Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த வாரங்களில் பெய்த அடை மழைகாரணமாக, கிழக்கு மாகாணம் நீரில் மூழ்கியுள்ளது. அங்கே இருக்கும் மக்கள் வீடுகளை இழந்து, வயல்வெளிகளை இழந்து, உடுக்க உடையும் இழந்து அனாதரவாக நிற்கும் இந் நிலையில், அதனை வைத்து அரசியல் ஆட களமிறங்கியுள்ளனர் சில ஆசாமிகள். இன்னும் பச்சையாகச் சொல்லப்போனால், கிழக்கு மாகாண மக்களை மற்றைய மாகாண மக்கள் புறக்கணிக்கின்றனராம் என்பதே இவர்களின் (விதண்டா)-வாதம். அதனால்... தாம் இதனைப் பொறுப்பேற்றுச் செய்யப்போவதாக சிலர் முனைப்புக்காட்டி வருகின்றனர்.

இதில் வெறுப்படைந்துள்ள சில தமிழர்களோ, கருணா என்ற துரோகியால் எமது போராட்டம் அழிந்தது, அவர் கேட்கும் இடத்திற்கு, நாம் ஏன் காசு கொடுக்கவேண்டும், என பச்சையாகக் கேட்கிறார்கள் சிலர். இந்த வாதம் மிகத் தவறானது, இது பிரதேச வாதத்தையே தூண்டும். அங்கே கஷ்டப்படுவது மக்கள், எம்மின மக்கள். அவர்களுக்கு நாம் உதவிசெய்தே ஆகவேண்டும்! ஆனால் நம்பிக்கையானவர்கள் ஊடாகச் செய்யுங்கள். அரசியல் லாபத்திற்காகச் செயல்படுவோரை இனம் கண்டு புறக்கணியுங்கள்.

கடந்த காலங்களில் அரசுடன் சேர்ந்து இயங்கிய ஆசாமிகளும், இலங்கை சென்று கே.பியோடு கைகோர்த்து கொத்துரொட்டி சாப்பிட்டு வந்த நபர்களும், இலங்கைத் துணைத்தூதர் ஹம்சாவின் நெருங்கிய சகாக்களும் தற்போது பணம் சேர்க்க ஆரம்பித்துள்ளனர். கே.பியால் சமீபத்தில் உருவாக்கப்பட்ட அரசசார்பற்ற நிறுவனமே "நெரடோ". இது வட கிழக்கில் செயல்பட்டு வந்தது. ஆனால் அது தற்போது பிரித்தானியாவில் வேரூன்ற, கிழக்கில் பெய்த மழையைக் காரணம் காட்டுகிறது. அங்கே பெய்த மழையில் இங்கே முளைவிட்டுள்ளது நெரடோ அமைப்பு.

பிரித்தானியாவில் கடந்த 2009ம் ஆண்டு, போரை நிறுத்துங்கள் எனக் கோஷமிட்டு சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடினர். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50,000 த்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தவறாது கலந்துகொள்கின்றனர் மாவீர் தினங்களில், ஆனால் அம் மாவீர்களையும், விடுதலைப் போராளிகளையும் காட்டிக்கொடுத்த கே.பியின் அமைப்பு வெளிப்படையாகவே பிரித்தானியாவில் கால் ஊன்றி நிற்கிறது, ஏன் என்று கேட்பதற்கு எந்தத் தமிழனுக்கும் துணிவில்லை. இதேவேளை பிரித்தானியாவில் ஏற்கனவே மக்கள் சக்தியாக விளங்கும் சில அமைப்பின் அங்கத்தவர்கள் அதனை வெளிப்படையாகவே ஆதரிக்கின்றனர், அதுவும் மக்களுக்குத் தெரியவில்லை.

முதலில் கே.பி குறித்து ஒரு தெளிவுபடுத்தலை நாம் பெறவேண்டும். அவர் சூழ் நிலைக் கைதி என்கிறார்கள் சிலர். அவர் பாவம் மலேசியாவில் மாட்டிக்கொண்டதால் அவர் எதுவும் செய்யமுடியாத நிலை என்கிறார்கள் இன்னும் சிலர்! மற்றையவர்களே அவர் ஒரு போராளி இல்லையே, ஆயுத வியாபாரி தானே அவர் இலங்கை அரசோடு, வியாபாரம் செய்கிறார் அவ்வளவுதான் என்கிறார்கள், வேறு சிலர் அவர் கைதாகாமல் இருந்தால் அவர்பாட்டிற்கு இருந்திருப்பார் என்கிறார்கள். ஆனால் நாம் சொல்லவருவது எல்லாம் ஒன்றுதான்: அவர் கைதாகி இருக்கும் ஒரு சிறைக்கைதி என்றால் ஏன் அரசியலில் ஈடுபடவேன்டும்? அரசசார்பற்ற நிறுவனங்களை ஏன் திறக்கவேண்டும்?

