Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மாவீரர் நாள் சிறப்புச் சிறுகதை..

பதிந்தவர்: ஈழப்பிரியா 28 November 2010

பிள்ளையார் கோயிலில் இரண்டு தீபங்கள்

மாவீரர்நாள் வந்துவிட்டது..

அந்த நாட்கள் எவ்வளவு எழுச்சியானவை.. புனிதமானவை

கோபுரத்தில் ஏறி தோரணங்கள் கட்டி.. மாவீரர்புகழ்பாடிய நாட்கள் அவனுடைய மனதில் ஒரு சுற்று வந்து போயின

தேசிய எழுச்சிவானத்தில் இருந்து வான்படை மலர்மாரி பொழிய ஆகாயத்தைப் பார்த்து சிரித்த சிரிப்பு..

ஆலயங்களில் மணியோசை

தீபங்களின் ஊர்கோலம்..

மரணித்தவனை மரியாதைப்படுத்திய இனம் இதுபோல உலகில் எங்காவது உண்டா.. என்று மனம் கேட்கும்..

இன்று

நாம் பிறந்த மண்ணில் நமது மாவீரர்களுக்கு ஒரு விளக்கு வைக்கத் தடையா… ?

சிஙகத்தின் கொலைக் கண்களுக்கு அஞ்சி மறுகிப் போகும் மான்களாக ஓடும் மக்களை பரிதாபத்துடன் பார்த்துக் கொண்டான்..

கண்களில் ஒரு சொட்டுக் கண்ணீர்.. கைகளால் உருட்டும் வண்டியின் சில்லுகளை உருட்டியபடியே மெல்ல ஊர்ந்தான்

அருகில் இருந்த மாவீரர் துயிலுமில்லம் ஏதுமற்ற கட்டாந் தரையாகக் கிடப்பதைப் பார்க்க விரும்பாது முகத்தை மறுபக்கமாக திருப்பிக் கொண்டான்..

இரண்டு கால்களையும் போரில் இழந்து, சிறையில் கிடந்து மறுபடியும் திரும்பியிருக்கும் போராளியான அவனுக்கு அந்த ஊரில் அன்றிருந்த மதிப்பு இன்றில்லை..

தீபண்ணே.. தீபண்ணே என்று ஓடி வந்தவர்கள் அவனைப் பார்த்ததும் விலகி விலகி ஓடுவதைப் போன்ற உணர்வு..

அவனோடு யாரெல்லாம் பழகுகிறார்கள் என்பதை ஒற்றர்கள் அவதானிப்பதும் தெரிந்தது.. தன்னால் மற்றவர்களுக்கு தொல்லை வரக்கூடாது என்பதற்காக அவனும் யாரிடமும் போவதில்லை..

தூரத்தே அரச மரத்தடிப் பிள்ளையார் கோயில் தெரிந்தது.. அவர்தான் இப்போது அவனுக்கு ஒரே துணை..

வழமையாக பிள்ளையாருக்கு விளக்கு வைப்பதுபோல மாவீரருக்கு ஒரு விளக்கை வைத்துவிட வேண்டும் என்று மனது துடியாய் துடித்தது..

சென்றி போயின்ரில் நின்ற இராணுத்தினன் அவனுடைய கால்களையே கூர்ந்து பார்த்தான்..

இரண்டு கால்களும் பறிபோன இவனால் தனக்கு ஆபத்து இல்லை என்று உறுதி செய்து கொள்கிறான்.. அவன் துப்பாக்கியை சற்றுத் தளர்த்துவதில் அது தெரிகிறது..

ஒரு வருடம்தான்..

எத்தனை மாற்றம்மக்கள் மாவீரரை மறந்துவிட்டார்களாஇல்லை யாழ்ப்பாணத்தில் இருக்கும் இராணுவத்திற்கு பயப்படுகிறார்களா..?

கார்த்தினை 27 கோயிலில் விளக்கேற்றினாலே இராணுவமும், உளவுப்பிரிவும் சந்தேககிக்கும் என்று பயந்து யாருமே கோயிலுக்கும் வரவில்லை..

பிள்ளையார் கோயிலும் வெறிச்சோடிக் கிடந்தது..

