தமிழீழ மக்களின் தேசிய விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை, ஐரோப்பிய ஒன்றியம் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் இட்டு, அவ்வியக்கத்தை தடை செய்த முடிவை மீளாய்வு செய்து, அத்தடையை நீக்கக்கோரும் வெகுசனப் போராட்டத்தை, பிரான்ஸ் தமிழர் நடுவம், எதிர்வரும் புத்தாண்டு தினத்தில் இருந்து ஆரம்பிக்கவுள்ளது.இந்த வேண்டுகோள் தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியத்திடம் சமர்ப்பிக்கப்பட இருக்கும் மனுவிற்காக, இக்கோரிக்கைக்கு சார்பாகவும் ஆதரவாகவும், பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களிடமும், ஏனைய பிற இன மக்களிடமும், கையொப்பங்கள் சேகரிக்கப்பட இருக்கின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், ஆயுதங்களை மௌனித்து, முற்றிலும் சனநாயக அமைதிவழி நடவடிக்கைகளை ஆதரித்து நிற்கையில், ஐரோப்பிய ஒன்றியமும், பிரான்ஸ் அரசும், விடுதலைப் புலிகள் வரித்துக்கொண்டுள்ள அமைதிவழி, சனநாயக பூர்வ நிலைப்பாடுகளை ஊக்குவித்து, தமிழ் மக்களின் விடுதலைக்கு ஆதரவளிக்குமுகமாக, விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு, பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் சார்பில் கோரும் இந்தப் போராட்டத்தில், பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் யாவரும் பங்கேற்குமாறு வேண்டிக் கேட்டுக்கொள்ளுகின்றோம்.
இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்பிருந்தே, பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் கொடூரப் பிடியில் சிக்கித் தவிக்கும், தமிழீழ மக்களின் விடுதலைக்காக, கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அர்ப்பணிப்புக்களையும், பெரும் தியாகங்களையும் புரிந்துவரும் விடுதலைப் பேரியக்கமான தமிழீPழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்குவதன் மூலம், தமிழ்ச் சமூகம் தனது, அடையாளங்களுடன் சனநாயகவழிச் செயற்பாடுகளை ஒற்றுமையுடன் முன்னெடுக்க, ஊக்குவிப்பாய் இருக்கும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
எமது தேசிய விடுதலை இயக்கம் மீதான ‘பயங்கரவாத இயக்கம்’ என்ற அநீதியான குற்றச்சாட்டை, நீதியின் பேராலும், அமைதியின் பேராலும், சனநாயகத்தின் பேராலும், விடுதலையின் பேராலும் நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தையும் பிரான்ஸ் அரசையும் கோரும் எமது போராட்டத்தில் அனைத்துத் தமிழ் மக்களும், தமிழர் அமைப்புக்கள், சங்கங்கள் என்பன இதயசுத்தியுடன் கைகோர்க்குமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
தமிழர் நடுவம் - பிரான்ஸ்



0 Responses to பயங்கரவாதப் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தை நீக்கக்கோரும் வெகுசனப் போராட்டம்