Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காயாத கண்ணீர் (சிறுகதை)

பதிந்தவர்: ஈழப்பிரியா 18 July 2011

பல இடப்பெயர்வுகளைச் சந்தித்து அனேக மருத்தவ உபகரணங்களையும் இழந்து வன்னிப்போரின் இறுதிநாட்களிலும் இயங்கிக்கொண்டிருந்த ஒரேயொரு மருத்துவமனை அது. அங்கு மண்போட்டால் மண் விழாத அளவிற்கு நோயாளிகள் நிறைந்து வழிந்தனர்.

ஆனாலும் அதனை சமாளிக்கும் அளவிற்கு மருத்துவ ஊழியர்களோ, வைத்தியர்களோ.மருந்துகளோ இருக்கவில்லை. பீரங்கி வாயினில் புறா கூண்டினைக்கட்டி குடிபுகுந்து வாழ்வதைப்போலவே மருத்துவமனையின் சூழலும் இருந்தது.

மருத்துவமனையின் அமைதி காணாமல்போயிருந்தது. மக்களின் அலறல் ஒலிகள் காதைப்பிய்த்துக்கொண்டிருதன. அந்த சோகத்தணல் பீரங்கி வேட்டுக்களைவிட மோசமாக மனதைத் தாக்கின.

அப்போது மருத்துவ உதவியாளர் நிலா சத்திர சிகிச்சை அறையைவிட்டு வெளியில் வந்தாள். தறப்பாளினால் போடப்பட்டும், சன்னங்களால் சல்லடையாக்கப்பட்டும் கிடந்த அனுமதிக்கும் விடுதியில் நடுத்தரவயது மதிக்கத்தக்க தாயொருவர் வயிற்றில் காயத்துடன் குடல்கள் வெளியில் தெரிய போடப்பட்டிருந்தாள்;.

காயமடைந்த பலரையும்தாண்டி அம்மாவின் நிலமை மோசமாக இருக்கும் என எண்ணியவாறு அங்காங்கே கிடந்த இறந்தவர்களின் உடலையும் தாண்டி அம்மாவின் அருகில் சென்றாள்.

இறந்தவர்களின் உடலைக்கூட அகற்றமுடியாத சூழல். வெடியோசைகள் இடைவெளியற்று தொடர்ந்து கொண்டிருந்தன.

யாரினது உயிரிற்கும் உத்தரவாதம் இருக்கவில்லை.

“என்ர பிள்ளை பிள்ளை” என்றே காயமடைந்திருந்த அந்த அம்மா முனகிக்கொண்டிருந்தாள். குருதி அதிகளவு வெளியேறி உடம்பு சுண்டி சிவந்திருந்தது.

கை கால் குளிர்ந்து நடுங்கியது. மார்பை மறைக்க ஓர் கிழிந்த சட்டையும் உட்பாவாடையும் அணிந்திருந்தாள். கைகளில் மட்டும் ஒரு சிறிய பையனின் படம் வைத்து இறுகப்பற்றியிருந்தாள். அதை நிலாவிடம் காட்டி ஏதோ சொல்ல துடித்தாள். முடியவில்லை.

உடல் பலம் இழந்திருந்தது. எவ்வளவோ கத்த முயற்சித்தும் குரல் வெளியே ஒலிக்கவில்லை. நிலா அந்த அம்மாவின் குருதியை இரத்த வங்கிக்கு பரிசோதனைக்காக அனுப்பிவிட்டு வேகமானாள்.

மூன்று சேலைன்களை வென்புளோன் ஊசியுடாக வேகமாக ஏற்றினாள். மெல்ல மெல்ல அம்மாவும் மீண்டும் உயிர் பெறத் தொடங்கினாள். ஊசி மருந்துகளையும் ஏற்றினாள். பதிந்த மாமரக்கொப்பொன்றில் சேலைன் ஒன்றைக்கட்டிவிட்டு மெதுவாக போகவிட்டாள்.

முனகிக்கொண்டிருந்த அம்மாவிற்கு சற்று உடலில் தென்பு வர

“தங்கச்சி என்ர மூன்று வயதுப்பிள்ளையை காணவில்லை. நான் காயப்பட்டவுடன் ஆரோ என்னை இங்கு கொண்டு வந்திட்டாங்கள்” என்று அம்மா பல முறை கூறினாள்.

ஆனாலும் அவளிற்கு ஆறுதல்கூற அங்கு யாரும் இருக்கவில்லை. காரணம் எல்லோருமே அந்த நிலையை அடைந்திருந்த படியாலேயே ஆகும். எல்லா இடங்களிலும் இதே ஓலம்தான்.

