Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஒரு நாட்டில் மிகவும் சக்தி வாய்ந்த விடயமாக இருப்பது ஊடகத்துறையாகும்.

ஊடகத்துறையானது ஒரு நாட்டை நல்ல வழியில் அல்லது. கெட்டவழியில் இட்டுச் செல்கின்ற ஒரு சக்தியாக இருக்கின்றது. இலங்கையில் ஒரு சுதந்திரமான ஊடகம் இருந்ததா என்பது தொடர்பில் ஒரு கேள்விக்குறியே இருக்கின்றது.ஏனெனில் நானும் ஓர் ஊடகவியலாளராக கடமையாற்றிவிட்டுத்தான் தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினராக இச்சபைக்கு வந்திருக்கின்றேன்.

துரதிஷ்டவசமாக எமது நாட்டில் 1990 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி ரிச்சட் சொய்ஸா தொடக்கம் 2009 மார்ச் மாதம் 6 ஆம் திகதி சதிமதன் வரையும் 41 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியேந்திரன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வரவுசெலவுதிட்ட விவாதத்தின்போது கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

படுகொலை செய்யப்பட்ட ஊகடவியலாளர்களில் 34 தமிழ் ஊடகவியலாளர்களும் 2 முஸ்லிம் ஊடகவியலாளர்களும் 5 சிங்கள ஊடகவியலாளர்களும் உள்ளடங்குகின்றார்கள். எமது நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை கொண்டுவந்ததற்குப் பிற்பாடுதான் இவர்கள் அனைவரும் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதை நான் இவ்விடத்திலே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.முன்னாள் ஜனாதிபதிகளான அமரர் ஆர். பிரேமதாஸவின் ஆட்சிக்காலத்தில் 2 ஊடகவியலாளர்களும் திருமதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க ஆட்சிக்காலத்தில் 13 ஊடகவியலாளர்களும் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் 26 ஊடகவியலாளர்களும் கொலைசெய்யப்பட்டு இருக்கின்றார்கள். உலகில் 1992 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் இன்றுவரை 580 ஊடகவியலாளர்கள் கொலைசெய்யப்பட்டு இருக்கின்றார்கள்.இத்தொகையுடன் எமது நாட்டில் கொலைசெய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப்பார்த்தால் அது 7.1 சதவீதமாக இருக்கின்றது.எனவே அதிகளவான ஊடகவியலாளர்கள் எமது சிறிய நாடான இலங்கையில் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.இலங்கையானது ஆசியாவின் ஆச்சரியம் என்ற விடயத்தில் இதையும் நான் சேர்த்துக்கொள்கின்றேன்.

தற்பொழுது ஓர் ஊடகம் சுதந்திரமாக இயங்குவதற்கென செய்தித் தணிக்கை செய்யப்படுவது இல்லை.எதனையும் எழுதலாம்.எவ்வாறும் எழுதலாம் என்று சொல்கின்றார்கள்.ஓர் ஊடகத்தில் வெளிவந்த செய்தி தொடர்பில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தாக்கப்படுமளவுக்கு இங்கு ஒரு சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. இதுதான் ஊடகத்தின் தன்மை.அதனுடைய சக்தி என்பதை நான் இவ்விடத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். பத்திரிகைத் தணிக்கை பல வருடங்களாக இருந்தபொழுதிலும்கூட தற்பொழுது அது இல்லையென்று கூறப்படுகின்றது.ஆனால்,அதற்கு மாற்றமாக வெவ்வேறு விதமாக வழிகளில் ஊடகவியலாளர்கள் எச்சரிக்கப்படுகின்றார்கள்.

