Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து ஒன்றரை வருடங்களாகி விட்டன. ஆனாலும் இறுதிப்போரின் போது இடம் பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் ஓய்ந்து விடவில்லை. நாளுக்கு நாள் இத்தகைய கோரிக்கைகள் வலுவடைந்து வருகின்றன.

அதுமட்டுமன்றி அவ்வப்போது புதிது புதிதாக வெளியாகும் நிழற்படங்களும், ஒளிப்பதிவுக் காட்சிகளும் அரசாங்கத்துக்குப் பெரும் நெருடிக்கடியைக் கொடுப்பதாக அமைந்துள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டன் சென்றிருந்தபோது சனல்4 தொலைக்காட்சி சுமார் 5 நிமிட ஒளிப்பதிவுக் காட்சி ஒன்றை கடந்த வாரம் ஒளிபரப்பியது.

அதில் நிர்வாணமான நிலையில் ஆண்களும், பெண்களும் சீருடையினரால் சுட்டுக் கொல்லப்படும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

கண்கள், கைகள் கட்டப்பட்ட நிலையில் தலையின் பின்புறமாக அவர்கள் துப்பாக்கியால் கொடூரமாகச் சுடப்படுகின்றனர்.

ஏற்கனவே வெளியான ஒளிப்பதிவுக் காட்சி ஒன்றின் தொடர்ச்சியாகவே இது கருதப்படுகிறது.

இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் ஒருவர் இசைப்பிரியா என்ற புலிகளின் ஊடகவியலாளர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏனையோர் அடையாளம் காணப்படவில்லை. ஆனாலும் அவர்களில் ஒருவர் புலிகள் தளபதிகளில் ஒருவரான கேணல் ரமேஸ் என்று கூறப்படுகிறது.

இந்த ஒளிப்பதிவுக் காட்சி ஒளிபரப்பானவுடனேயே அரசாங்கம் அதை முற்றாக மறுத்தது.

ஏற்கனவே இதுபற்றி விசாரணை நடத்தி இது போலியாகத் தயாரிக்கப்பட்டது என்று நிரூபித்துள்ளதாகவும் மீண்டும் மீண்டும் அதை ஒளிபரப்பி நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த சிலர் முனைவதாகவும் அரசாங்கம் கூறியது.

இந்த ஒளிப்பதிவுக் காட்சி போலியானது என்று அரசாங்கம் கூறியிருந்தாலும் ஏற்கனவே இதை ஆய்வு செய்த அமெரிக்க நிபுணர்கள் உண்மையானதே என்று கூறியிருந்தனர்.

ஒளிப்பதிவுக் காட்சி உண்மையோ பொய்யோ இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது மட்டும் உண்மை.

சர்வதேச மனிதஉரிமை அமைப்புகள், .நா ஆகியனவற்றிடம் இருந்து இதுபற்றிய கவலைகளும் கண்டனங்களும் வெளியாகியுள்ளன.

இந்த ஒளிப்பதிவுக் காட்சி தாம் .நா பொதுச்செயலர் நியமித்துள்ள சிறிலங்கா தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவுக்கு அனுப்பியுள்ளதாக சனல்4 தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

இதற்கிடையே மற்றொரு ஒளிப்பதிவுக் காட்சியும் கடந்த வாரம் வெளியாகியுள்ளது. அது ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரத்தைக் கொண்டது.

புலிகளின் மட்டக்களப்பு தளபதியாக இருந்த கேணல் ரமேஸ் விசாரணை செய்யப்படும் காட்சி இதில் பதிவாகியுள்ளது.

சிங்களத்தில் அவரிடம் கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதற்குப் பதிலளிக்க முடியாமல் அவர் திணறுகிறார். அச்சம் அவரது முகத்தில் தெளிவாகவே தெரிகிறது.

கேணல் ரமேஸ் கடந்த 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி அதிகாலையில் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன், புலித்தேவன் ஆகியோருடன் சண்டையில் கொல்லப்பட்டிருந்ததாக அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால் அவர்கள் வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த போதே சுட்டுக்கொல்லப்பட்டதாக புலிகள் தரப்பில் கூறப்பட்டது.

இதுதொடர்பான சர்ச்சையின் விளைவாக உயர்நீதிமன்றத்தில் கூட வழக்கு ஒன்று நடைபெற்று வருகிறது. ஆனால் சண்டையில் மரணமானதாக் கூறப்பட்ட கேணல் ரமேஸ் ஓலைக்குடிசை ஒன்றுக்குள் வைத்து விசாரிக்கப்படும் காட்சி வெளியாகியுள்ளது.

சண்டையில் மரணமானவர் எப்படி விசாரிக்கப்பட்டார் என்பது தான் இப்போது எழுந்துள்ள முக்கியமான கேள்வி. இந்த ஒளிப்பதிவு பற்றி இப்பத்தி எழுதப்படும் வரையில் அரசதரப்பில் இருந்து எந்தக் கருத்தும் வெளியாகவில்லை. ஆனால் அரசதரப்புக்கு இது மிகவும் சிக்கலை ஏற்படுத்தக் கூடியதொன்றாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஏற்கனவே வெள்ளைக்கொடியுடன் வந்தபோதே நடேசன், புலித்தேவன், ரமேஸ் போன்றோர் கொல்லப்பட்டதாக சர்வதேச அளவில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ரமேஸ் உயிருடன் விசாரிக்கப்படும் காட்சி வெளியாகியுள்ளது சிக்கலையே தோற்றுவிக்கும்.