அம்மாவை சத்திர சிகிச்சை கூடத்திற்கு கொண்டுசெல்ல முனைந்தபோது அம்மா வரமறுத்தாள்.

‘என்ர பிள்ளை வந்தால்தான் நான்வருவேன்’ என்று அம்மா கெஞ்சினாள். படார் என்ற சத்தத்துடன் விழுந்த எறிகணையால் அந்த இடமே புகைமண்டலமாகியது. நிலாவும் கண்களை மூடிக்கொண்டு விழுந்தெழுந்தாள்.

அம்மாவின் சேலைன் போத்தலில் இருந்த சேலைனும் நிலத்தில் ஊற்றியது. நிமிர்ந்து பார்த்தபோதுதான் தெரிந்தது சேலைன் போத்தலும் காயப்பட்டிருந்தது.

ஒரு சிறிது நேர அமைதியின்பின் மீண்டும் மருத்துவமனையில் ஆரவாரம் மரண ஓலங்கள் தொடர்ந்தன.

‘அய்யோ அய்யோ இது என்ன அநியாயம்.’’ என்று ஓர் பெண் விகாரமாய் தலையிலே கைகளை வைத்தபடி அழுதாள். அவள் அருகில் தலை சிதைந்த நிலையில் ஓர் பெண்ணின் சடலம்.

இன்னொருவர் இறந்துபோன தன் பச்சிளம் பாலகனை மடியில் வைத்து கதறினார். இன்னும் சிலர் சடலங்களிற்கும் காயப்பட்டவர்களிற்கும் இடையில் தமது உறவுகளை பால்தேடி அலையும் பசுக்கன்றுபோல் அந்தரித்துத்திரிந்தார்கள்.

ஆனால் அம்மா இன்னும் ஒப்பிறேசனுக்கு சம்மதிக்கவில்லை. நிலாவிற்கு திடீரென வந்த செய்தி தலைவிறைக்க வைத்ததோடு உலகமே இருண்டு போனதுபோல உணர்ந்தாள். அவள் கண்கள் கண்ணீரில் மிதந்தன.

தன்னுடன் மருத்துவப்பணி புரிந்துகொண்டிருந்த அவள் உயிர்த்தோழி காயமடைந்து இறந்து விட்டதை மருத்துவமனையில் பேசிக்கொண்டார்கள்.

அந்தநேரத்தில் ஏற்பட்ட சோக உணர்வு இனிமேல் ஓர் எதிர்காலத்தை நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு மனம் சின்னாபின்னமாகியிருந்தது.

வேதனை, கோபம் போன்ற உணர்ச்சிகள் ததும்ப கண்களில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டு மீண்டும் தன்கடமைக்குத்தயாரானாள். என்ன நினைத்தாளோ தெரியவில்லை, அம்மாவிடம் சென்றாள்.

‘உங்கள் பிள்ளையின் பெயரைச் சொல்லுங்கள். மனிதநேய உதவிசெய்யும் குழுக்களிடம் கொடுக்கிறேன். அவர்கள் தேடித்தருவார்கள்’ என்று சற்று கடுப்பான குரலில் கூறினாள்.

அம்மா சொன்னா “நான் காயத்தோடையும் பிள்ளையைத் தேடித்திரிஞ்சன். மயங்கினாப்பிறகுதான் ஆரோ இங்க கொண்டு வந்து சேர்த்திருக்கினம்”;.

“சரி அம்மா நீங்க உயிரோட இருக்க உடனடி ஒப்பிரேசன் தேவை” என்றவாறு அம்மாவின் பதிலுக்காய் காத்திருக்காமல் அம்மாவைத் தூக்கி கட்டிலில் ஏற்றினார்கள்.

அம்மாவிற்கு குடலில், ஈரலில், சிறுநீரகத்தில் என பாரிய காயங்கள் இருந்தமையால் சத்திர சிகிச்சையின்பின் அவசர சிகிச்சைவிடுதிக்கு அனுப்பப்பட்டாள்.

நள்ளிரவைத்தாண்டியும் சிறிய சத்திர சிகிச்சைக்கூடம் இயங்கிக்கொண்டுதான் இருந்தது. இரவைப் பகலாக்கி உறக்கத்தை தொலைத்து உணவுகூட இன்றி அங்கு நின்ற மருத்துவ ஊழியர்கள் மனிதநேயத்துடன் தங்களால் இயன்ற வரை உழைத்ததை யாராலும் மறுக்க முடியாதுதான்.

அவசரசிகிச்சை விடுதியில் தலைக்காயம், வயிற்றுக்காயம், நெஞ்சுக்காயம் என்று கட்டில்களின் எண்ணிக்கையையும் தாண்டி நிலத்திலும் வரிசைப்படுத்தப் பட்டிருந்தார்கள்.

மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலைக்கு அனுப்புவதற்கான கப்பலும் நீண்ட நாட்களாக வராமையால் நோயாளர்களை பராமரிப்பதில் மருத்துவமனை ஊழியர்கள் கடும் சிரமப்பட்டார்கள்.

எல்லோரிற்கும் சேலைன் ஏறிக்கொண்டிருந்தது. பலருக்கு இரத்தமும் ஏற்றப்பட்டிருந்தது. எல்லாவற்றையும் மேவி எந்தநிமிடம் என்ன நடக்குமோ என்ற பரபரப்பு எல்லோர் மனங்களிலும் திகிலூட்டிக்கொண்டிருந்தது.

இரவோடு இரவாக வந்த செய்தியால் கும் இருட்டிலும் நிலாவின் மனம் வெளித்தது. கொடூரமான அந்த வேளையிலும் அவர்களிற்கு அந்தச்செய்தி தேனாய் இனித்தது.

“நாளைக்கு ஐ.சி.ஆர்.சி.யின் கப்பல் வருகுதாம்.” என்று நிலாவின் சகதோழன் ஒருவன் பெரிதாக சொல்லியபடி வந்தான்.

எத்தனையோ நாட்களாக நோயாளரை ஏற்ற வருவதாகச்சொல்லி இலவுகாத்த கிளிபோல ஏமாந்த நாட்களைப்போல்தான் நாளைய கப்பலின் வருகையும் ஆகுமோ என்று நிலா பதிலுக்கு வினாவினாள்.

மருத்துவமனையில்கூட காயமடைந்த நிலையில் சிகிச்சைபெற்று கொண்டிருந்தபோதே மீண்டும் காயமடைந்து இறந்த பரிதாபநிலை எத்தனையோ அவள் முன்னே நடந்தேறின.

மருந்துகளும் முடிவடைந்திருந்தன. அப்போது சிறு ரோச் வெளிச்சத்துடன் வந்த அந்த மருத்துவமனை வைத்தியர் நிலாவிடம்

“ஐந்நூறு பேரை மட்டும்தான் அனுப்பலாம். அதற்கு ஏற்றவாறு முக்கியமானவர்களை தெரிவு செய்வம்” என்று நோயாளர்களின் ரிக்கற்றுகளைப் பார்வையிட்டு உறுதி செய்தார்.

நேரம் அதிகாலை மூன்று மணி. மக்கள் சந்தோசமாக வாழ்ந்த அழகிய கிராமத்தில்தான் அந்த மருத்துவமனையிருதது. ஆனாலும் விடியலைகூற சேவல்கள் இருக்கவில்லை. மாறாக வெடியோசைகள்தான் நித்திய பூசையாக முழங்கியன.

கப்பல் வருகின்றது என்ற செய்தி பரவலடைய மக்கள், நான் முந்தி நீ முந்தி என்று அனுமதியைப்பெறுவதற்கு முண்டியடித்தார்கள். ஆனாலும் மூன்றுமாதகால இடைவெளியில் வரும் கப்பலில் அவசர நோயாளர்களை அனுப்புவதற்கே இடம் போதவில்லை. காயப்பட்ட எல்லோரையும் எவ்வாறு அனுப்பிவைக்க முடியும்?

சிவப்பு பேனாவால் அடையாளப்படுத்தி வைத்திருந்த அந்த அம்மாவின் ரிக்கற்றை வைத்தியரிடம் கொடுத்த நிலா பதிலுக்கு காத்திராமல்

‘இந்த அம்மாவுக்கு வயிற்றின் உள்ளுறுப்புக்களில் சேதம். கட்டாயம் அனுப்பணும்.” என்றவளை முறைத்துப்பார்த்த அம்மா இயலாத காயத்துடனும் கட்டிலை விட்டு எழுந்து

“டொக்டர் என்ர பிள்ளை இல்லாம நான் போகமாட்டன். செத்தாலும் பரவாயில்லை. நான் போகமாட்டன்” என்றாள் திடமாக. நிலாவிற்கு அம்மாவின் முகத்தைப்பார்க்க உள்ளம் நடுங்கியது. பட்டென நெஞ்சில் வலித்தது. ஏனெனில் நிலாவும் தனது இரண்டு பிள்ளைகளைப்பிரிந்து நெடுநாளாகிவிட்டன.

என்ன செய்வார்களோ? எப்படி இருப்பார்களோ? என்று அவர்களைப்பற்றி யோசிக்கும் நிலை நிலாவிற்கு இருக்கவில்லை. ஓய்வின்றிய தொடர் வேலைகள், நாளுக்குநாள் அவள் கண்முன்னே நடக்கும் கொடூர சாவுகள் எல்லாவற்றிலும் அவள் சலித்துப்போய்விட்டாள்.

