Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வழமை போன்றே இம்முறையும் அம்பாறை மாவட்டத்தில் மாவீரர் தினத்துக்கான அழைப்புக்கள் விடுக்கப்பட்டிருப்பதால் அரசாங்கம் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளது.

அம்பாறையின் திருக்கோவில் பிரதேசத்தில் மாவீரர் தினத்துக்கான அழைப்பு விடுக்கும் போஸ்டர்கள் இன்று அதிகாலை படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன் காரணமாக திகைப்புக்குள்ளாகிய படைத்தரப்பு தற்போது அப்பிரதேசத்தில் கடும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிய முடிகின்றது.

புலிகளின் தலைவர் உயிருடன் இருக்கின்றாரா, இல்லையா என்ற விவாதங்களுக்கப்பால் இம்முறை உலகெங்கும் மாவீரர் தின நிகழ்வுகள் களைகட்டியுள்ளன. புலிகளின் பலமான செயற்பாடு இருந்த காலத்தில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகளையொத்ததாக இம்முறையும் அனுஷ்டானங்கள் பரவலாக நடைபெறுகின்றன.

வரலாற்றில் முதல் தடவையாக மத்திய கிழக்கிலும் கூட இம்முறை மாவீரர் தின நிகழ்வுகள் தமிழ், முஸ்லிம் வாலிபர்களால் மட்டுமன்றி மத்திய கிழக்கு மக்களின் பங்களிப்புடனும் அனுஷ்டிக்கப்படுகின்றன.

இவ்வாறான பின்புலத்தில் இலங்கையின் எந்தப் பாகத்திலும் மாவீரர் தினத்தையொட்டிய சிறு நிகழ்வுகள் கூட நடந்து விடக்கூடாது என்பதில் அரசாங்கம் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு அவதானித்துக் கொண்டிருந்தது. கடந்த ஒரு மாதகாலமாக படைத்தரப்பும் உச்சகட்ட உசார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

ஆயினும் இலங்கையில் பல பாகங்களில் மாவீரர் நாள் தொடர்பான நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், அதன் ஒரு கட்டமாக அம்பாறையிலும் மாவீரர் தினத்துக்குரிய அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அவை தொடர்பான போஸ்டர்கள் அச்சிடப்பட்ட நிலையில் இன்று அதிகாலை அம்பாறையில் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆயினும் அதனை அச்சிட்டவர்கள் மற்றும் அச்சிட்ட இடம் தொடர்பான எந்த தகவலையும் பொலிசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அம்பாறையின் திருக்கோயில் பிரதேசமானது புலிகளின் கடும் எதிர்ப்பாளரும், தமிழீழ உணர்வுள்ள மக்களை வாட்டி வதைப்பதில் பெயர் பெற்றவருமான இனியபாரதியின் கோட்டை என வர்ணிக்கப்படும் நிலையில் அங்கு புலிகளின் போஸ்டர்கள் காணப்பட்டமையானது அரசாங்கத்தை மட்டுமன்றி அவரையும் கலக்கியுள்ளது.

அண்மையில் கூட யாழ். தம்பாட்டியில் புலிக்கொடி பறக்க விடப்பட்டிருந்தது. இவ்வாறான நிகழ்வுகள் காரணமாக அரசாங்கம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. கடுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு பாதுகாப்புத் தரப்பினரை பணித்துள்ளது.

திருக்கோயில் பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட மாவீரர் தின அழைப்புக்கான போஸ்டர்கள் தற்போதைக்கு அம்பாறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரஞ்சித் வீரசூரியவின் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்வின் செய்தியாளர் தெரிவித்திருக்கின்றார்.

அத்துடன், தாழங்குடா கல்விக்கல்லூரியிலும் மாவீரர் தினத்தை குறிக்கும் துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டிருந்தன.

மட்டக்களப்பு தாழங்குடாவில் உள்ள கல்விக்கல்லூரியில் இன்று காலை மாவீரர் தினத்தை குறிக்கும் துண்டுப்பிரசுரங்கள் காணப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதாகவும், இதனால் கல்லூரியில் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to தென் தமிழீழம் அம்பாறையில் மாவீரர் தினத்துக்கு அழைப்பு: அரசாங்கம் அதிர்ச்சி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com