ஏற்கனவே அரசாங்கம் கேணல் ரமேஸின் சடலத்தின் படத்தை வெளியிட்டிருந்தது. எனவே அவர் இப்போது உயிருடன் இல்லை என்பது தெளிவு. கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட பின்னர் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இதன் மூலம் எழுகின்றது.

ஏற்கனவே சரணடைந்த பின்னர் படையினரால் அழைத்துச் செல்லப்பட்ட புலிகளின் தலைவர்கள் யோகி, பாலகுமாரன், திலகர், புதுவை இரத்தினதுரை போன்றவர்களின் கதி என்னவென்று தெரியாதுள்ளது. இவர்களெல்லாம் போரில் கொல்லப்பட்டு விட்டதாக அரசாங்கம் கூறியது.

ஆனால் மே 18ம் திகதி சரணடைந்த இவர்களை படையினர் பஸ் ஒன்றில் ஏற்றிச் சென்றதை தாம் கண்டதாக இவர்களின் குடும்பத்தினர் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்திருந்தனர். இவையெல்லாம் அரசாங்கம் எதிர்பாராத வகையில் சந்திக்கும் நெருக்கடிகளாகவே உள்ளன.

இந்த நெருடிக்கடிகளின் பின்னணியில் தனியே புலிகள் ஆதரவு சக்திகள் மட்டும் இருக்கவில்லை என்று அரசாங்கம் வலுவாக நம்புகிறது.

அரசாங்கத்தையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் நெருக்கடிக்குள் சிக்க வைக்கும் நோக்கில் புலிகள் அல்லாத தரப்பினரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வெளியாகியுள்ள ஒளிப்பதிவுக் காட்சிகள் போலியானது என்று அரசாங்கம் கூறியுள்ளபோதும் இவை நிச்சயம் புலிகளால் எடுக்கப்பட்டவை அல்ல.

இராணுவத்தினரின் கையடக்கத் தொலைபேசிகளிலேயே எடுக்கப்பட்டவை. இராணுவத்தினர் ஊடாகவே இவை வெளியாகியிருக்கலாம். குறிப்பிட்டளவான படையினர் மட்டுமே இறுதிப் போர்க்களத்தில் பணியாற்றியிருந்தனர். அவர்கள் மூலமே இதுபோன்ற காட்சிகள் வெளியாகியிருக்கலாம்.

இவையெல்லாம் படைத்தரப்பில் அரசுக்கு ஆதரவானவர்கள் மட்டுமே உள்ளனர் என்ற கருத்தை உடைக்கச் செய்துவிட்டன. சர்வதேச அளவிலான போர்க்குற்ற விசாரணைகளை நடத்த ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று அரசாங்கம் திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

அதற்காகவே நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்து விசாரணை நடத்துவதாகவும் அரசாங்கம் கூறுகிறது. ஆனால் அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டின் மீது அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது.

புதிது புதிதாக வெளியாகும் ஒளிப்பதிவுக் காட்சிகள், நிழற்படங்கள் என்பன அரசின் மீதான அழுத்தங்களை அதிகப்படுத்தி வருகின்றன. இறுதிப்போரில் பங்குபற்றிய முக்கிய படைப்பிரிவுகளின் தளபதிகள் அனைவரும் இப்போது வெளிநாடுகளில் பணியாற்றுகின்றனர்.

மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா நியுயோர்க்கில் .நாவுக்கான பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக உள்ளார்.

மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் பெர்லினில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் துணைத் தூதுவராக உள்ளார்.

மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பணியாற்றுகிறார்.

இவர்களுக்கும் கூட இந்த ஒளிப்பதிவுக் காட்சிகளால் நெருக்கடிகள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த நெருடிக்கடியை அரசாங்கம் எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரிய விடயமாகியுள்ளது.

புதிய பல ஆதாரங்கள் வெளிவரும் போது அவற்றையெல்லாம் முறியடிப்பது அல்லது போலியானவை என்று நம்ப வைப்பதும் அரசாங்கத்துக்கு சிக்கலான காரியமாகவே இருக்கும்.
சர்வதேச ஆதரவுடன் புலிகளுக்கு எதிரான போரில் அரசாங்கம் இலகுவான வெற்றியைப் பெற்றது.

ஆனால் இறுதிப்போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து அரசாங்கத்தால் விடுபடுவது ஒன்றும் அவ்வளவு சுபலமான காரியமாக இருக்கும் போலத் தெரியவில்லை.

சுபத்ரா

0 Responses to சிறீலங்கா போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் புதிது புதிதாக வெளியாகும் ஆதாரங்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com