அதாவது ஓர் ஊடகத்தில் ஊடகவியலாளன் ஒருவன் செய்தியை எழுதுகின்றபோது அல்லது உண்மையை வெளியிடுகின்றபோது அல்லது சுதந்திரமாக ஒரு கருத்தை வெளியிடுகின்ற போது அவன் தாக்கப்படுகின்றான் அல்லது காணாமல் போகின்றான் அல்லது சிறைகளில் அடைக்கப்படுகின்றான்.தற்பொழுது இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.அந்த வகையில் பாதிக்கப்பட்ட ஓர் ஊடகவியலாளரான திஸ்ஸநாயகத்தை நான் இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.சுதந்திரமாக தனது கருத்துகளை எழுதியதன் காரணமாக அவருக்கு என்ன நடந்தது என்பது பற்றி உலகிலுள்ள அனைவரும் அறிந்த விடயமே. ஆனால் தற்பொழுது செய்தியை எழுதுகின்ற ஆசிரியர் அல்லது செய்தியை வெளியிடுகின்ற ஊடகவியலாளர் கொலை செய்வதையும் அச்சுறுத்துவதையும் விடுத்து அந்த ஊடக நிறுவனங்களுக்கு எதிராகத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்ற நிலை காணப்படுகின்றது.உதாரணமாக "மஹாராஜா' நிறுவனம் தாக்கப்பட்டிருக்கின்றது.

யாழ்ப்பாணத்திலே இருக்கின்ற "உதயன்' பத்திரிகை நிறுவனம் பலமுறை தாக்கப்பட்டிருக்கின்றது. அன்று தினக்குரல் பத்திரிகைகூடத் தாக்கப்பட்டதாகச் செய்திவந்தது. ஆகவே இவ்வாறாக ஊடகவியலாளர்களுக்கு அப்பால் ஊடக நிறுவனங்கள் தாக்கப்படுகின்றபோது அந்த ஊடக நிறுவனங்களை நடத்துகின்ற உரிமையாளர்கள் பத்திரிகையாளர் மாநாடுகளுக்குச் செல்கின்ற தங்களுடைய ஊடகவியலாளர்களிடம் பத்திரிகை மாநாடுகளில் பொறுப்பான பிரச்சினையாகக்கூடிய ஒரு கேள்வியையும் கேட்காமல் அவர்கள் சொல்வதைக் கிளிப்பிள்ளைபோல் கேட்டுக்கொண்டு வந்து எங்களுடைய பத்திரிகைக்கு எழுதுங்கள் என்று சொல்லிக் கொடுக்கின்ற ஒரு நிலைமை இன்றுள்ளது.அதனால் உண்மைத்தன்மையான செய்திகள் வெளியிட முடியாமல் ஊடகவியலாளர்கள் இன்று திண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

கருத்தைச் சுதந்திரமாகத் தீர்மானிப்பதற்கும் வெளியிடுவதற்கும் ஒவ்வொரு பிரஜைக்கும் உரிமை உண்டு.கட்டுப்பாடுகளின்றி தேச எல்லையைக் கடந்து எந்தவோர் ஊடகத்தின் மூலமாகவும் தகவல்களைத் திரட்டுவதற்கும் பெற்றுக் கொள்வதற்கும் அதனை விநியோகிப்பதற்கும் ஒருவருக்கு உரிமை உண்டு என்று 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் திகதி .நா. சபை வெளியிட்ட மனித உரிமைகள் தொடர்பான நம்பிக்கைப் பிரகடனத்தின் 10 ஆவது சரத்தின் 11 ஆவது பிரிவில் மிகவும் தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றது. இது .நா. சபையின் மனித உரிமை சாசனத்திலும் சேர்க்கப்பட்டிருக்கின்றது. இதில் இலங்கையும் கைச்சாத்திட்டிருக்கின்றது. ஆனால்,இந்த விடயத்தை இலங்கையில் பேணிப்பாதுகாக்கின்றார்களா என்பதை நாங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

