குத்துவிளக்கு, நெஞ்சுக்கு நீதி இரண்டு படங்களையும் டென்மார்க்கில் காண்பிக்க வேண்டுமா உங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்துங்கள்…
எடிட்டிங்: எஸ்.வி. சந்திரன்
ஒலிப்பதிவு: சுண்டிக்குளி சோமசேகரன்
தயாரிப்பு: கட்டிடக்கலைஞர். வி.எஸ்.துரைராஜா
டைரக்ட்: டபிள்யூ. எஸ்.மஹேந்திரன்
ஈழத்தில் தயாரான திரைப்படங்களில் பலதின் பிரதிகள் கிடைக்காமல் அழிந்து போய்விட்டன. ஆனால் அவற்றில் சில காப்பாற்றப்பட்டு இப்போது வெளிவர ஆரம்பித்துள்ளன. அந்தவகையில் குத்துவிளக்கு, நெஞ்சுக்குநீதி ஆகிய இரண்டு திரைப்படங்களை பிரான்சிலிருந்து கலைஞர் ஏ. ரகுநாதன் நமக்கு அனுப்பியுள்ளார். அந்தவகையில் முதலாவதாக குத்துவிளக்கு திரைப்படத்திற்கான மறுபார்வை இங்கே இடம் பெறுகிறது.
குத்துவிளக்கு திரைப்படத்தை இன்று மறுபடியும் பார்க்கும் போது எம்மிடையே இருந்த பல கனவுகள் உடைந்து சிதறுகின்றன. ஆரம்பித்தில் இருந்து முடியும்வரை நம்மை எழும்ப விடாது உட்கார வைக்கிறது திரைப்படம். இப்படத்தை முழுமையாக பார்த்த பின்னர் எம் உள்ளத்தில் ஓடும் எண்ணங்கள் இங்கே கோர்வையாக தரப்படுகின்றன…
01. இந்திய தமிழ் திரைப்படங்களுக்கு இணையாக இலங்கைத் தமிழ் திரைப்படங்கள் வளர்வது கடினமென்று முன்வைக்கப்படும் நம்மவர் கருத்து முட்டாள்தனமானது என்பதை இப்படம் தெளிவாக அடையாளம் காட்டுகிறது.
02. இன்று தமிழகத்தில் வெற்றிபெறும் பருத்திவீரன், நாடோடிகள், அங்காடித்தெரு போன்ற திரைப்படங்களில் காணும் கதைக்கரு உருவாக்கத்தை இற்றைக்கு 40 வருடங்களுக்கு முன்னரே நம்கலைஞர்கள் உருவாக்கியிருப்பது பிரமிக்க வைக்கிறது.
03. படப்பிடிப்பு, எடிட்டிங், டப்பிங் இவைகளில் ஓர் இடத்தில் கூட குறைபாடு இல்லாமல் நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத் தமிழை வெற்றிகரமாக திரை உரையாடலாக்கியுள்ளனர்.
04. தமிழக பிரபல திரை நடிகர்களுடன் ஒப்பிட்டால் நடிப்பில் நமது கலைஞர்கள் கடுகளவும் குறைந்தவர்கள் அல்ல என்று உறுதியாகக் கூறுமளவிற்கு நாடகத் தன்மை இல்லாமல் சினிமாவிற்கான நடிப்பு திறனை அவர்கள் அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.
05. இலங்கையின் வடக்கே இலங்கிய இயற்கை வளங்களை சிறீலங்கா அரசு போர் என்ற போர்வையில் திட்டமிட்டு அழித்துள்ளது. இந்தநிலையில் அழிந்துபோன அன்றைய யாழ்ப்பாணத்தின் அழகிய தோற்றத்தை அப்படியே பாதுகாத்து தந்திருக்கிறது குத்துவிளக்கு என்பது மனிநிறைவு தருகிறது.
05. யாழ்ப்பாணத்தின் அழிக்கப்பட்ட நூல்நிலையம், நின்றுபோன இரட்டைத்தட்டு பஸ்சேவை, பழைய புகையிரதங்களின் உட்புறத்தோற்றங்கள், வீடுகளின் அமைப்பு, கள்ளுக்கொட்டில்கள், மாட்டுவண்டி சவாரிகள், நல்லூர் திருவிழா, பழைய கொழும்பு, கோல்பேஸ்கடற்கரை, இயற்கையான மரங்கள், மக்களின் பாரம்பரிய வாழ்வென்று அனைத்தையும் ஒரு வரலாற்று சுவை மிக்க ஒளிப்படமாக தருவது பெரும் திருப்தி தருகிறது.
06. ஒரு திரைப்படத்தை எப்படி உருவாக்க வேண்டும், அதில் என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என்ற கட்டிடக்கலைஞர் வி.எஸ்.துரைராஜாவின் அழகிய சிந்தனைகள் நவீன கட்டிட வரைபடம் போல தெளிவாகக் காண்பிக்கப்படுகிறது.
