Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரிட்டன் தொலைக்காட்சியான சனல் 4 ன் இலங்கையின் கொலைக்களங்கள்' எனும் பெயரிலான காணொளி உலகின் மூலை முடுக்கு எங்கிலும் ஒளிபரப்பாகி வருகின்றது. நிர்வாணமாக்கப்பட்ட நிலையில் தலையில் துப்பாக்கிச் சூட்டைத் தாங்கிக் கிடக்கும் கைதிகளின் சடலங்களையும்...

இலங்கை இராணுவத்தினரால் கதறக் கதறக் கற்பழிக்கப்பட்டு இராணுவ ட்ரக் வண்டியொன்றில் குவிக்கப்பட்டிருந்த பெண்களின் இறந்த உடல்களையும் மற்றும் நடந்தேறிய உள்நாட்டு இறுதிக் கட்ட போரில் இலங்கையின் ஆயுதப் படைகளால் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் ஏனைய அக்கிரமங்களையும் சித்திரிப்பனவாக அவை அமைந்துள்ளன.

இவ்வாறு த வீக் எண்ட் லீடர் டொட் கொம் இணையத்தளத்தில் சிரேஷ்ட ஊடகவியலாளரான எம்.ஜி. தேவசாயம் தெவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தக் காட்சிகளை சர்வதேச தடவியல் நிபுணரும் பயங்கரமானவை என அத்தாட்சிப்படுத்திய நிலையில், இத்தகைய கொடூரங்களைப் புரிந்துள்ளதாகக் கூறப்படும் இலங்கையின் ஆயுதப் படைகளுக்கு ஆயுத உதவி மற்றும் யுத்த நிபுணத்துவ உதவிகளை வழங்கிய நாடாக இந்தியாவை உலக நாடுகள் உற்று நோக்கத் தொடங்கியுள்ளன.

இலங்கையில் சிறுபான்மை இனத்தவரான தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு இழைத்த அக்கிரமங்களுக்கு உலகளாவிய ரீதியில் எதிர்ப்பலைகள் உருவாகியுள்ள இந் நேரத்திலும் இந்தியா இலங்கை அரசு புரிந்துள்ள தமிழர் படுகொலைகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளும் அடையாளமாக தொடர்ந்தும் மௌனம் காத்தே வந்துள்ளது.

இதுகுறித்து சர்வதேசம் பொங்கியெழுந்துள்ள நிலையில் அதன் பொறுமையைச் சோதிக்குமளவுக்கு இந்தியா தொடர்ந்தும் மௌனம் சாதித்தே வருகின்றது.

கடந்த 2009 மே மாதம் நடைபெற்ற போரில் வெற்றிக் களிப்படைந்த இலங்கை ஜனாதிபதி இந்தியாவின் ஆசீர்வாதத்துடன்தான் தமிழர் போராட்டத்தைத் தன்னால் வெற்றிகொள்ள முடிந்ததாக பகிரங்கமாக தெரிவித்திருந்தமை தெரிந்ததே.

இந்த இன அழிப்புப் போருக்குப் பின்னர் ஈழத் தமிழர்கள் சிங்கள அரசுக்கு அடிமை குடிமைகளாக்கப்பட்டுள்ள நிலையை முன்னாள் பிரித்தானிய மற்றும் பிரான்ஸிய முன்னாள் வெளிநாட்டமைச்சர்களான டேவிட் மிலிபான்ட்டும், கௌச்னரும் இலங்கைக்கான தமது விஜயங்களின் பின்னர் உறுதிப்படுத்தியிருந்தனர்.

தமிழர்களின் வாழ்க்கை நான்காம், ஐந்தாம் தரத்தினுள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாழ்க்கையாகவே கருதப்படுகின்றது.

உலக நாடுகள் எத்தகைய வெளிநாட்டுக் கொள்கைகளைக் கொண்டிருந்தாலும், மனிதாபிமானமற்ற இத்தகைய அக்கிரமங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு அணிதிரள வேண்டும்.

இந்தியா இந்தக் கொடூரங்களுக்கும், ஈழத் தமிழர்களின் துன்ப துயரங்களுக்கும் எவ்வாறு துணைபோனதென்பது பற்றிய கூறப்படாத கதை ஒன்றுள்ளது.

கடந்த 2005 ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ மிகச் சொற்பமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தார்.

ஜனாதிபதியாக வந்ததவுடன் இந்திய அரசினதும் அதன் தலைமைத்துவதுடனும் இணைந்து தனது நீண்ட நாளைய போர்க் கனவை நனவாக்கினார். ஆயினும், அந்த முயற்சி அடுத்தடுத்து தோற்கடிக்கப்பட்டே வந்ததுடன் சர்வதேச கண்டனங்களுக்கும் உள்ளானது. மேலும் தமிழ் நாட்டில் உள்ள தமிழ் சமூகத்தின் பாதுகாப்புடன் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண இரு நாடுகளுக்கும் இடையே ஒரு பாலமாக செயற்பட திட்டம் போட்டார்.

கொழும்பின் தூண்டுதலின் பிரகாரம் இளைப்பாறிய அரச சேவையாளர், ஊடகவியலாளர்கள் மற்றும் யுத்த நிபுணர்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த அந்தச் சிறிய குழுவின் ஏற்பாட்டாளராக நானே செயற்பட்டேன்.

