Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மகிந்தாவின் அமெரிக்காவுக்கான விஜயம் தனிப்பட்டதொன்றல்ல, 20 பிரதிநிதிகளுடன் சென்றிருக்கின்ற இந்த விஜயம் தொடர்பில் பாரிய சந்தேகம் நிலவுகின்றது. எனவே, இதன் வெளிப்படைத் தன்மையை நாட்டுக்கும் மக்களுக்கும் பகிரங்கப்படுத்த வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் கூறுகையில், அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்க செயலாளர் ரிச்சட் ஆர்மிரேஜ் கடந்த வாரப் பகுதியில் இலங்கை வந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்திருந்தார். ஆனாலும் அந்த சந்திப்பு தொடர்பிலான விடயங்கள் எதுவும் அரசாங்கத்தினால் வெளிப்படுத்தப்படவில்லை. அவரது இந்த சந்திப்பின் பின்னரே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த விஜயம் தனிப்பட்டது என்றே முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இருந்த போதிலும் தனிப்பட்ட விஜயமொன்றாக இருப்பின் அமைச்சர்கள் பிரதிநிதிகள் என 20 பேரடங்கிய குழுவுடன் சென்றிருப்பதுதான் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதிலிருந்து இந்த விஜயம் தனிப்பட்டதென்றல்ல என்பதும் நிரூபணமாகின்றது.

நாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்கா செல்வதோ அல்லது அரசியல் தலைவர்கள் பிரமுகர்களை சந்திப்பதோ ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். ஆனால் இதனை எம்மால் அவ்வாறு நோக்க முடியாதிருக்கின்றது. கடந்த 19 ஆம் திகதி பயணித்த அவர் இன்றுவரையில் நாடு திரும்பவில்லை.

அவர் அமெரிக்காவின் ரகசிய அழைப்பின் பேரிலேயே அங்கு சென்றுள்ளார். அப்படியானால் இந்த ரகசிய அழைப்பு, ரகசிய பேச்சு நடவடிக்கைகள் ஆகியவற்றின் அர்த்தம் என்ன? அதுமட்டுமல்லாது தனிப்பட்ட விஜயம் என்ற பெயரில் ஜனாதிபதியும் அவருடனான பிரதிநிதிகளும் அரசாங்கத்தின் செலவிலேயே சென்றுள்ளனர்.

இவ்வாறு நாட்டுக்கும் மக்களுக்கும் ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் விடயங்களை ஏன் மூடி மறைக்க வேண்டும் என்று கேட்க விரும்புகிறோம். இது தனிப்பட்ட விஜயம் தானா அல்லது உத்தியோகபூர்வ விஜயம் தானா என்பது தொடர்பில் அரசாங்கம் உடனடியாக மக்களிடத்தில் பகிரங்கப்படுத்த வேண்டும்.

தனிப்பட்ட விஜயம் என்று அரசாங்கம் கூறினாலும் அவ்வாறான விஜயத்தில் ஏன் 20 பேரடங்கிய பிரதிநிதிகளும் செல்ல வேண்டும் என்பதே எமது கேள்வியாகும்.

இது பாரதூரமான விடயமாகும். இதனை மூடி மறைக்க அரசாங்கம் முற்படக் கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்துகின்றது என்றார்.

0 Responses to மகிந்தாவின் அமெரிக்க விஜயம் சந்தேகத்திற்கிடமானது: ஐக்கிய தேசியக் கட்சி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com