Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அவசரகாலச்சட்டத்தை நீடிப்பதற்கு அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு காரணத்தை முன்வைப்பது வழக்கம். புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டார்கள் அவர்களால் இனிமேல் தலையெடுக்கவே முடியாது என்று கூறும் அரசாங்கம், அவசரகாலச்சட்டத்தை நீடிக்கும் போது மட்டும் புலிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக கூறிக் கொள்வது இப்போதைய வழக்கம்.

வழக்கமாக அரசாங்கம் ஐரோப்பா, அமெரிக்கா என்று மேற்குலகுடன் புலிகளை முடிச்சுப் போட்டு சீண்டும். ஆனால் இந்தமுறை இந்தியாவுடன் சீண்டப் போக அது பெரிய விவகாரம் ஆகிவிட்டது.

அவசரகாலச்சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தை முன்னர் பிரதமராக இருந்த ரட்ணசிறி விக்கிரமநாயக்க தொடக்கி வைப்பார். அவர் விட்ட இடத்தை இப்போது பிரதமர் டி.எம்.ஜயரட்ண நிரப்புகிறார்.

பிரதமர் டி.எம்.ஜயரட்ண அவசரகாலச்சட்ட நீடிப்புக்கு காரணம் தேடும் வகையில், தமிழ்நாட்டில் புலிகளின் மூன்று பயிற்சி முகாம்கள் இயங்குவதாக இந்திய புலனாய்வு அறிக்கைகள் கூறுவதாக கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் கதை விட்டார்.

பொட்டம்மானின் நெருங்கிய சகாவான புகழேந்தி மாஸ்டர் தலைமையில் இயங்கும் இந்தப் பயிற்சி முகாம்களில், இந்திய அரசியல் தலைவர்களைப் படுகொலை செய்வதற்கும், இலங்கையில் சிறியளவிலான தாக்குதல்களை நடத்துவதற்கும் பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் கூறினார்.

எந்த நேரத்திலும் தாக்குதல் நடக்கலாம் என்பதால் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று வேறு அவர் பயம் காட்டி விட்டுப் போனார்.

அவர் இந்தக் கதையைக் கூறியதும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கரமசிங்க புலிகள் மீள் எழுச்சி பெறுவதாகக் கூறும் நீங்கள், படையினரை மரக்கறி வியாபாரம் செய்வற்கு அனுப்பி விட்டுச் சும்மா இருக்கிறீர்களே? என்று கேள்வி எழுப்பினார்.

அத்துடன் இதுபற்றி ஏன் இந்தியாவுக்குத் தெரியப்படுத்தவில்லை? அவர்களுடன் அல்லவா கலந்துரையாடியிருக்க வேண்டும் என்று ஒரு பிடி பிடித்தார். இப்போது இந்த விவகாரத்தை இந்தியா மிகக் கடுமையாக எடுத்துக் கொண்டுள்ளது.

கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகப் பேச்சாளர் பிரேந்தர் சிங். உடனடியாகவே இது அடிப்படையற்ற கருத்து என்றும் ஆதாரமற்றது என்றும் நிராகரித்தார்.

தமிழ்நாட்டில் அப்படி எந்தப் பயிற்சி முகாம்களும் கிடையாது என்றும், அடிப்படையில்லாமல் பேசுகிறார் இலங்கைப் பிரதமர் என்றும் அடித்துக் கூறினார் தமிழ்நாட்டின் பொலிஸ் ஆணையாளர் லத்திகா சரண்.

அதைவிட இந்திய அரசின் அதிகாரபூர்வ பேச்சாளார் விஸ்ணு பிரகாஷ், புதுடெல்லியில் இந்தக் கருத்தை மறுத்தார். தமிழ்நாட்டில் எந்தவொரு பயிற்சி முகாமும் கிடையாது என்று அவரும் நிராகரித்தார்.

அதுமட்டுமன்றி இந்திய உள்துறை செயலர் கோபால் பிள்ளை, புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பு. அவர்கள் இங்கிருந்தால் கைது செய்வோம். இலங்கைப் பிரதமர் கூறுவது போல இங்கு புலிகளின் பயிற்சி முகாம்கள் ஏதும் கிடையாது என்று மறுத்தார்.

தமிழ்நாட்டில் புலிகளின் பயிற்சி முகாம்கள் செயற்படுவதாக வெளியான தகவல் தவறானது. ஆதாரமற்ற இது போன்ற தகவல்களைத் தெரிவிப்பதை இலங்கை அரசு தவிர்க்க வேண்டும் என்றார் இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்.

பிரதமர் டி.எம். ஜயரட்னவின் குற்றச்சாட்டை இந்தியாவின் சார்பில் மறுத்துள்ளவர்கள் அனைவரும் அரச உயர் அதிகாகளே என்பது கவனிக்கத்தக்கது.

பிரதமர் டி.எம்.ஜெயரட்னவின் கருத்தை இந்தியா சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. உண்மையில் இந்தக் கருத்து அடிப்படையற்றது தான்.

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் மீளவும் அணி திரண்டு வருவதாகவும், அவர்களின் மூன்று பயிற்சி முகாம்கள் இயங்குவதாகவும், சில வாரங்களுக்கு முன்னர் செய்தி வெளியிட்டது இந்தியாவின் பிரபல நாளிதழானஹிந்து“.

இந்தியப் புலனாய்வு அமைப்புகள் தமிழ்நாட்டு அரசுக்கு எச்சரிக்கைத் தகவலை அனுப்பியுள்ளதாகக் கூறிய அந்த நீண்ட செய்தியில் பல்வேறு தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

தமிழ்நாட்டில் புலிகள் மீள ஒருங்கிணைவது போன்றும், பயிற்சி பெறுவது போன்றும் தோற்றப்பாட்டை காண்பிக்க அந்தச் செய்தி மூலம் முயற்சிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அந்தச் செய்தியின் கடைசியில் தமிழ்நாடு பொலிஸ் ஆணையாளர் லத்திகா சரணின் கருத்தையும் பெற்று இணைத்திருந்தது ஹிந்து.