கடந்த 2007 மே 10ல் அக்குழுவின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகர் ஒருவருடனான ஆரம்பக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். இக் கூட்டத்தில் இரு தரப்பும் ஏற்றுக் கொள்ளும் அரசியல் தீர்வொன்றின் மூலமே இனப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அத்துடன் 2007 ஜனவரி 17ல் இந்தக் குழு மஹிந்த ராஜபக்ஷவையும், அவன் உயர் மட்டக் குழுவினரையும் சந்தித்த போது இலங்கைக்குள் இருந்தே இனப்பிரச்சினைக்கான தீர்வு வரவேண்டியது அவசியம். அதேவேளை, சர்வதேச மட்டத்தில் குறிப்பாக இந்தியாவின் அபிப்பிராயங்களும் உள்வாங்கப்பட வேண்டுமென்ற எனது கருத்தை ஜனாதிபதி ராஜபக்ஷ ஏற்றிருந்தார்.

இந்தச் சமரசப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் தமிழ் மக்களுக்கு குறைந்தளவிலான வட கிழக்கு இணைந்த சுயாட்சி யோசனைகளை குறைகூறும் வகையில் மஹிந்த ராஜபக்ஷ பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து இந்தக் குழு ராஜபக்ஷவின் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் மட்டத்தில் கலந்துரையாடி இப்பிரச்சினைக்கு தீர்வுகாணவென மாற்று யோசனைகள் பலவற்றை ஏற்றுக் கொண்டது.

கடந்த 2008 மார்ச்சில் இறுதித் தீர்மானம் ஒன்றை எடுக்கும் முகமாக ஜனாதிபதி, அரசியலமைப்பு மற்றும் தேசிய நல்லிணக்க விவகார அமைச்சர், மற்றும் அரசகரும மொழி ஆணைக்குழுத் தலைவர் ஆகியோருடனான முக்கிய மாநாடு ஒன்று கொழும்பில் நடந்தது.

கொழும்பிலுள்ள இந்திய பிரதி உயர்ஸ்தானிகரான ஏ. மாணிக்கம் நான் தங்கியிருந்த ஹோட்டலில் பிற்பகல் 5 மணியளவில் வந்து சந்திப்பதற்கு ஏற்பாடாகி இருந்தது. ஆயினும் அவர் என்னை வந்து சந்திக்கவே இல்லை.

அதிகாரம் அளிக்கப்படாதவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடத்தியமைக்காக இந்திய உயர்ஸ்தானிகராலயம் இலங்கை ஜனாதிபதிக் குழுவினரிடம் கண்டனம் தெரிவித்திருந்தது. இதுபற்றி நான் எனது முன்னாள் சகாவும், பிரதமரின் தற்போதைய பிரதான செயலாளருமான .கே.ஏ. நாயருக்கு 2008 ஏப்ரல் மாதம் முதலாம் திகதியன்று கடிதம் ஒன்றை எழுதியிருந்தேன். அது எங்கள் பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் மற்றும் அரசியல் தீர்வை நோக்கிய செயற்பாட்டு நிகழ்ச்சி நிரல் பற்றியெல்லாம் குறிப்பிடப்பட்டிருந்தது.

நீண்டகாலமாக புரையோடிப்போன இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்கும் இந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைக்கு ஆதரவு தருமாறு இந்திய அரசை இக்குழுவானது கேட்டிருந்தது. ஆயினும் அதற்கு சாதகமான பதில் ஏதும் கிடைத்திருக்கவில்லை.

இந்த விவகாரத்தில் புதுடில்லி இலங்கை மீது சில அழுத்தங்களைப் பிரயோகித்திருந்தால் நிச்சயமாக ஈழத் தமிழர்கள் தன்மானத்துடனும், சுய கௌரவத்துடனும் தலைநிமிர்ந்து வாழும் நிலை தோன்றியிருந்திருக்கும். மாறாக தொட்டிலையும் ஆட்டி குழந்தையையும் கிள்ளிவிடும் சூழ்ச்சிகரமான நடவடிக்கையிலேயே புதுடில்லி தமிழர்கள் மீதான கொடும் நிகழ்வுகளுக்கு துணைபோயுள்ளதுடன் மௌனம் காத்தும் வருகிறது.

இத்தனை கொடூரங்களுக்கும் முக்கிய பொறுப்பாளியான ராஜபக்ஷ அன்ட் கம்பனி போர்க் குற்றங்களுக்கும் இன அழிப்புக்குமென சர்வதேச நீதிமன்றத்தில் தலைகுனிந்து நிற்கப்போவது வெகு தொலைவில் இல்லை.

அப்போது இலங்கை அரசுக்கு சேவகம் புரிந்து வரும் புதுடில்லிக் கனவான்களும், மனிதாபிமானமற்ற கொடூரங்களுக்கு பொறுப்புக்கூறும் கடப்பாட்டிலிருந்து தப்பிக்கவே முடியாமலும் போகலாம்.

0 Responses to மறைகரமாக விளங்கும் இந்தியாவை அம்பலமாக்கும் ''இலங்கையின் கொலைக்களங்கள்''

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com