07. சமுதாய விமர்சனங்கள் இன்றைக்கும் தேவைப்படுமளவிற்கு குத்துவிளக்கில் நிறைவாகக் காணப்படுகின்றன. அதற்கு ஓர் உதாரணம் திரைப்படத்தின் முக்கிய பாத்திரத்தில் நடித்தவர் யாழ்ப்பாணத்து நல்லெண்ணையை கொழும்பிற்குக் கொண்டு வந்து கொடுப்பார். அதை முகர்ந்து பார்த்த கொழும்பில் இருக்கும் யாழ்ப்பாண தமிழ் குடும்பம் அட எங்கடை யாழ்ப்பாணத்து நல்லெண்ணை போல வருமே தம்பி என்று கூறிவிட்டு, இப்பிடித்தான் சுத்தமான நல்லெண்ணெய் போல கொழும்புவாற எங்கட இளசுகள் பழபாத பழக்கமெல்லாம் பழகி சக்கடிச்சுப் போய்க்கிடக்கு என்பார். இது யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிநாடு வந்த பலருக்கு அச்சோட்டாக பொருந்துகிறது.
08. இரண்டு சட்டி வைத்து அப்பம் சுடுவது, அம்மியில் அரைப்பது போன்ற யாழ்ப்பாணத்து சமையல் முறைகளை எல்லாம் கதையோடு அழகாக பின்னியுள்ளார்கள். விதைத்தல், அறுவடை, யாழ்ப்பாணத்தை அழித்த பெரு வெள்ளம், தொண்டைமானாற்று காற்றாடி என்று ஒரு இயற்கை வரலாற்றை மூலக்கதையோடு கரைத்திருப்பது இன்றைய தமிழக திரைப்பட இயக்குநர்களுக்கே பெரும் சவாலாக அமைந்துள்ளது. கலாயோகி ஆனந்தக்குமாரசாமிக்கு சமர்ப்பணம் செய்து திரைப்படம் நடந்த பயணம் அமோகமாக உள்ளது.
09. பொதுவாக பர்போமன்ஸ் என்பதும், பஞ்சிங் என்பதும் பொதுவாக ஈழத்து கலைஞர்களிடம் காணப்படுவதில்லை என்ற குறைபாடு தமிழகத்தில் இருக்கிறது. ஆனால் நடனத்தாரகை லீலாநாராயணன் காட்டிய முகபாவம் எம்மை வியக்க வைக்கிறது. அண்ணன் சோமுவின் நடிப்பு, கதாநாயகன் ஆனந்தனின் ஓட்டம், வி.எஸ்.துரைராஜாவின் தந்தைப் பாத்திரமென்று அனைத்து பாத்திரங்களும் நடிப்பில் பதித்திருக்கும் சாதனை நம்மை சட்டைக் கொலரை உயர்த்துமளவிற்கு பெருமை கொள்ள வைக்கிறது.
10. காட்சிகளுக்குள்ளான தொடர்பும், கதையின் நகர்வும் எடிட்டிங்கில் செப்பமாக நகர்த்தப்படுகிறது. சிறப்பாக கிளைமாக்ஸ்சை உருவாக்கும் இடம் இயக்குநர் மஹேந்திரனை பெரிதும் நினைக்க வைக்கிறது.
01. தற்கொலைக்கு போகும் கதாநாயகி
02. தங்கையின் திருமணத்துக்காக பணத்தோடு ஓடிவரும் அண்ணன்
03. கதாநாயகனுக்கு இன்னொருத்தியுடன் திருமணம் நடக்கப்போகும் மேளச்சத்தம்.
04. பாரிசவாதம் தாக்கிய தந்தை தவழ்ந்துவரும் காட்சி
05. கதாநாயகிக்கு காதலன் எழுதிய திட்டமிட்ட கடிதம் காற்றில் பறந்துவிட்டதால் வரும் திருப்பம்
என்று ஐந்து அலைவரிசைகளில் வேகமாக ஓடி வரும் கதை பெரும் விறுவிறுப்பை தருகிறது. கடைசியாக கதாநாயகியை மரணிக்க வைத்து கதையில் சோகமான முடிவைத் தரும் இடத்திற்கு டைரக்டர் துணிச்சலான முடிவை எடுக்கிறார்.
11. படித்து வேலையில்லை, சுவீப் ரிக்கற் எடுத்தும் ஏமாற்றம், யாவற்றையும் தூக்கி வீசிவிட்டு விவசாய மன்னாக வருகிறான் அண்ணன். சிங்களம் படிக்காமல் விட்டதால் வந்த கேடும் தூரப்பார்வையற்ற தமிழ் தலைமைகளும் என்று ஏராளம் அரசியல் யதார்த்தங்களையும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றியது போல நோகாமல் ஏற்றிச் செல்கிறது கதை முழுவதும் விரவியுள்ள கருத்துக்கள்.
