Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இனவெறி பிடித்த சிறிலங்கா பவுத்த - சிங்கள அரசு சிங்கள தேசிய கீதத்தைத் தமிழர்கள் தொண்டைக்குள் தள்ள முடிவு செய்து அதனைத் திணிக்கத் தொடங்கியுள்ளது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பாதுகாப்பு நாள் கொண்டாட்டத்தில் கல்லூரி மாணவர்கள் சிங்களத்தில் தேசிய கீதம் பாட அரச அதிபர் இமெல்டா சுகுமார்....

தலைமையில் கல்வி அதிகாரிகள் மாணவர்களைக் கட்டாயப்படுத்தினார்கள். அதற்கான தீவிர பயிற்சியும் அவர்களால் அளிக்கப்பட்டது.

தேசிய பாதுகாப்பு நாளை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் வீரசிங்கம் மண்டபத்தில் 26.12.2010 நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தலைமை அமைச்சர் டி.எம்.ஜயரத்ன இலங்கையில் 5 இனங்களும் 4 மதங்களும் உள்ளன. எல்லோரும் இலங்கையர்களே எனற சம உணர்வோடு எல்லா மக்களும் வாழும் சூழலையே எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் பேசுகையில் "ஒவ்வொருவரும் தங்களுடைய மொழியைக் கலாச்சாரத்தை பின்பற்றுவதற்கான உரிமையுண்டு. அதுவே ஆட்சித்தலைவரின் நோக்கமும் குறிக்கோளும் ஆகும். நாம் அனைவரும் ஆசியாவில் ஆச்சரியத்திற்குரிய நாடாக இலங்கையை மாற்றியமைக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டார். இது சாத்தான் வேதம் ஓதின பழமொழியை நினைவு படுத்துகிறது.

சிங்கள தேசிய கீதத்தை தமிழ் மாணவர்கள் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தாலேயே வலிகாமம் வலய துணைக் கல்விப்பணிப்பாளர் மாணிக்கம் சிவலிங்கம் (வயது 54) உரும்பிராய் மேற்கில் உள்ள அவரது வீட்டில் வைத்து 26.12.2010 இரவு 10 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டுக் கொன்ற கொலையாளி தன்னை கள்வன் போன்று சித்திரித்துக் காட்டுவதற்காக சிவலிங்கத்தின் 13 அகவை மகளின் தோடுகளை மட்டும் பறித்துச் சென்றுள்ளான்.

ஆங்கிலப் புத்தாண்டில் பணிகளைத் தொடங்கும் போது அரச ஊழியர்கள் உறுதி மொழி செய்து பணிகளைத் தொடங்குமாறு பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு பணிப்புரை விட்டிருந்தது. அதற்கு அமைவாக கடந்த 3 ஆம் நாள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள அரச அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்றி, தேசிய கீதம் இசைத்து உறுதிமொழி எடுத்துக் கொண்டு பணிகள் தொடங்கப்பட்டன. யாழ் மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்கள் உதவி அரச அதிபர் பணிமனைகள் மற்றும் அரசு நிறுவனங்கள் பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் இந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. சுருக்கமாகச் சொன்னால் தமிழர்கள் போரில் தோற்கடிக்கப்பட்டு விட்டதால் அரச அலுவலர்கள் சிங்கள அரசு சொல்வதைச் செய்ய வேண்டும் என்பதே இதன் பொருளாகும்.

இதைத்தான் இலங்கையைக் கைப்பற்றிய ஆங்கிலேயரும் செய்தார்கள். அவர்கள் காலத்தில் யூனியன் யக் கொடி ஏற்றப்பட்டது. God Save the King பாடப்பட்டது. ஆங்கில மொழியில் அலுவல்கள் இடம்பெற்றன!

இப்போது இமெல்டா சுகுமார் ஒரு குண்டைப் போட்டுள்ளார். தமிழ் மாணவர்கள் சிங்களத்தில் தேசிய கீதம் பாட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாதான் தன்னை கட்டாயப் படுத்தியதாகச் சொல்கிறார். இதில் எந்த வியப்பும் இல்லை. அற நனைந்தவனுக்கு கூதல் என்ன? குளிர் என்ன? கடந்த இருபது ஆண்டுகளாக தமிழினத்தை ஒரு அமைச்சர் பதவிக்காக மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்று வயிறு வளர்த்து வருபவர் டக்ளஸ் தேவானந்தா. இனிமேல் தமிழில் தேசிய கீதம் பாடக் கூடாது என அமைச்சரவை முடிவு எடுத்த போது டக்லஸ் தேவானந்தா உடன் இருந்திருக்கிறார். ஆனால் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. சிங்கள அமைச்சர்கள் வாசுதேவ நாணயக்கார, ராஜித சேனாரத்ன இருவருமே அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஆனால் வெளியில் வந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முதலில் அப்படியொரு முடிவு எடுக்கப்படவில்லை என்று சொன்னார். பின்னர் சிங்கள தேசிய கீதம் பாடுவதில் தவறில்லை என்றார். இப்போது அவரே அதனை முன்னின்று கட்டாயப்படுத்தி பாட வைக்கிறார். அடிமைகளுக்கு எங்கேயாவது எசமான் சுதந்திரம் கொடுத்தது உண்டா?

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று முழங்கிய காலம் கனவாய் பழங்கதையாய் போய்விட்டது! பதவி தரும் சுகத்திலும் பணம் சம்பாதிப்பதிலும்தான் தேவானந்தா குறியாக இருக்கிறார். இவையே பிறவி எடுத்ததன் பலன் என அவர் நினைக்கிறார்.

ஆனால் சும்மா சொல்லக் கூடாது. இன்னொரு அடிமை பிள்ளையான் "இலங்கையின் தேசிய கீதம் வடகிழக்கில் தமிழில்தான் பாடவேண்டும். வடகிழக்கின் நிரு்வாக மொழியாக தமிழ் மொழியுள்ளதுடன் இலங்கையின் தேசிய மொழி ஒன்றாகவும் தமிழ் உள்ளது. ஒரு நாட்டின் தேசியக்கொடி போன்று தேசிய கீதமும் அந்த நாட்டில் உள்ள அனைத்து இனத்தவருக்கும் சொந்தமானது" எனத் திருவாய் மலர்ந்துள்ளார். இது இராசபக்ச நெற்றிக் கண்ணைத் திறக்காது இருக்கு மட்டுந்தான். திறந்தால் பிள்ளையான் பெட்டிப் பாம்பாகி விடுவார். இதற்கு முன் சிங்கள எசமானர்களைப் பகைக்கக் கூடாது என்பதற்காக வாலைச் சுருட்டி வைத்திருந்திருக்கிறார்!

தமிழ் மக்களுக்கு சேவை செய்கிறேன் அதனால்தான் மக்கள் என்னைத் தேர்தலில் வெற்றியடையச் செய்து நாடாளுமன்றம் அனுப்பி வைக்கிறார்கள் என்று மார் தட்டும் தேவானந்தாவிடம் ஒரு சின்ன வேண்டுகோள்.

பயங்கரவாதச் சட்டத்தையும் அவசர கால விதிகளையும் நீக்கிவிட்டு, சிங்கள இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி விட்டு யாழப்பாணத்தில் ஒரு சுதந்திரமான, நேர்மையான தேர்தலை நடத்த முடியுமா? அப்போது தெரியும் மக்கள் தீர்ப்பு எதுவாக இருக்கும் என்று. இதற்கு தேவானந்தா தயாரா?

திருமகள்

0 Responses to டக்ளஸ் சிங்களத்தில் தேசிய கீதம் பாட வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்: இமெல்டா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com