கைதான கே.பி புலிகளின் ஆயுதங்களை காட்டிக்கொடுத்தார், கப்பல்களின் விபரங்களைக் கொடுத்தார், சுவிஸ் வங்கி இலக்கங்களைக் கொடுத்தார் எனக் கோத்தபாய கூறினார். அத்தோடு நிறுத்தி இருக்கலாமே, ஏன் அரசியலில் இறங்கவேண்டும்? இலங்கை அரசோடு சேர்ந்து இயங்கவேண்டும்? தற்போது இலங்கை அரசுக்கு பெரும் சவாலாக உள்ள புலம்பெயர் தமிழர்களிடையே ஏன் ஊடுருவவேண்டும்? இங்கே பல குழப்பங்களை ஏன் உருவாக்கவேண்டும்? இது ஒன்று போதாதா அவர் நல்லவரா இல்லைக் கெட்டவரா என்று அறிவதற்கு.

கடந்த காலங்களில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட சிலர், தாம் உருவாக்கி வைத்துள்ள சில அமைப்புகளூடாக நெரிடோவுடன் இணைந்து செயல்பட இருப்பதாக அறிவித்தல்களை விடுகிறார்கள். கிழக்கு வெள்ளத்தைப் பயன்படுத்தி இவர்கள் பிரித்தானியாவில் மக்களிடம் பெரும் பணத்தை எதிர்பார்க்கிறார்கள். கே.பியின் நெரடோ அமைப்புக்கு பிரித்தானியாவில் ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுக்க அவர்கள் முனைவது பெரும் வேதனைக்குரிய விடயமாகும். பிரித்தானியாவில் பல அறக்கட்டளைகளும், பல கோவில்களும், வழிபாட்டு ஸ்தலங்களும் உண்டு. அவை முறையே கிழக்கு மாகாண மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்துவரும் நிலையில், நெரடோ அமைப்பு தன்னை நிலை நிறுத்திக்கொள்ள வெள்ளத்தைப் பகடைக்காய் ஆக்குகிறது.

பிரித்தானியாவில் மாபெரும் சக்திகளில் ஒன்றாகத் திகழ்வது பிரித்தானிய தமிழர் பேரவை(BTF). இதனை ஆரம்பித்து வைத்த முக்கிய நபர்களில் சிலர் அடங்குவர். அவர்களில் சுகந்தன், சென் கந்தையா போன்றவர்களும் உள்ளனர். இவர்கள் போன்ற பிரபலங்கள் பிரித்தானியாவில் கே.பியின் நெரடோ அமைப்பு கால் ஊன்ற ஊன்றுகோலாக உள்ளனர். சமீபத்தில், பிரித்தானியாவில் 6 அமைப்புகள் அதாவது நெரிடோ மற்றும் தமிழர் நலவாழ்வு அமைப்பு என்பன ஒரு கூட்டத்தைக் கூட்டியிருந்தனர். இக் கூட்டத்திற்கு பிரித்தானிய தமிழர் பேரவையின் ஆரம்பகால உறுப்பினர்கள் இருவர் கலந்துகொண்டனர்.

இதனால் தமிழர்களுக்கு இடையே பெரிய குழப்ப நிலை தோன்றியுள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவை கே.பியின் நிகழ்ச்சி நிரலுக்கு இழுத்துச் செல்லப்படுவது போன்ற தோற்றப்பாடு ஏற்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு பிரித்தானியாவில் ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சியால், பிரித்தானிய தமிழர் பேரவை வலுப்பெற்றது, இக் காரணத்தால் அதன் ஆரம்பகால உறுப்பினர் என்ற வகையில், திரு சென் கந்தையா அவர்களை இந்திய உயர் ஸ்தானிகராலயம் அணுகியுள்ளது. இந் நிலையில் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியா சென்று ராகுல் காந்தியை சந்தித்து திரும்பியுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு டெல்லி சென்றாலே காண்பதற்கரிய ராகுல் காந்தி, சென் கந்தையாவுக்கு காட்சியளித்துள்ளார் என்றால் பாருங்களேன்.

அங்கே என்ன பேசப்பட்டது என்பது தெரியவில்லை. தான் இந்தியா சென்று ராகுல் காந்தியை இவ்விடயம் குறித்து சந்தித்தேன் என வெளிப்படையாக அவர் கூறவும் இல்லை. இந் நிலையில் தனிப்பட்ட மனிதர் ஒருவரின் இச் செயல் பிரித்தானிய தமிழர் பேரவையை வெகுவாகப் பாதித்துள்ளது. சாதாரண தமிழர்கள் சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்றனர், சில அமைப்புகளில் உள்ளவர்கள் தமது தனிப்பட்ட செயல்களால் அவ்வமைப்பை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் எந்த ஒரு அமைப்பையும் மக்கள் நம்பும் தன்மை அற்றுப்போய் உள்ளது.

