Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உலகின் புதிய நாடு உதயம்

பதிந்தவர்: தம்பியன் 12 July 2011

வட ஆபிரிக்க நாடான சூடான் வடக்குத் தெற்காகப் பிரிந்ததால் தெற்கு சூடான் புதிய நாடாகத் தோற்றம் பெற்றுள்ளது. யூலை 2011 09ம் நாள் தன்னை தனி நாடாகப் பிரகடனம் செய்துள்ளதோடு இதன் பெயர் சவுத் சூடான் (South Sudan) என்றிருக்கும் என்று அறிவித்துள்ளது.

கடந்த முப்பது வருட காலமாக நடந்த போராட்டம் காரணமாக உலக அரங்கில் புத்தம் புதிய நாடாக தெற்கு சூடான் இடம் பெறுகிறது. உயிரிழப்புக்களின் எண்ணிக்கை பல இலட்சங்களைத் தாண்டும். இடம்பெயர்வுகளும் சொத்தழிவுகளும் எராளம். நாடு பிறந்தாலும் அது நாடாக மாறப் பல வருடம் பிடிக்கும்.

தெற்கு சூடானில் எண்ணை வளம் இருக்கிறது. மேற்கு நாடுகளும் சீனாவும் போட்டியிட்டபடி அதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளன. எண்ணை இருந்தாலும் உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகத் தெற்கு சூடான் மதிப்பிடப்படுகிறது.

2005ம் ஆண்டில் நடந்த அமைதிப் பேச்சுக்களில் எட்டப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் சுதந்திரம் பெற்ற சவுத் சூடான் பிறந்துள்ளது. பழைய சூடானில் இன, மதப் பிரச்சனைகள் குழப்பத்தை விளைவித்தன. முஸ்லிம் அரபுக்களின் பிடியில் பழைய சூடான் இயங்கியது. அதன் பெரும்பான்மையினர் கறுப்பின ஆபிரிக்கர்கள்.

பழைய சூடானில் இருந்து பிரிந்து செல்ல கறுப்பினத்தவர்களான தெற்கு சூடான் மக்கள் கடும் போர் புரிந்தனர். இவர்களில் பெரும் எண்ணிக்கையானோர் கிறிஸ்தவர்கள். மேற்கு நாடுகளின் ஆதரவு இவர்களுக்குக் கிடைத்தது. எண்ணையைத் தேடி வந்த சீனாவும் பிரிவினைக்கு ஆதரவு வழங்கியது.

நாடு பிறந்தாலும் அது எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு முடிவில்லை. அரசறிவியல் ஆய்வுகளின்படி சவுத் சூடான் இரு முக்கிய பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்க வேண்டியுள்ளது. முதலாவதாக வடக்குச் சூடானுடனான எல்லைப் பிரச்சனை. இது தீராத தலைவலியாக இருக்கும் என்பது ஆய்வுகளின் முடிவு.

எதியோப்பியாவில் இருந்து எரித்திரியா பிரிந்து தனிநாடாகிய பிறகும் எல்லைகள் காரணமாக இரு நாடுகளும் போருக்குச் சென்றுள்ளன. இயல்பு நிலை இன்னும் தோன்றவில்லை. சூடானிலும் இந்த நிலை வரலாம் என்று எதிர்வு கூறப்படுகிறது. அடுத்ததாகத் தெற்கு சூடானின் பரந்த தரைப்பரப்பை ஒன்றிணைக்கும் கட்டமைப்பு வசதிகள் மிகக் குறைந்தளவில் இருப்பதால் அவற்றை வேகமாக உருவாக்க வேண்டும்.

தெற்கு சூடானின் தலைநகராக யூபா (Juba) அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகரையும் நாட்டின் பிற பகுதிகளையும் இணைக்கும் நெடுஞ்சாலைகள், நிர்வாக அலகுகள், உள்ளாட்சி மன்றங்கள் உருவாக்கப்படவில்லை. கிராமங்கள் ஒன்றோடொன்று தொடுக்கப்படவில்லை. மக்களிடையே இணைப்புப் பாலம் இல்லை.

நாட்டின் பரந்துபட்ட பாகங்களை இணைப்பதற்குத் தற்சமயத்தில் வானொலிப் பெட்டி ஒன்று தான் இருக்கிறது. மின்சாரம் சரிவர இயங்காத படியால் பற்றி மாத்திரம் பயன்பாட்டில் உள்ளது. இதைவிட உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய மக்களுக்கு அத்தியாவசியமான மூன்று தேவைகள் இனங்காணப்பட்டுள்ளன.

அடிப்படைக் கல்வி, சுகாதார சேவைகள், தரமான குடிநீர் இந்த மூன்றையும் உடனடியாகப் புதிதாக அமைக்கப்பட்ட அரசு கவனிக்க வேண்டும். இடம் பெயர்ந்தோருக்கான குடியேற்ற வசதிகள் செய்யப்பட்டு குடியமர்த்தல் துரிதகதியில் நடத்தல் அவசியம்.

நாட்டையும் மக்களையும் ஒன்றிணைத்தல் (Uniting People And Country) இது தான் உடனடித் தேவை என்று அரசியல் விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தீர்க்கப்படாத சமூகப் பிரச்சினையாகத் தொடர்கிறது.

சுருக்கமாகக் கூறுவதாயின் ஒரு புதிய ஆபிரிக்க நாடு எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளையும் சவுத் சூடான் எதிர்கொள்கிறது. இந்த நாட்டின் எண்ணை வளத்தைக் கையாளும் தொழில் நுட்பத் திறன் அதனிடம் இல்லாத படியால் வரப்பிரசாதமான எண்ணை சாபக்கேடாகவும் இடம்பெறக் கூடும்.

0 Responses to உலகின் புதிய நாடு உதயம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com