Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உலக அரங்கிலும், எம் உறவுகளின் உள்ளத்திலும் இறுக்கமான ஒர் தொடர்பை, நெருக்கமான ஒரு உறவை நாடு கடந்த தமிழீழ அரசு ஏற்படுத்தி வருவது கண்டு மகிழ்ச்சியடையாத உறவுகளோ, பெருமைப்படாத தமிழர்களோ இருக்கமுடியாது.

இந்தத் தருணத்தை, எமக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிடாது, முழுமையான பயனை நாம் பெறுவதும், அடைவதும், அனுபவிப்பதும் அரசியலை ஆணித்தரமாகப் புரிந்திருக்கும் எமது மக்களின் கையில்தானே தங்கியிருக்கிறது. அதாவது, இந்த அரிய வாய்ப்பை , ஈழத்தமிழர் சரித்திரத்திலே ஓர் முக்கியமான, வரலாற்றுப் பெருமைமிக்க காலமாக மாற்றவேண்டியது நம் எல்லோரினது கடமையும், பொறுப்புமல்லவா.

நாடு கடந்த தமிழீழ அரசால் முன்னெடுத்துவரும் எமது இறுதிப்போர் தாமதியாது நிறைவு பெற மக்களின் பங்களிப்பும், அவர்களின் செயற்பாடுகளும் அதிகரிக்க வேண்டும். எமது போராட்டம் மக்கள் போராட்டமாக மாறவேண்டும். பார்வையாளர்களாக மட்டும் இருந்து கேள்விகளைக் கேட்காமல் பங்காளிகளாக மாறி, தங்கள் பங்கைத் தவறாதும், மறவாதும் நாடு கடந்த தமிழீழ அரசுக்கு தாமதமின்றி வழங்கவேண்டும்.

இந்த நூற்றண்டுக்கான ஓர் தனித்துவமான அரசியல் முன்னெடுப்பை கொண்ட நாடு கடந்த தமிழீழ அரசு, தமிழருக்காக, தமிழர்களால் உருவாக்கப்பட்டு, சனநாயக ரீதியிலே தேர்வுசெய்யப்பட்ட பிரதி நிதிகளால் நடாத்தப்படும் தமிழருக்கான, தமிழர்களின் அரசு என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.

இன ஒழிப்புச் செய்பவர்களை, மனித உரிமைகளை மீறுபவர்களை, போர்க்குற்றம் புரிந்தவர்களைத் தண்டிக்கும் உரிமையும், தகுதியும், திறமையும் கொண்டவர்கள் நாமல்லவா?

சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டியவர்கள் இன்று சர்வசாதாரணமாக உலகை வலம் வருவதற்கு யார் காரணம்? சர்வதேச சட்டங்களும், அதற்கான ஆதாரங்களும் நிறைய இருக்கையில், உலகம் இதுவரை கண்டிராத இந்த இன அழிப்பைச் செய்தவர்களைக் கூண்டில் ஏற்றி, குற்றவாளியாக்குவது எமது கடமையல்லவா?

நாம், நீதியின் பக்கம் நிற்கும் ஓர் தொன்மைமிகு வீர இனம், நியாய வழியில் போராடும் ஓர் வலிமையான சந்ததி. சிங்கள அரசைவிட பல மடங்கு வருமானத்தைப் பெறும் எம்மால் சாதிக்க முடியாதது என்று ஒன்றுமே இல்லை. இதற்கு விஞ்ஞான ரீதியிலான விளக்கமோ அல்லது ஆய்வுக் கட்டுரையோ தேவையில்லை. தொன்மையும், திறமையும் நிரம்பிய எமது வீரவரலாறே போதுமானதல்லவா.

தந்தை செல்வாவினால் முன்மொழியப்பட்டு, தேசியத் தலைவரால் வடிவம் கொடுக்கப்பட்ட கொள்கையான இறைமையும், சுதந்திரமும் கொண்ட தனிநாட்டை அமைப்பதையே தம் இலட்சியமாகக் கொண்டு இயங்கிவரும் நாடு கடந்த தமிழீழ அரசுடன் இணைந்து செயற்படுங்கள். எமது இறுதிப்போரான அரசியல் போரையும் இந்தத் தலைமுறையில் பூர்த்திசெய்வோம்.

