Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எறும்பு ஊரக் கல்லும் தேயும் என்றொரு பழமொழி உண்டு.

அதுபோன்றே தான் சனல்4 வெளியிட்ட இலங்கையின் கொலைக்களங்கள் அடங்கிய ஆவணப்படம் வெளியாகிய பின்னர் நாளுக்கு நாள் தமிழர்கள் மீதான கரிசனை உலகெங்கும் அதிகரித்து வருகிறது.

ஊடகங்கள் என்ற வகையில் பிட்டனில் உள்ள சனல்4 தொலைக்காட்சியிலேயே முதன் முறையாக கடந்த மாதம் 14ஆம் திகதி இந்த ஆவணப்படம் ஒளிபரப்பானது. அதை பிட்டனில் உள்ள சுமார் ஒரு மில்லியன் மக்கள் பார்வையிட்டனர்.

பின்னர் அவுஸ்ரேலியாவின் ஏ.பி.சி. தொலைக்காட்சியும், இந்தியாவின் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சியும் இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்பின. இவை பல கோடிக்கணக்கான மக்களிடையே போர்க் குற்றக் காட்சிகளை உலகெங்கும் கொண்டு சென்றுள்ளன.

சனல்4 தொலைக்காட்சியின் இந்த வீடியோ இப்போது உலகில் மிகவும் பிரபல்யமானதொன்றாக மாறிவிட்டது.

இந்தக் காட்சிகள் ஒளிபரப்பான பின்னர் பல மாற்றங்கள் உலகில் இடம்பெற்று வருகின்றன. அவுஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் விடுக்கப்பட்ட போர்க் குற்ற விசாரணை அழைப்பு, இந்தியாவில் இருந்து இதுபற்றி விசாக்கப்பட வேண்டும் என்று வெளியான கருத்து ஆகியவை மட்டுமின்றி அமெரிக்கா நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதையே வலியுறுத்தியுள்ளனர்.

அமெரிக்க காங்கிரஸின் கெப்பிற்றல் நிலையத்தில் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்ட பின்னர், ஸ்ரீலங்காவுக்கு ஆதரவாக இருந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிராக மாறியுள்ளனர்.

இவையெல்லாம் இலங்கை அரசுக்கு நெருக்கடியையும், குழப்பத்தையும் ஏற்படுத்துகின்ற விடயங்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து பல ஆண்டுகளாக சொல்லி வந்தபோதும், அதைக் காது கொடுத்துக் கேட்பதற்கே தயங்கிய உலகம் இன்று தனது போக்கில் இருந்து மாறத் தொடங்கியுள்ளது.

அந்த மாற்றத்துக்கான காரணிகளில் இந்த சனல்4 வீடியோவும் ஒன்று.

போருக்கு முன்னர், போர் நடந்து கொண்டிருந்த போது, போரின் கடைசிக் கட்டத்தில் எல்லாம் தமிழர்கள் சார்பில் அபாயக்குரல் எழுப்பப்பட்ட போது உலகின் எந்தவொரு முலையில் இருந்தும் அதற்கு ஆதரவுக்கரம் கொடுக்கப்படவில்லை.

எல்லா நாடுகளும் , அமைப்புகளுமே முள்ளிவாய்க்கால் பேரவலத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றன.

ஆயிரக்கணக்கானவர்கள் அங்கு கொல்லப்பட்டனர் என்ற தகவல்கள் வெளியாகிய போதும் உலகம் அசைந்து கொடுக்கவில்லை.

கொடூரமான முறையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில்தான். இந்தப் படுகொலைகள், அநீதிகளுக்கெல்லாம் நியாயம் தேட வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

இந்த உலக ஆதரவுக்காக தமிழர்கள் ஏங்கி நின்ற போதும் அவர்களுக்கான தார்மீக ஆதரவு கூட முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழும்வரை கிடைக்கவில்லை.

இப்போது போரின் கடைசியில் நடந்த அநீதிகளுக்கு நியாயம்கேட்கும் காலம் வந்துள்ளது போலுள்ளது.

ஆனால், இலங்கை அரசாங்கமோ இந்த வீடியோ போலியானது, பொய்யானது என்று கதைவிட்டுக் கொண்டிருக்கிறது.