கிழக்கில் வெள்ளம் அங்கே உதவிசெய்யப் போகிறேன் என கே.பி பக்கமும் கருணா பக்கமுமாக சிலர் சாய்ந்து கிடைத்த காப்பில் அவர்களை புலம்பெயர் தேசங்களில் நிலைநிறுத்தப் பார்க்க, வேறு சிலர் இந்தியாவுடன் பேசி ஒரு புது தீர்வுத்திட்டத்தை உருவாக்க, இன்னும் சிலர் நேரடியாக இலங்கை அரசோடு தொடர்புகொண்டு அவர்களுக்கு புலம்பெயர் தமிழர்களிடம் சேகரித்த நிதியைக் கொடுக்க, கேட்பார் அற்று அலைந்து திரியும் மற்றும் தான்தோன்றித் தனமாக செயல்படும் நிலை தமிழ் மக்களிடையே கொடிகட்டிப் பறக்கிறது. தமிழ் அமைப்புகளும் அதன் அடிமட்ட உறுப்பினர்களும் செய்வதறியாது குழப்பிப்போய் உள்ளனர். உண்மையில் சொல்லப்போனால், அவர்களே மக்களுக்கு பதில் சொல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஒரு அமைப்பில் சேர்வதும், சேர்ந்த பின்னர் தொலைக்காட்சியிலும், வானொலியிலும் வந்து பிரபல்யமாவதும், பின்னர் அவ்வமைப்பிலிருந்து விலகி அதற்கு எதிராக இன்னொரு அமைப்பை அமைப்பதே ஒரு ஸ்டைலாக மாறிவிட்டது. இல்லாது போனால் அவ்வமைப்பில் இருந்தவாறே வேறு வழியில் ஓடுவது, தான் ஒரு புதுப் பாதையை உருவாக்கி அதில் செல்வது, போதாக்குறைக்கு தனக்கு என்று சிலரையும் கூட்டம் சேர்த்துக்கொள்வது. இவ்வாறான காரியங்களால் மக்கள் மனமுடைந்து போயுள்ளனர்! மக்கள் வெறுப்படைகின்றனர்! இவர்கள் எதற்கும் லாயக்கு இல்லை என்று நம்பிக்கை இழக்கின்றனர்! எமது போராட்டம் உருக்குலையும் நிலை தோன்றியுள்ளது! இதனையே எதிரியும் எதிர்பார்த்து காத்து நிற்கிறான்.

இதனை நாம் எழுதுவதால் எமக்கு எவ்வாறான அழுத்தங்கள் வரும் என்பதனை நாம் நன்கு உணர்ந்து நிற்கிறோம். எம்மேல் இனிவரும் காலங்களில் சேறடிக்கும் நிலையும் தோன்றும் என்பதும் எமக்குத் தெரியும், ஆனால் இதனை நாம் எழுதியே ஆகவேண்டும். எல்லா இணையங்களும் இவ்வாறான நிகழ்வுகளை வெளிக்கொண்டுவருவது இல்லை. வியாபார நோக்கத்தோடு இயங்கும் இணையமானாலும் சரி, இல்லை தேசியம் என்று சொல்லி இணையம் நடத்தினாலும் சரி, அவர்கள் இது குறித்த தகவல்களை வெளியிட தயார் இல்லை.

தாம் பழைய ஆட்கள், அனுபவம் மிக்கவர்கள் என சிலர் தம்மைத் தாமே கூறிக்கொண்டு திரும்பத் திரும்ப களமிறங்குகின்றனர். ஆனால் பிரித்தானியாவில் பல இளைய தலைமுறையினர் எமது விடுதலைக்காக வீதியில் இறங்கிக் கூட வேலைசெய்யத் தயாராக உள்ளனர். அவர்களைப் புறந்தள்ளி, தம்மை தக்கவைக்க இந்த கிழட்டு ஆசாமிகள் பெரும் பிரயத்தனத்தை மேற்கொண்டுவருகின்றனர். 2008 மாவீரர் தின உரையில் தேசிய தலைவர் மிகவும் அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார். இளையோர்களின் கைகளில் இப் போராட்டம் செல்லவேண்டும் என்பதை அவர் உறுதிபடச் சொல்லியுள்ளார். எனவே இளையோர் கைகளை நாம் பலப்படுத்தி அடுத்த தலைமுறையினரை ஊக்கப்படுத்தவேண்டும். சில கிழட்டு ஆசாமிகளின் உட்பூசல்களைப் பார்த்து, இளையோர்கள் வெறுப்படைந்து எமக்கு ஏன் வீண் பொல்லாப்பு என்று சென்றுவிட்டால், உங்களுக்குப் பின் அதனை யார் முன்னெடுக்கப்போகிறார்கள் என்று சற்றே சிந்தியுங்கள்.

இனவே இளையோர் கைகளின் எமது போராட்டத்தையும், தமிழர் நலன்சார்ந்த விடயங்களையும் ஒப்படைத்து அவர்களுக்கு பக்கபலமாக இருப்பதே எமது இனத்தின் விடுதலைக்கு வித்திடும்.

இச் செய்தி அதிர்விலிருந்து...

0 Responses to அனாதரவான மக்களும் அதனை வைத்து அரசியல் லாபம் தேடும் ஆசாமிகளும்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com