Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மே தின வாழ்த்து: வைகோ

பதிந்தவர்: தம்பியன் 01 May 2017

இன்று உழைப்பாளர் தினமான மே ஒன்றாம் திகதியை முன்னிட்டு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மக்களுக்கு வாழ்த்து செய்தி அறிவித்துள்ளார்.

மனிதகுலம் இயங்குவதற்கும் வாழ்வதற்கும் அடிப்படை உழைக்கும் மக்களின் கரங்கள்தாம். தானியங்களை, காய்கறிகளை விளைவித்து உணவாக்கித் தந்து உயிர்களை வாழச் செய்வது உழைப்பாளர்களின் வியர்வைத் துளிகள்தான். வசிப்பதற்கு வீடுகளையும், வழிபடுவதற்கு ஆலயங்களையும், பயணிப்பதற்கு வாகனங்களையும் உருவாக்கித் தருவதும் தொழிலாளியின் உழைப்புதான்.

1886-இல் சிகாகோ நகரத்தில் மே, 4 ஆம் நாள் எட்டுமணி நேர வேலை எனத் தொழிலாளர்கள் எழுப்பிய உரிமை முழக்கம், அதிகார வர்க்கம் துப்பாக்கிக் குண்டுகளை ஏவக் காரணமாயிற்று. தொழிலாளர்கள் உயிர்ப் பலி ஆயினர். வைக்கோல் சந்தைக் கிளர்ச்சியில் குற்றம்சாட்டப்பட்ட ஜார்ஜ் எங்கெல், அடால்ப் பிஷர், ஆல்பர்ட் பார்சன்ஸ், அகஸ்ட் ஸ்பைஸ் ஆகிய நான்கு பேரும் தூக்கில் இடப்படுவதற்கு முன்பு எங்கள் உயிர் பறிப்பது குறித்து எழும் அடக்குமுறை அட்டகாச ஆரவாரத்தின் ஒலியை விட எங்கள் மரணத்தின் நிசப்தம்
எதிர்காலத்தில் மிக வலிமையாக இருக்கும் என்று சொன்ன வார்த்தைகள் அவர்களது கல்லறையில் பொறிக்கப்பட்டுள்ளன.

இன்றைக்கு மே தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகின்றது.

மாஸ்கோ மக்கள் பேரணி (Moscow Mob Parade)என்று ஆங்கிலத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவராக எழுதிய கட்டுரை காரல் மார்க்சின் உபரி மதிப்புத் தத்துவத்தை உள்வாங்கிற்று.

உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமை நாளாகிய மே தினத்தில் தமிழகத்தில் அல்லல்படும் ஆலைத் தொழிலாளர்களும், விவசாயத் தொழிலாளர்களும் இடர்களில் இருந்து விடுபட்டு மகிழ்வுடன் வாழும் நிலை மலரட்டும். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

புழல் சிறையில் தம்மை சந்திக்க வந்த வழக்கறிஞர் கோ.நன்மாறன் அவர்களிடம் வைகோ அவர்கள் கூறிய இந்தக் கருத்துக்கள் இந்த அறிக்கையாக வெளியிடப்படுகின்றது.

0 Responses to மே தின வாழ்த்து: வைகோ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com