இன்று ஊடகச் சுதந்திரத்தைப் பற்றி பேசுகின்றோம். ஊடகவியலாளர்களுக்குப் பல சலுகைகள் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டிருக்கின்றது.ஆனால், 2007 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் ஊடகவியலாளர்களுக்காகப் பணம் ஒதுக்கப்பட்டபோதிலும் அதன் மூலம் பல ஊடகவியலாளர்கள் கடன் அட்டையில்தான் உதவி பெற்றார்களே தவிர மானிய அடிப்படையில் அல்ல என்கின்ற ஒரு செய்தி இருக்கின்றது. குறிப்பாக பிராந்திய செய்தியாளர்கள் இதிலே புறக்கணிக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்த முறை வரவுசெலவுத்திட்டத்தில் கூட 50 மில்லியன் ரூபா ஊடகத்துறையிலே பணியாற்றுகின்ற ஊடகவியலாளர்களுக்கு ஒதுக்கப்பட்டாலும் கூட என்னைப்பொறுத்தமட்டிலே பிராந்திய செய்தியாளர்களுக்கும் மானி அடிப்படையிலே குறித்த உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அண்மைக்காலத்தில் ஒரு வெட்கக்கேடான சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.அதாவது உலக செய்தி நிறுவனமான பி.பி.சி. ஊடகச் சேவை தனது செய்திகளை இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் எப்.எம். வானொலி ஊடாக வெளியிடவேண்டும் என்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துடன் கூட்டு ஒப்பந்தம் ஒன்று செய்திருக்கின்றது.ஆனால் இன்று என்ன நடக்கின்றது?கடந்த 27 ஆம் திகதி மாவீரர் தினம் செய்தியை அவர்கள் ஒலிபரப்புவார்கள் என்பதற்காக அன்று அது தடை செய்யப்பட்டிருக்கின்றது.இன்று உலகம் சுருங்கி இருக்கின்றது.ஊடகத்துறை வளர்ச்சியடைந்திருக்கின்றது. நிச்சயமாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக மட்டும்தான் பி.பி.சி.செய்தியைக் கேட்கவேண்டும் என்பதல்ல. ஒவ்வொரு வீட்டிலும் இணையத்தள வசதி இருக்கின்றது.முடிந்தால் அதன் மூலம் செய்திகளை அறியலாம். இவ்வாறு தன்னை ஒரு சுதந்திர ஊடகம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற ஓர் ஊடகம் இன்னோர் ஊடகச் செய்தியைத் தடை செய்து கொண்டிருக்கின்றது என்றால் எந்த வகையிலே நாங்கள் ஊடகச் சுதந்திரத்தைப் பற்றி பேச முடியும்? எந்த வகையிலே சமாதானத்தைப் பற்றிப்பேச முடியும் எனவே இதனையும் நான் ஆசியாவின் ஆச்சரியமாகத்தான் பார்க்க வேண்டியிருக்கின்றது.

இதைவிட செய்தித் தணிக்கை அமுல்செய்யப்படாதபோது சுதந்திரமாக எழுதப்படுகின்ற ஒரு செய்தி பிழையாக இருந்தால் அந்தச் செய்தியைத் திருத்தி மறுபிரசுரம் செய்யலாம்.யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யோகர் சுவாமி உண்மையை எழுது உண்மையாகவே எழுது,ஏசுவார்கள்,எரிப்பார்கள் என்றுதான் ஒரு காலத்திலே கூறியிருந்தார். யோகர்சுவாமி காலத்திலே ஏசுவதும் எரிப்பதும் இருந்ததன் காரணத்தினால்தான் அவர் உண்மையை எழுது உண்மையாகவே எழுது என்று கூறியிருந்தார்.ஆனால் இப்பொழுது உண்மையை எழுதினால் உண்மையாக எழுதினால் ஏசுவதுமல்ல எரிப்பதுமல்ல ஒன்றில் எழுதுபவர்கள் காணாமல் போகின்றார்கள் அல்லது சுடப்படுகின்றார்கள் அல்லது கொலை செய்யப்படுகின்றார்கள்.