12. ஈழத் தமிழினத்திற்கும், சிங்களவருக்குமான உண்மையான எதிர்காலம் எங்கே இருந்திருக்கிறதென திரைக்கதை தெளிவாக எடுத்துரைத்துள்ளது. இப்படத்தில் சமுதாய விழிப்புணர்ச்சிப் பார்வையை தமிழ், சிங்கள இனங்கள் அன்றே பெற்றிருந்தால் இந்த அவலம் நாட்டிற்கு வந்திருக்குமா என்று எண்ணி கண்ணீர்விட வைக்கிறது. அடடா இந்த அரசியல் தலைவர்களின் வழிகாட்டலில் எவ்வளவு மூடர்களாகிவிட்டோம் என்று எண்ணி வெட்கப்பட வைக்கிறது.
13. இப்படியெல்லாம் கலைஞர்கள் சமுதாயத்தை வழி நடாத்த இருந்துள்ளபோது அவற்றை புறக்கணித்து வாழ்ந்த இலங்கை தமிழினத்தின் சமுதாய அறியாமையையும் , போலிப்பகட்டுக்களையும் நினைத்து நினைத்து வருந்த வைக்கிறது திரைக்கதை. சாதிக்கொடுமை, வட்டி, பணக்காரன் ஏழை, இனவாதம் போன்ற அனைத்துக்கும் எதிராக அறிவார்ந்த போர்க்கொடி தூக்குகிறது. தயாரிப்பாளர், இயக்குநர், கலைஞர்கள் உட்பட அனைவருமே பெரிதும் பாராட்டப்பட வேண்டியவர்களாகும்.
இந்தத் திரைப்படத்தை மறுபடியும் ஏன் பார்க்க வேண்டும் ?
01. இந்திய திரைப்பட கலைஞர்களுக்கு ஈழத் தமிழர் குறைவான கலைஞர்களாக இருக்கவில்லை என்பதை நாம் ஏகமனதாக ஒப்புக்கொள்ள இத்திரைப்படத்தைப் பார்க்க வேண்டும்.
02. ஈழத் தமிழ் திரைப்படங்கள் தரத்தினால் பின்தங்கவில்லை இந்திய அரசின் கொள்கைகளும் தடைகளுமே அதனுடைய பின்னடைவுக்குக் காரணமாக இருந்திருக்குமோ என்ற சந்தேகத்தை மேலும் பலமாக்குகிறது.
02. புலம் பெயர் நாடுகளில் தாயகம் அறியாத வாழ்வு வாழும் பிள்ளைகள் மட்டுமல்ல தன் தாயகமே தனக்கு தெரியாது வாழும் பல பெரியவர்களுக்கும் இப்படம் காண்பிக்கப்பட வேண்டியது அவசியம்.
03. கடுகளவும் தொய்வில்லாத ஒரு திரைப்படத்தை வழங்கியும் நமது மக்கள் ஏன் அதற்கு ஆதரவளிக்க மறுத்தார்கள் என்ற மறுவிசாரணைக்காகவும் இப்படம் பார்க்கப்பட வேண்டியது அவசியம்.
04. இன்று கலைகள், சினிமா என்று ஆர்வம் கொண்டுள்ள புலம் பெயர் இளைய தலைமுறை தமது முன்னோர்களான கலைஞர்களின் திறமைகளை பார்த்து பெருமை கொண்டு தன்னம்பிக்கையுடன் நடக்க வேண்டுமானால் கண்டிப்பாக இப்படத்தைப் பார்க்க வேண்டும்.
டென்மார்க்கில் இத்திரைப்படம் அகலத் திரையில் காண்பிக்கப்பட இருக்கிறது. இதற்கு பிள்ளைகளை அழைத்துக் கொண்டு பெரியவர்கள் வரவேண்டும். ஒரு சிலர் மட்டும் குந்தியிருந்து பார்த்துவிட்டு வரட்டுக்கதை கதைத்து போவதானால் இப்படத்தை மறுபடியும் திரையிட்டு யாதொரு பயனும் கிடையாது. நமது சமுதாய விழிப்பை அவதானித்து திரையிடப்படும் என்று அலைகள் மூவீஸ் தெரிவிக்கிறது.
இது குறித்த உங்கள் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. சகல நகரங்களிலும் ஈழத் தமிழர் தன்மானத்தையும், கலை பண்பாடுகளையும் மறுபார்வைக்கு உட்படுத்தவும், புது வலு பெறவும் இது உதவியாக அமையும்.
குத்துவிளக்கு, நெஞ்சுக்கு நீதி இரண்டு ஈழத்து திரைப்படங்களை பார்க்க ஆவல் இருந்தால் முதலில் உங்கள் ஆவலை எம்மிடம் வெளிப்படுத்துங்கள்.
அலைகள் ஆசிரியர். 07..01.2011
0 Responses to குத்துவிளக்கு ஈழத்துத் திரைப்படம் ஒரு புதிய பார்வை