ஏ.பி.சி. தொலைக்காட்சியிலும், ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சியிலும் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பாகப் போகிறது என்றவுடன் இலங்கை அரசு வேகமாக ஒரு வீடியோ தொகுப்பை தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கியது.

அதுவே உண்மையானது, மாற்றம் செய்யப்படாதது என்று அரசாங்கம் கூறியது.

அதைக் கொண்டு சனல்4 ஆவணப்படம் போலியானது என நிரூபிப்போம் என்று இலங்கை அரசாங்கம் கூறியது. இப்போதும் சில அரசாங்க தரப்பினர் அதுபற்றி பிரசாரங்கள் மேற்கொள்ளவே செய்கின்றனர்.

முன்னதாக இது உண்மையானது என்று கூறிய அரசாங்கம் இப்போது அதை ஆய்வு செய்து வருகிறோம் என்கிறது.

அந்த வீடியோ உண்மையானது என்றால் அதனைப் பெரும் சவாலாகக் கருதி அரசாங்கம் சர்வதேச சகத்தின் முன் கொண்டு சென்றிருக்க முடியும்.

ஆனால், இற்றைவரை அதுவே உண்மையானது என்று காண்பிப்பதற்கான எந்த ஆதாரத்தையும் அரசினால் திரட்ட முடியவில்லை.

அப்படி ஆதாரங்கள் கிடைத்திருந்தால் இந்தளவுக்கு சனல் 4ஐ மட்டுமன்றி ஐ.நா.வையும் வீதிக்கு இழுத்திருக்கும் இலங்கை அரசாங்கம். அவற்றின் மீது அந்தளவுக்கு ஆத்திரம் இருக்கிறது.

உண்மையான வீடியோ தம்மிடம் உள்ளதாகக் கூறியுள்ள இலங்கை அரசினால் அதனை நிரூபிக்க முடியாத நிலை தோன்றியுள்ளது. இது ஒருவகையில் இலங்கை அரசுக்கு பின்னடைவுதான்.

ஆனால், சர்வதேச சமுகம் இதனைக் கண்டு கொள்ளவேயில்லை என்பதுதான் முக்கியமானது. உண்மையான வீடியோ தம்மிடம் உள்ளது என்று இலங்கை அரசு கூறிய பின்னர்தான் அந்த ஆவணப்படம் பலகோடி மக்கள் மத்தியில் ஒளிபரப்பப்பட்டது. உண்மையான வீடியோ வைத்திருப்பதாகக் கூறும் அரசாங்கம் அதை நிரூபித்து உண்மையை வெளிப்படுத்தியிருக்கலாம்.

அதைச் செய்யாமல் தொலைக்காட்சிகளில் ஆவணப்படம் ஒளிபரப்பாவதைத் தடுக்கவே அரசாங்கம் முயன்றது.

அது முடியாது போய்விட்டது. இதனால் அரசாங்கம் கூறும் உண்மையான வீடியோ மதிப்பிழந்துவிட்டது. அத்துடன் அரசாங்கத்தின் இமேஜையும் இது உடைத்து விட்டது.

உண்மையான வீடியோ தம்மிடம் இருப்பதாக அறிவித்ததன் முலம் அரசாங்கம் இதை பிரபல்யப்படுத்திக் கொண்டதுதான் மிச்சம்.

இப்போது உலகில் கோடிக்கணக்கான மக்கள் மத்தியில் இந்த வீடியோவின் தாக்கம் எதிரொலிக்கிறது.

ஆதரவாக நின்ற அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட எதிராக மாறுகின்றனர். இவையெல்லாம் இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்காத விடயங்கள்தான்.

ஆனால், காலம் தாழ்த்தியேனும் தமிழர் தரப்பின் நியாயங்களையும் அவலங்களையும் உலகம் காதுகொடுத்துக் கேட்கும் நிலைக்கு வந்துள்ளது. இது ஒருவகையில் மிகப்பெரிய ஆறுதலான விடயம்தான்.

ஆனால், இந்த நீதிக்கான போராட்டத்தில் தமிழர் தரப்பு ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களையும் காவு கொடுத்து விட்டு இரண்டு ஆண்டுகள் காத்திருக்கவும் நேரிடுள்ளது.

-கபில்

0 Responses to தமிழர்கள் மீது திரும்பும் சர்வதேசத்தின் கவனம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com