பிள்ளையாரே என்னை மட்டும் ஏன் இரண்டு கால்களையும் பறித்துவிட்டு மறுபடியும் இந்த ஊருக்கே திருப்பி அனுப்பியிருக்கிறாய்.. நான் இனி எதைப் பார்க்க வேண்டும்.. என்று ஆசைப்படுகிறாய்இனி இங்கு எனக்கு என்ன கணக்கு மீதம் வைத்திருக்கிறாய்..

இரு கரங்களை கூப்பியபடியே மனதால் பிள்ளையாருடன் பேசிக் கொண்டான்..

அவன் போராளியாகவும் அந்த ஊருக்கு இயக்கத்தின் தலைமைப் பொறுப்பாளனாகவும் இருந்தபோது அவனைப் பார்த்த பிள்ளையார் இப்போதும் அதே அரச மரத்தடியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார்..

கீழே ஒரு செவ்வரத்தம் பூ கிடந்தது.. வழமையாக பத்துப்பேராவது கூடி நிற்கும் அரசமரத்தடி பிள்ளையார் இன்று தனிமையில் இருந்தார்..

மாவீரர்நாள்…. நிசப்பதமான அமைதி

நான்கு திசைகளும் பார்க்கிறான்யாருமே அவனை அவதானிக்கவில்லை.. தீப்பெட்டியை உரசி தீபத்தை ஏற்ற சடக்கென அடிக்கிறான்

, அண்ணே.. ! , பின்னாலிருந்து ஒரு குரல்..

திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்கிறான் கன்னங்கரேலென.. சொக்குகள் ஒட்டி, நாலு முழ வேஷ்டி, சேட்டுடன் ஒருவன் நிற்கிறான்..

, வந்தாலும் வந்திடுவாங்கள் கெதியா விளக்கை ஏத்துங்கோ.., சட்டென விளக்கைக் கொழுத்துகிறான்.. தீபம் எரிகிறது.. வாங்கி பிள்ளையாரின் முன்னால் வைக்கிறான்..
பின் தானும் அவசர அவசரமாக ஒரு விளக்கை ஏற்றி அதன் பக்கத்தில் வைக்கிறான்..

இரண்டே இரண்டு தீபங்கள் அந்த இளம் இருளில் வேல்போல குத்திட்டு நிற்கின்றன.. அதில் ஏதோ சில செய்திகள்

, தம்பி.. நீ… ? , தீபன் அவனைப் பார்த்தபடி தடுமாற்றத்துடன் கேட்டான்..

, யாழ்ப்பாணம் ஆஸ்ப்பத்திரியடி கதிரேசு.. ! ,

, கதிரேசெண்டு .. கேள்விப்பட்ட பேராக்கிடக்கு.. ! ,

, பழைய திருடன்.. ! ,

தீபனுக்கு நினைவுகள் மறுபடியும் சுழன்று வந்தன.. தோடம்பழத்தை களவெடுத்த குற்றத்துக்காக திருடன் என்று எழுதி யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரிக்கு முன்னால் போஸ்ரோடு கட்டிவைத்த கதிரேசு என்று தெரிந்தது..

, அண்ணே என்னை அவ்வளவு சீக்கிரம் மறந்திட்டியளோ.. , கதிரேசுவின் கண்களில் ஈரம் குரலில் ஏழ்மை கலந்த விரக்தியின் தழுதழுப்பு..

, கதிரேசு கிட்டவாடா.. அழாதையடாஅண்டைக்குப் பிறகு உன்னை நான் எங்கேயுமே காண இல்லை.. எங்கையடா போயிருந்தனீ.. ,

, அண்ணே.. அண்டைக்கு பசியிலதான் ஒரு தோடம்பழம் களவெடுத்தனான்.. நீங்க சூட்டின திருடன் பட்டத்தோட என்னால இந்த ஊரில வாழ முடியாமல் போச்சுதண்ணே.. இண்டைக்கு உங்களுக்கு பக்கத்தில வராமல் ஓடுற சனம் எனக்கும் பக்கத்தில வராமல் ஓடிச்சு.. ஊரைவிட்டு ஓடிப்போய் பிச்சை எடுத்து திரிஞ்சு.. போன மாசம் அப்பர் செத்து கொள்வி வைக்க மறுபடி வந்தனான்..,

தீபன் வெகு நேரம் மௌனமாகவே அவன் விழிகளையே பார்த்தபடி இருந்தான்

, கதிரேசு.. எனக்கு இப்ப கால்கள் இல்லை.. உன்னாலை இப்ப என்ன வேணுமெண்டாலும் செய்ய ஏலும்.. எனக்கு நாலு அறை அறையாமல் ஏன் என்னை அண்ணே.. எண்டுறாய்.., தளதளத்த குரலில் தீபன் கேட்டான்..