இலங்கையிலே தொடர்ச்சியாக நடந்த யுத்தத்தின் காரணமாக நாட்டைவிட்டு 100 இற்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறார்கள். குறிப்பாக 50 இற்கும் மேற்பட்ட தமிழ் பேசுகின்ற பத்திரிகையாளர்கள் இங்கிருக்க முடியாமல் வெளிநாடுகளிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான ஒரு நிலையில்தான் இன்று இந்த ஊடக சுதந்திரம் இருக்கின்றது.உண்மையிலே ஊடகங்கள் சுதந்திரமாக இயங்கவேண்டுமென்றால் சுதந்திர தன்மையுடன் அவர்கள் எழுதுவதற்கான உத்தரவாதத்தை அமைச்சர் வழங்கவேண்டும்.வெறுமனே ஊடகங்கள் சுதந்திரமாக இயங்குகின்றன என்று கூறிக்கொண்டு அவர்களுக்கு அச்சுறுத்தலைக் கொடுத்துக்கொண்டிருந்தால் எப்படி அந்த ஊடகம் பொறுப்புவாய்ந்த ஊடகமாக செயற்பட முடியுமென்பதை நான் இவ்விடத்திலே கேட்க விரும்புகின்றேன்.

தபால் தொலைத்தொடர்புகள்,தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சுகள் பற்றியும் நான் ஒருசில வார்த்தைகள் கூறவேண்டியிருக்கின்றது.ஆதிகாலத்திலே தகவல் பரிமாற்றமானது புகையெழுப்புதல் ஒலியெழுப்புதல் போர்க்கருவிகளைப் பயன்படுத்தல் போன்றவற்றின் மூலமாக இருந்தது.13 ஆம் நூற்றாண்டிலே 2 ஆவது தபால்முறை உருவாக்கப்பட்டது.இப்பொழுது அந்த தபால் முறை மேலும் நவீன மயப்படுத்தப்பட்டு வளர்ச்சியடைந்து வருவதாக எனக்கு முன்பு பேசிய அமைச்சர் கூறியிருந்தார்.உண்மையிலே அது வரவேற்கத்தக்க விடயமாக இருக்கின்றது ஆனால் வடக்கு,கிழக்கிலே இருக்கின்ற பல தபால் நிலையங்களில் ஆளணிப் பற்றாக்குறை இருக்கின்றது. அதைவிட இப்பொழுது தொலைநகல் அனுப்புகின்ற வசதியும் அங்கு இல்லை.ஏனென்றால் இஈM தொலைபேசிகள் மூலமாக தொலைநகல் அனுப்ப முடியாமல் இருக்கின்றது.மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியில் இருந்த பல தபால் நிலையங்களில் மற்றும் கொக்கட்டிச்சோலை தபால் நிலையத்தில் ஏற்கனவே யுத்த காலத்துக்கு முன்பு இச்ஞடூஞு முறையான தொலைபேசி இணைப்பு மூலம் அந்த வசதி அங்கிருந்தது. இப்பொழுது அது இல்லை. இப்பொழுது கொக்கட்டிச்சோலை தபால் நிலையத்தில் கூட தொலைநகல் அனுப்ப முடியாமல் இருக்கின்றது.

சமாதான காலம் நெருங்கிக்கொண்டிருக்கின்றது.யுத்தமில்லாத ஒரு சூழ்நிலை இருந்து கொண்டிருக்கின்றது.ஆகவே அவ்வாறான தபால் நிலையங்களை இனங்கண்டு தொலைநகல் அனுப்பக்கூடிய தபால் நிலையங்களாக அவை மாற்றப்படவேண்டும். இதைவிட அதே கொக்கட்டிச்சோலை தபால் நிலையத்திலே 12 வருடங்களுக்கும் மேலாக பலர் 6 அல்லது 7 பேர் தற்காலிக அடிப்படையில் வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள்.நிரந்தர நியமனம் வழங்கப்படாத வேதனையில் அவர்கள் இருக்கின்றார்கள்.மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமல்ல யாழ்ப்பாணம்,வவுனியா,மன்னார் போன்ற வடக்கு,கிழக்கு மாவட்டங்களிலெல்லாம் இவ்வாறான நிலைமை இருக்கத்தான் செய்கின்றது.ஆகவே தற்காலிக அடிப்படையில் வேலை செய்கின்றவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கி அவர்களை சேவையில் உள்வாங்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

