கனடா தமிழ் இளையோர் அமைப்பினால் கனடிய பல்கலைக்கழகங்களின் மட்டத்தில் ஒழுங்கமைக்கப்பட்டு நடத்தப்பட்ட ‘Transition 101’ என்னும் ஆண்டு நிகழ்வு இம்முறையும் இரண்டாவது தடவையாக ரொறன்ரோ யோர்க் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இது, சமூக தொடர்பாடல், தமிழ்த் தேசிய கட்டுமானம், தமிழ் தேசிய அடையாளங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம், தாய்மொழி மற்றும் கலாசாரம் போன்ற்றின் பேரில் தமிழ் இளையோர் அமைப்புக்கும் பல்கலைக்கழக தமிழ் மாணவர் சமூகத்துக்கும் உள்ள பங்கு தொடர்பான அறிவூட்டல் நிகழ்வாக அமைந்திருந்தது.
கடந்த ஜூலை 10, 2011, ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இந்நிகழ்வில் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் ஸ்காபுரோ வளாகம் - சென்.ஜோர்ஜ் வளாகம் - மிசிசாகா வளாகம், றையர்சன் பல்கலைக்கழகம், வோட்டர்லூ பல்கலைக்கழகம், ஒட்டாவா பல்கலைக்கழகம், கார்ல்ட்டன் பல்கலைக்கழகம், யோர்க் பல்கலைக்கழகம் மற்றும் கல்ஃப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் தமிழ் மாணவர் அமைப்புகள் கலந்துகொண்டன.
கனடா தமிழ் இளையோர் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், பழைய மணவர் பிரதிநிதிகளும் புதிதாக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் புதிய கல்வியாண்டில் பொறுப்பேற்கவுள்ள மாணவர் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டதமையைக் குறிப்பிட்டதுடன், இந்நிகழ்வு பெரும் வெற்றியளித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு குறித்துக் கருத்துத் தெரிவித்த கனடா இளையோர் அமைப்பின் பேச்சாளர் செல்வன்.பிரியந் நல்லரட்ணம், “பல்கலைக்கழக மாணவர்கள் என்ற வகையில் எமது விடுதலை தொடர்பாக குரல்கொடுக்கவும், அதற்கு எதிராக உள்ள தடைகளை நீக்குவதற்கும் எமக்கு இன்றியமையாத ஒரு பாரிய பொறுப்பு உள்ளது” எனத் தெரிவித்தார்.
இதன் முக்கிய கட்டமாக, கடந்த ஆண்டின் பிரதிநிதிகள் புதிய ஆண்டுக்கான பிரதிநிதிகளிடம் தமிழீழ தேசியக் கொடியினைக் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இக்குறியீட்டு நிகழ்வு தற்போது ஆக்கிரமிப்புக்குள்ளாகியிருக்கும் தமிழீழம், எக்காலகட்டத்திலும் தமிழ் மக்களின் அபிலாசைகளை விட்டுக்கொடுக்காது அடுத்த தலைமுறையினருக்கும் கடத்திச் செல்லப்பட வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக அமைக்கப்பட்டது என்று கனடா தமிழ் இளையோர் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
“இளைய சமூகம் என்னும் முறையில் எமது இனத்தின் அடையாளத்தை பாதுகாக்கும் முயற்சியில் நாம் ஈடுபட வேண்டும். எம் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள தடைகளைக் கண்டு பணிந்து போவதை விடுத்து, அதனை எதிர்த்துப் போராடத் துணிய வேண்டும்” என கல்ஃப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரொன்கின் கிறேசியன் தெரிவித்துள்ளார்.
முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்கள் அளப்பரிய ஈகங்களைத் தாயக விடுதலைக்காகச் செய்துள்ளார்கள். இலட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ்மக்கள் தமிழீழக் குடிமக்கள் என்ற ஒரே காரணத்துக்காக கோரமாகக் கொல்லப்பட்டுள்ளனர் என்பதையும் அவர் அப்போது நினைவுகூர்ந்தார்.
இறுதியாக, கனடா தமிழ் இளையோர் அமைப்பு ‘செவ்வேடு’ எனும் ஒரு புதிய விடயத்தையும் இந்நிகழ்வின்போது அறிமுகப்படுத்தி வைத்தது.
இந்த ஏடானது, காலத்தின் பதிவுகளையும், பல்கலைக்கழகங்களினதும், அதன் பிரதிநிதிகளினதும் கனடாவிலும் தமிழீழத்திலும் தமிழர் சமூக மேம்பாடு நோக்கிய செயற்பாடுகள் தொடர்பான விபரங்களையும் கொண்டிருக்கும். தொடர்ச்சியாக இவ்விபரங்கள் இப்புத்தகத்தில் பதியப்பட்டு வரும் எனவும் கனடா தமிழ் இளையோர் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






0 Responses to கனடிய தமிழ் மாணவர்களின் தேசிய அடையாளங்களைப் பாதுகாக்கும் நிகழ்வு (படங்கள்)