பாதணிகளை எனக்குத்தா !
ஆக்கம் கி.செ.துரை..
அலைகள் மாவீரர்நாள் சிறப்பு மலருக்காக.. 27.11.2010
————————————
பறக்கும் தட்டுக்களும் மாவீரரின் ஒளியும்..
இரண்டாம் உலகப்போர் முடிவடையும் தறுவாயில் பிரிட்டனின் பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில் கடும் கவலை தோய்ந்த முகத்துடனேயே காணப்பட்டார். வெற்றியின் சீட்டுக்கட்டுக்கள் அவருடைய பக்கமாக சரியத் தொடங்கிவிட்டாலும் கூட அவரால் மகிழ்ச்சியடைய முடியவில்லை. காரணம் என்ன..?
பிரட்டனின் றோயல் போர் விமான சேவைப்பிரிவு அருக்கு கொடுத்துக் கொண்டிருந்த குழப்பமான தகவல்தான் அதற்குக் காரணம். மோசமான மனிதத்தன்மையற்ற, ஈவிரக்கமில்லாத குண்டு வீச்சுக்களை பிரிட்டன் விமானங்கள் நடாத்திய போதெல்லாம் பறக்கும் தட்டுக்களின் கடுமையான அவதானிப்புக்கள் இருப்பதாக றோயல் விமானப்படையினர் அறிவித்துக் கொண்டே இருந்தனர்..
கேட்கப்பார்க்க யாருமே இல்லை அனைத்து கொலைகளையும் லைசென்ஸ் இல்லாமலே நாம் நடத்திவிடலாம் என்று அவர் கருதியபோது, பறக்கும் தட்டுக்களின் அவதானிப்புக்களும், குறிப்பெடுப்புக்களும் நடந்து கொண்டே இருந்தன.. நாம் மக்களை ஏமாற்றிவிட முடியும், உலகத்தின் கண்களில் மண்ணைத் தூவிவிட முடியும் என்று அவர் கருதியது தப்பு என்பதை புரிந்துகொண்ட இறுதித் தருணங்கள்.
நமக்கு மேற்பட்ட ஒரு சக்தியின் அவதானிப்பை நம்மால் கடந்துவிட முடியாது, ஒவ்வொரு நொடியும் நாம் கண்காணிக்கப்படுகிறோம் என்பதை உணர்ந்து கவலையுடன் இருந்தார். தாம் செய்த போரியல் அநீதிகள் அத்தனையும் கண்காணிக்கப்படுதை பிரிட்டன் உளவுப் பிரிவும், வின்ஸ்டன் சேர்ச்சிலும் தெளிவாக அறிந்திருந்தனர். ஆதாரம் : சென்ற மாதம் வெளியான வரலாறு டேனிஸ் சஞ்சிகை
போரில் தாம் செய்த கொடும் செயல்களையும், தடய அழிப்புக்களையும் வெற்றியால் மறைத்துவிட முடியாது என்பதையும், யாவும் கடந்த கண்காணிப்பொன்று இருப்பதையும் அவர்கள் உணர்ந்து கொண்ட சமயம் அது. இதுபோல இன்னொரு சம்பவமும் அமெரிக்காவில் நடைபெற்றதாக இலுஸ்ரய விதின்ஸ்கேப் என்ற டேனிஸ் அறிவியல் சஞ்சிகை எழுதியுள்ளது.
அமெரிக்காவில் அணு குண்டை உருவாக்கும் பணிக்கு தலைமை தாங்கியவர் ஓபன்ஹீமர் என்ற விஞ்ஞானியாகும். இவருடைய கனவில் இனம்புரியாத சக்தி ஒன்று வந்து அதை நிறுத்தும்படி அவரிடம் மன்றாடியிருக்கிறது. அவரும் அதை ஏற்றுக் கொண்டு திட்டத்தில் இருந்து விலகினார்.
அதனால் கோபமடைந்த அமெரிக்கர்கள் அவரை ரஸ்ய உளவாளி என்று அவமானப்படுத்தி துரோகிப் பட்டமும் சூட்டினார்கள். அணுகுண்டு வெடிப்பு தொடர்பான கூட்டத்தில் ஓபன்ஹீமர் பேசும்போது உலக விஞ்ஞானம் தனது கரங்களில் இரத்தத்தை பூசியபடி நிற்கிறது என்று துணிவோடு குறிப்பிட்டார்.