அந்தச் செய்தியிலேயே புலிகளின் நடமாட்டம் தமிழ்நாட்டில் இல்லை என்று அடித்துக் கூறியிருந்தார் லத்திகா சரண்.

அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஹிந்து நாளிதழ் தமிழ்நாட்டில் புலிகள் இருப்பதாக தலைப்பிட்டிருந்தது.

சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் இந்திய அரசியல் பிரகர்கள் மீது தாக்குதல் நடத்துவது அவர்களின் இலக்கு என்றும் கூறியிருந்தது.

இந்தச் செய்தியின் சாரத்தை எடுத்து வைத்துக் கொண்டு தான் பிரதமர் டி.எம்.ஜயரட்ன நாடாளுமன்றத்தில் புதிய கதை ஒன்றை அவிழ்த்து விட்டார்.

அவரைப் பொறுத்தவரையில் அவசரகாலச்சட்டத்தை நீடிப்பதற்கு ஒரு சாட்டுச் சொல்ல வேண்டியிருந்தது.

முன்னரெல்லாம் புலிகள், படையினன் இழப்புக் கணக்குகளைக் காட்டுவது வழக்கம். போர் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகின்ற நிலையில் எத்தனை காலத்துக்குத் தான் அவரும் காரணங்களைத் தேட முடியும்.

இதுவரை கொடுத்து வந்த காரணங்கள் அவருக்குப் புளித்துப் போனதோ தெரியவில்லை.

கொஞ்சம் புதிய கதையாக அவிழ்க்க ஆசைப்பட்டுத் தான் தமிழ்நாட்டில் புலிகளின் பயிற்சி முகாம் இருப்பதாக கூறினார்.

இப்போது அவருக்கு எதிராக இந்திய அதிகாரிகள் வந்து கட்டிக் கொண்டு வந்து நிற்கிறார்கள். இந்தியாவின் நிராகரிப்பை அடுத்து பிரதமர் டி.எம். ஜயரட்ண கீழ் இறங்கி வந்து, தான் உள்ளூர் பத்திரிகைச் செய்திகளைப் பார்த்தே அவ்வாறு கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இந்திய புலனாய்வு அறிக்கைகள் கூறுவதாக தெரிவித்த அவர் பின்னர் ஊடகங்கள் மீது பழியைப் போட்டார்.

அதுமட்டுமன்றி, அதே உள்ளூர் ஊடகங்களில் தமிழ்நாட்டில் புலிகளின் நடமாட்டம் இல்லை என்று பொலிஸ் ஆணையாளர் லத்திகா சரண் தெரிவித்திருந்த கருத்தும் அவரது கண்ணுக்குத் தெயாதது ஆச்சரியம் தான்.

ஹிந்து நாளிதழில் இந்தச் செய்தி வெளியான போதே உள்நோக்கம் கொண்டதொரு செய்தியாக விமர்சிக்கப்பட்டது.

அதை இலங்கை அரசாங்கம் தமது வசதிக்குப் பயன்படுத்திக் கொண்டதை இந்தியா விரும்பவில்லை.

காரணம் தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் வரப் போகிறது.

இன்னும் ஒரு மாதத்தில் தேர்தல் நடக்கப் போகின்ற நிலையில், புலிகள் பற்றிய சர்ச்சைகள் எழுவதை இந்திய மத்திய அரசோ தமிழ்நாடு மாநில அரசோ விரும்பவில்லை.

புலிகளை ஆதரிக்கும் கட்சிகள் மத்திய அரசு தி.. கூட்டணியிலும் உள்ளன. எதிரணிகளின் கூட்டணியிலும் உள்ளன.

ஏற்கனவே வன்னிப் போர், தமிழர்களின் நிலைமை என்று பல்வேறு சிக்கல்களையும், குற்றச்சாட்டுகளையும் இரு அரசாங்கங்களும் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இந்தநிலையில் தேர்தல் காலத்தில் இன்னொரு சிக்கலை அவை விரும்பவில்லை.

இந்தியா மௌனமாக இருக்காமல் பல தரப்பில் இருந்தும் நிராகரிக்க இதுவே காரணம்.

இராணுவ தியாக முற்றாகவே வலுவிழந்த போய் விட்ட புலிகள் இயக்கம் அரசியல் வழியிலும் இப்போது மீள எழ முடியாத கட்டத்துக்குத் தள்ளப்பட்டு விட்டது.

உள்முரண்பாடுகள் இந்த மீள்எழுகைக்கு ஒரு போதும் இடமளிக்காது போலத் தெரிகிறது.

இந்தநிலையில் புலிகளின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு அவசரகாலச்சட்டத்தை நீடிக்கக் காரணம் தேடும் அரசாங்கத்துக்கு இந்த விவகாரம் ஒரு படிப்பினையாகி விட்டது.

அவசரகாலச்சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் வலுவடைந்துள்ளன.

இந்தநிலையில் அரசாங்கம் அதை நீக்குவதற்குப் பதிலாக இப்படியான காரணங்களைத் தேடுவதிலேயே குறியாக இருக்கிறது.

அதனால் தான் பிரதமர் பொல்லைக் கொடுத்து அடிவாங்கும் நிலை ஏற்பட்டது.

சுபத்ரா

0 Responses to பொல்லைக் கொடுத்து அடிவாங்கிய இலங்கைப் பிரதமர்: சுபத்ரா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com