Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியத் தலைவர்களுக்குப் புலிகளின் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. அங்கு அரசியல் தலைவர்களைப் படுகொலை செய்ய புலிகள் திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் மூன்று இடங்களில் புலிகளின் முகாம்கள் இரகசியமாக இயங்குகின்றன என அக்கறையுடன் கூறும் அரசு ராஜீவ்காந்தியைப் படுகொலை செய்த கே.பியை இங்கு பாதுகாத்து வைத்திருப்பது ஏன்? இந்திய அரசினால் வேண்டப்படும் கே.பியை இந்திய அரசிடம் இலங்கை ஒப்படைக்குமா? என்று கேள்வி எழுப்பினார் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.

இந்தியாவில் புலிகளின் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக இந்திய அரசு ஒரு போதும் கூறவில்லை. ஆதாரமற்ற விடயங்களைக் கூறி நாட்டு மக்களைக் குழப்பியடிக்கக்கூடாது. உண்மைக்கு மாறான இந்தத் தகவல்களை எந்த புலனாய்வுப் பிரிவினர் உங்களுக்குத் தெரிவித்தனர் என்பதை அரசு வெளிப்படையாகக் கூறுமா? என்றும் ரணில் விக்கிரமசிங்க சவால் விடுத்தார்.

நேற்று நாடாளுமன்றத்தில் அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடித்திருப்பது தொடர்பான விவாதத்தில் உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இப்படிக் கூறினார்.விவாதத்தில் தொடர்ந்து உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியவை வருமாறு:

நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டோம். எவரும் எங்கும் செல்லலாம் என்று கூறுகின்றனர். இது ஒரு பக்கத்தினருக்கு மட்டுமேஆனால், இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சிறீதரன் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களுக்கு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. ஆனால் அரசு, அவர்களுக்கு இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளை மட்டுமே வழங்கி உள்ளது. பாதுகாப்புக் குறைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்குக் கூடுதலான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.ஏற்கனவே கூட்டணி உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். அதேபோன்று எங்கள் கட்சியைச் சேர்ந்த மகேஸ்வரன் கொல்லப்பட்டார்.

இப்படுகொலைகள் தொடர்பாக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? விசாரணை குழுக்களை ஆரம்பித்துள்ளோம், விசாரணை நடத்துகின்றோம் என்று கூறுகின்றீர்கள். அந்த விசாரணைகளின் முடிவு என்ன? இப்படுகொலைகளின் பின்னணி என்ன? சூத்திரதாரிகள் யார் என்பதையும் வெளிப்படுத்தவேண்டும்.தொடர்ந்தும் இப்படியான அரசியல் படுகொலைகள் இடம்பெற இடமளிக்கக்கூடாது. போதிய பாதுகாப்பு வழங்கப்படவேண்டும். இந்தியாவில் எந்தவிதத்திலும் புலிகளின் அச்சுறுத்தல்கள் இல்லை. எந்த ஒரு முகாமும் இல்லை என்று இந்திய ஊடகங்கள் வாயிலாக அறிகின்றோம். ஆனால், அங்கு காணப்படுவது இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையிலான தகராறுகள் மட்டுமே.

பிரதமர் கூறியதுபோல் இந்தியாவில் புலிகளின் மூன்று முகாம்கள் இயங்குவது உண்மையாக இருந்தால், இவ்விடயம் தொடர்பாக இந்திய அரசுடன் பேச்சு நடத்தினீர்களா? ஏன் பேச்சு நடத்தவில்லை? உங்களுக்கு ஆதாரமற்ற தகவல்களைக் கொடுத்த புலனாய்வுப் பிரிவினர் யார்?இந்தியா மீதும், இந்தியத் தலைவர்கள் மீதும் அக்கறை கொண்டதுபோல் பேசும் அரசு ராஜீவ் காந்தியை கொலை செய்த கே.பிக்கு அடைக்கலம் அளித்துள்ளது ஏன்?இந்திய அரசினால் தேடப்படும் கே.பியை இலங்கை அரசு இந்திய அரசிடம் ஒப்படைக்குமா? என்றும் கேட்கின்றேன்.

ஒரு பக்கம் நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது என்று அரசு கூறுகின்றது. மறுபக்கம் புலிகள் மீண்டும் தலைதூக்கப் பார்க்கின்றனர். இரகசியமாக இயங்குகின்றனர். அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன என்றும் கூறுகின்றது.
ஆனால், நாட்டைப் பாதுகாக்கத் தீவிரமாக யுத்தம் புரிந்த பாதுகாப்புப் படையினரை மரக்கறி விற்கவும், கோழி மேய்க்கவும், டொல்பின் வளர்க்கவும் ஈடுபடுத்தி உள்ளது அரசு. இது பாதுகாப்புப் படையினரை கேவலப்படுத்தும் ஒரு செயலாகும்.ஜனாதிபதி கூறுவதுபோல் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட நிலையில் அவசரகாலச் சட்டத்தை நீக்கிவிடவேண்டும் என்று வலியுறுத்துகின்றேன் என்றும் ரணில் கூறினார். அதேவேளை, நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. மக்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் பெரும் துன்பம் அடைந்துள்ளனர்.அண்டைநாடுகளில் போல் இங்கும் மக்கள் கிளர்ச்சி ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொய்யான தகவல்களை வெளியிட்டு மக்களை அடக்குவதற்காகவே அரசு அவசரகாலச் சட்டத்தை நீடிக்கின்றது என்றும் ரணில் குற்றம் சுமத்தினார்.

0 Responses to ராஜீவை கொன்ற கே.பியை ஏன் பாதுகாக்கிறீர்கள்?: ரணில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com