ஆம்.. ! இனம்புரியாத ஒரு சக்தி..
அமெரிக்கர்களைக் கண்காணிக்கிறது என்பதைத் தெளிவாக உணர்ந்து அவர் விலகிக் கொண்டார்..
ஆகவேதான் புதுமாத்தளன் படுகொலைகளின் தடயங்களை அழித்தாலும், அங்கு நடைபெற்ற இன அழிப்புப் போருக்கு, வெறும் வரட்டுத்தனமான பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று போலி நியாயம் கற்பித்தாலும் உண்மை என்பது ஒளிபோல ஊடுருவிக்கொண்டே இருக்கும். நடந்தவைகளை எவரும் மறைத்துவிட இயலாது, ஊழில் பெருவலி யாதுள என்று வள்ளுவர் கூறுவார்..
மண்ணுக்குள் போகும்வரைதான் மனிதனை கொல்ல முடியும்.. மண்ணுக்குள் போன பின் அவனுடைய ஆத்மா வெற்றிபெற முடியாத ஒன்றாக மாறும். அதைப்போல வலிய சக்தி உலகில் எங்குமே கிடையாது. ஆகவேதான் ஊழில் பெருவலி யாதுள என்று கூறுகிறார் வள்ளுவர்..
இன்று மாவீரர்கள் துயிலும் இல்லங்களை அழித்து, அதற்கு மேல் உதைபந்தாட்டம் விளையாடுகிறது சிறீலங்கா இராணுவம். உண்மைகளை உதைபந்தாட்டங்களால் மறைத்துவிட முடியாது. புதுமாத்தளன் போர் முடிவுக்குப் பின்னர் மாவீரரின் ஒளி மறுபுறமாக திரும்ப ஆரம்பிக்கிறது.
ஒளி வளையும் அது புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வரும் என்ற கருத்தை உலகத்திற்கு சொன்னவர் அணுகுண்டை உருவாக்கும் ஆரம்ப விதியை சொன்ன ஐன்ஸ்டைன்தான். அதனால்தான் அவர் அரசியல் பதவிகள் எதையும் ஏற்க அடியோடு மறுத்தார்.
மரணித்த வீரர்களை ஏமாற்றிவிட்டதாக நினைப்பதே உலகத்தின் முட்டாள்தனங்களில் எல்லாம் பெரிய முட்டாள்தனம் என்பது இந்தச் சம்பவங்களின் தொகுப்பாகும்..
மாவீர ஒளி புதுமாத்தளனுக்கு பின் பழைய பாதையில் இருந்து திரும்பி மெல்ல வளைகிறது…
ஒளி வளைந்தால் அதன் பொருளென்ன.. ஒளியை விரட்டிய இருள் விலகப்போகிறது என்பதாகும்…
சூரியன் ஒருகாலமும் மறைந்துவிடுவதில்லை… அது மறுபடியும் வரும் என்பதே இதற்கான எளிய விளக்கமாகும்…
மாவீரர்களின் ஒளியே என்னை வழி நடாத்தி செல்கிறது என்று தலைவர் வே. பிரபாகரன் கூறுவார்…
ஆம் ! வழி நடாத்தும் ஒளி ஒரு காலமும் விழி மூடிக்கிடப்பதில்லை.. பிரிட்டனை அவதானித்த பறக்கும் தட்டுக்கள் போல அது அவதானிக்கிறது…
ஆம் ! அனைத்தும் பதியப்பட்டுவிட்டதாகக் கருதி நம்பிக்கையுடன் மாவீரரை அஞ்சலியுங்கள்..
ஆக்கம் கி.செ.துரை..
அலைகள் மாவீரர்நாள் சிறப்பு மலருக்காக.. 27.11.2010



0 Responses to ரிச்சாட் ஈ பேட்டின் அனுபவங்களும் ஒரு மரணித்த மாவீரனின் பாதணியும்..