, அண்ணே.. முடிஞ்சால் என்ரை உயிருள்ளவரை உங்களுக்கு உதவி செய்தே என்ரை வாழ்க்கையை முடிக்க ஒரு வாய்ப்புத் தரவேணும்.. ,

, கதிரேசு நீ ஏன் உதவி செய்ய வேணும்.. ? , தீபனிடம் புதுமாத்தளனில் சந்தித்ததைவிட பெரிய குழப்பம்..

, அண்டைக்கு திருடன் பட்டத்தோட யாழ்ப்பாணம் ஆஸ்ப்பத்திரிக்கு முன்னால தொங்கினபோது ஒரு நாளில நான் இந்த ஊரைப் படிச்சன்.. பிறகு ஒரு திருடன் கூட இருக்கக் கூடதெண்டு பாடுபட்ட உங்களுக்கு பயங்கரவாதிப் பட்டம் கட்டி உலகத்து திருடரெல்லாம் சூழ்ந்து நிண்டபோது நான் உலகத்தைப் படிச்சன்,

, விளங்கேல்லையடா .. ! ,

, திருடரின் உலகத்தில தியாகிகளுக்கு இடமில்லை அண்ணே.. வன்னியில எரிஞ்சுகிடக்கிற சாம்பல் மேட்டைப் பாருங்கோ விளங்கும்.. ,

, சொல்லடா உன்னட்டை என்னம் கேக்க வேணும் போல இருக்கு.. ,

, நான் படிக்காதவன்.. கள்ளன்.. ,

, இல்லை .. சொல்லு.. ,

, அண்டைக்கு இயேசுநாதரை கல்வாரி மலையில வைத்து சிலுவையில் அறைந்தபோது பக்கத்திலை இரண்டு கள்ளர்களையும் சிலுவையில் அறைஞ்சிருந்தாங்கள்.. இயேசுநாதரையும் அருகில் இருந்த கள்ளரையும் சனம் ஒண்டாத்தான் பாத்திச்சு.. இதுதான் அண்ணே உலகம்.. ,

, அதுக்கு.. ,

, நாங்க ரெண்டுபேரும் இப்ப கல்வாரி மலையில நிக்கிறம்.. இதில என்னண்ணே பழிவாங்கல்.. ,

பிள்ளையார் கோயிலில் இரண்டு தீபங்கள்

, கதிரேசு என்னை மன்னிச்சிடடா… ,

, அண்ணே பெரிய வார்த்தை சொல்லாதேயுங்கோ.. இந்த இனத்துக்காக இரண்டு கால்களையும் கொடுத்திட்டு நிக்கிறீங்கள்.. , கதிரேசுவின் கண்களில் நீர் தாரைதாரையாக வடிகிறது. தீபன் அவனைக் கட்டித் தழுவுகிறான்..

, கதிரேசு கடைசியாக ஒண்டு சொல்லட்டே .. ,

, செல்லுங்கோ.. ,

, உனக்கு இவ்வளவு அவமானத்தை செய்தம் இத்தினைக்குப் பிறகும் இந்த இனத்தைக் காட்டிக் குடுக்காம கள்ளன் பட்டத்தோட, கிழிஞ்ச வேட்டியோட, ஊர்பாக்க பகட்டுக்கு மாவீரர் தீபம் ஏற்றாமல் ஒதுக்குப்புறமாக நின்று அந்தத் தியாகிகளுக்கு விளக்கு வைச்சியே.. நீதான்டா மனிசன்… ,

சடசடவென மோட்டார் சைக்கிள் ஒன்று வரும் சத்தம்..

கதிரேசு மடியில் மறைத்து வைத்திருந்த புலிக்கொடியை பிள்ளையாரின் கையில் செருகிவிட்டு தீபனின் வண்டிலை தள்ளியபடியே இருளில் மறைகிறான்..

இரண்டு தீபங்களிலும் காலப்பிரபஞ்சத்தின் பேரொளி

கி.செ.துரை.
மாவீரர்நாள் கார்த்திகை 27 – 2010

0 Responses to மாவீரர் நாள் சிறப்புச் சிறுகதை..

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com