ஊடகத்தில் தொலைத்தொடர்பு என்பது மிகவும் முக்கிய ஒரு அம்சமாக இருக்கின்றது.இலங்கையைப் பொறுத்தமட்டிலே செய்தித்துறை மிகவும் விரைவாக வளர்ச்சியடைவதற்கு ஊடகங்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கு ஊடகவியலாளர்கள் அச்சமற்ற சூழ்நிலையில் செய்திகளை நேர்மையுடனும் நியாயத்துடனும் உண்மைத் தன்மையுடனும் வழங்குவதற்கான உத்தரவாதத்தை அரசாங்கம் வழங்கவேண்டும்.பல ஊடக நிறுவன உரிமையாளர்கள் அன்பாக அச்சுறுத்தப்படுவதைப் பார்க்கின்றோம். எவ்வாறென்றால் அவர்களை அழைத்து உணவு வழங்கி தேநீர் கொடுத்து நீங்கள் இந்த செய்தியை எழுதுங்களென்று அன்பாக உபசரிக்கின்ற ஒரு பழக்கமும் இலங்கையில் இருக்கின்றது.ஆயுதத்தால் அச்சுறுத்துவதற்குப் பதிலாக ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள் வரவழைத்து ஆலோசனை கூறி அவர்களை தங்கள் பக்கம் உள்வாங்குகின்ற ஒரு நடவடிக்கையும் இலங்கையில் இருக்கின்றது.இது ஊடக சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலான விடயமாக இருக்கின்றது.ஆகவே இவ்வாறான விடயங்களைக் கருத்திற்கொண்டு ஊடகங்கள் சுதந்திரமாகச் செயற்படுவதற்கு ஊடகவியலாளர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இருக்கக்கூடாது.

இறந்த அந்த 41 ஊடகவியலாளர்களின் குடும்ப உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படவேண்டும். ஏனென்றால் அவர்கள் ஊடகத்தையே நம்பியிருந்தார்கள். ஊடகவியலாளர்கள் எல்லோருமே பணம் படைத்தவர்களல்லர்.மிகவும் ஏழ்மை நிலையில் அவர்கள் இருக்கின்றார்கள்.

இன்று அந்த குடும்பங்கள் அலைந்துகொண்டிருக்கின்றன.நீங்கள் அவர்களுக்காக ஒரு சேபலாப திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்.ஏனென்றால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட படையினருக்கு நீங்கள் உதவி வழங்குகின்றீர்கள்.யுத்தம் காரணமாகத்தான் அந்த 41 பேரும் கொலை செய்யப்பட்டார்களெனப்பதை நீங்கள் ஒப்புக்கொள்ளவேண்டும்.ஆகவே, கொலைசெய்யப்பட்ட அந்த பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு நீங்கள் நிச்சயமாக சிறந்ததொரு நன்கொடைத் திட்டத்தினை செயற்படுத்த வேண்டுமென்று மீண்டும் கேட்டுக்கொள்கின்றேன்.

எதிர்வரும் 2011 ஆம் ஆண்டிலாவது ஊடகங்கள் சுதந்திரமாக இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றேன்.

தினக்குரல்

0 Responses to 34 தமிழ் ஊடகவியலாளர்கள் உட்பட 41 ஊடகவியலாளர்கள் இலங்கையில் படுகொலை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com