எங்கள் சுமையை தங்கள் தோழில் சுமந்த எம் உறவுகளுக்காக, தங்கள் வாழ்வை எமது சந்ததிக்காக அர்ப்பணம் செய்த அந்தத் தெய்வங்களுக்காக நாம் செய்யும் கடமையென எண்ணி செயற்பட வேண்டியது எங்கள் பொறுப்பல்லவா?

உண்ண உணவின்றி, வார்த்தைக் கடல் வற்றி, ஊமையாக வாழும் அந்த நலிந்துபோன உருவங்களை ஒருகணம் எண்ணிப் பாருங்கள். உயிரிலும் மேலான தம் கற்பை இழந்துவிட்டு சோகத்தில் வாழும் எம் சகோதரிகளை ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள். நீங்களும் கைவிட்டால் அவர்கள் யாரிடம் போவது? அழிந்து போவதைத் தவிர அவர்களால் வேறென்ன செய்யமுடியும்?

இறைமையும், சுதந்திரமும் கொண்ட தனிநாட்டை அமைப்பதற்கு ஆதரவு தரும் அமைப்புக்களும், சங்கங்களும், விளையாட்டுக் கழகங்களும், ஆலயங்களும் எமது இறுதிப் போரை முன்னெடுத்துச் செல்லும் நாடு கடந்த தமிழீழ அரசுக்கு தம்மாலான உதவிகளை வழங்கத் தாமாகவே முன்வர வேண்டும்.

ஒருங்கிணைந்து செயற்பட முன்வராதவர்களை, எமது முயற்சிகளுக்குத் தடையாகச் செயற்படுபவர்களை, எமமைத் தமது எதிரியாக்கிப் பிரசாரம் செய்து, ராஜபக்சாவுக்கு யாகம் செய்பவர்களை என்ன செய்யவேண்டும் என்பதை அரசியலை வாழ்க்கையாகவும், வாழ்க்கையை அரசியலாகவும் கொண்டு வாழும் மறத் தமிழர்களான உங்களிடம் விட்டுவிடுவதே மேல்.

அநீதியின் எல்லைகளை நேரில்கண்ட உங்களைத் தவிர, நீதிக்காக ஏங்கித்தவித்த உங்களிலும் பார்க்க வேறு யாரால ஓர் நீதியான தீர்ப்பை வழங்க முடியும்.

ராஜபக்சாவின் எதிரிகள் தமிழரும், அவர்களுக்காகப் போராடும் நாடு கடந்த தமிழீழ அரசும் என்றால் எம்மைத் தமது முதலாவது எதிரியாக்கிப் பிரசாரம் செய்யும் இவர்கள் யார்? அதாவது, ராஜபக்சா விரும்புவதும் நாடுவதும் தமிழருக்கு எதிரானவை என்றால் அதற்கு வடிவம் கொடுக்கும் இவர்கள் யார் என்பதை நீங்களே முடிவுசெய்யுங்கள்.

இலட்சியவாதிகளை சந்தர்ப்பவாதிகள் என்றுமே வென்றதில்லை என்பதை, உங்கள் ஒத்துழைப்புடன், இவர்களுக்கும் புரியவைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

கலாநிதி ராம் சிவலிஙகம்
பிரதிப் பிரதமர் - நாடுகடந்த தமிழீழ அரசு

email: r.sivalingam@tgte.org

1 Response to உலக அரங்கிலே எம் உறவுகள் உள்ளத்திலே வீர நடைபோடும் நாடு கடந்த தமிழீழ அரசு

  1. இளமாறன் தமி்ழ் நாடு‍

    இந்திய தமிழர்கள் நாடு கடந்த தமிழீழ அரசுக்கு‍ ஆதரவுடன் இருப்பார்கள்

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com