தன் பிள்ளைகள் உயிருடன் எங்கோ இருப்பார்கள், மீண்டும் எனக்கொரு பிறப்பிருந்தால் அவர்களுடன் வாழவிடு ஆண்டவனே என்றுதான் மனதுக்குள் வேண்டுவாள். இந்தப்பிறப்பில் ஆண்டவனால் கூட யாரையும் காப்பாற்ற முடியாது என்ற பிரமை அவள் மனதில் பதிந்திருந்தது.

பக்கத்தில் இருந்த நோயாளி வைத்தியரின் காலைப்பிடித்து

“என்ரபிள்ளைக்கு ரெண்டு கால்லயும் முறிவுதானே டொக்டர். அந்த அம்மான்ர இடத்துக்கு என்னை அனுப்புங்கோவன்” என கெஞ்சவும் பட்டென கடந்த நினைவிலிருந்து தன் நினைவுக்கு வந்தாள் நிலா.

உண்மையிலேயே அந்த நோயாளிக்கும் மேலதிக சிகிச்சை தேவைதான். அதைவிட உயிருக்காக போராடும் பலர் இருக்கிறார்கள்.

அவர்களிற்கே கப்பலில் இடம் போதாமல் இருந்தமையால் அவர்கள் மனங்களைக் கல்லாக்கி ஆறுதல்கூட கூற காலமின்றி அவர்களைக்கடந்து அடுத்த நோயாளியைப்பார்க்க சென்றார்கள். மருத்துவர்களின் ஒவ்வொரு நிமிடத்திலும் ஒவ்வொரு உயிர்கள் வாழ்ந்துகொண்டிருந்த காலமது.

எறிகணைகளும் சன்னங்களும் வெடித்துக்கொண்டே இருந்தன. அதற்குப் பயந்து பயந்து, பதிந்து, நிமிர்ந்து, விழுந்து படுத்த நாட்களெல்லாம் கழிந்து, இறுதிநாட்களில் விதியிருந்தால் நடக்கும் என்று, அந்த சூழலில் இருந்த பெரும்பாலானவர்களின் மனங்களில் பதிந்திருந்த உண்மையாகியது.

நேரம் காலை ஒன்பது ஆகியது. மருத்துவமனை மேலும் பரபரப்பானது. முள்ளிவாய்கால் மருத்துவமனையிருந்த இடத்திலிருந்து அம்புலன்ஸ் வண்டியில் கடற்கரைவரை நோயாளர்களை ஏற்றச்சென்று சிறிய படகு ஒன்றில் ஐ.சி.ஆர்.சியின் பெரிய கப்பலில் ஏற்றினார்கள்.

இதற்குள் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்திய நோயாளர்கள் படும்வேதனை சொல்லமுடியாது. முதலில் படுக்கை நோயாளர்களை ஏற்றினார்கள்.

அந்த காயப்பட்ட அம்மாவால் நிலாவிற்கு பெரிய தலையிடியாக இருந்தது. இருந்த இடத்தைவிட்டு கப்பலுக்குப்போக மறுத்தாள்.

எவ்வளவு சொல்லியும் அளவற்ற பிள்ளைப்பாசம் இதயம் பூராவும் இருந்தமையால் அவளுக்கு வேறொன்றயும் சிந்திக்க முடியவில்லை. பிள்ளை வர வேணும் அது மட்டும்தான் சொல்லுவாள்.

பல சிரமத்தின் மத்தியிலும் எட்டு பைன்ந் குருதி ஏற்றித்தான் அவள் உயிரைக்காப்பாற்றி வைத்திருந்தார்கள். அம்மா போக மறுத்தால்; மேலதிக சிகிச்சையின்றி சில நாட்களில் இறந்து போவாள் என்பதை நினைக்க நிலாவிற்கு சங்கடமாய் இருந்தது.

“அம்மா நீங்கள் போகாட்டால் உங்கட உயிரை இனி எங்களால் காப்பாற்ற முடியாது போயிரும். மருந்தில்லை. போடுறதுக்கு சேலைன் இல்லை. நீங்கள் பிள்ளையோட உயிருடன் வாழ வேணுமெண்டால் கட்டாயம் போகவேணும். இதைவிட எங்களால் ஒண்டும் சொல்லமுடியாது. ரத்தத்துக்கு எவள கஸ்ரப்படுற நேரத்தில உங்கட உயிர காப்பாத்துறதுக்காகத்தான் உங்களுக்கு இரத்தம் ஏத்தினம். இப்ப நீங்க போகாட்டா அந்த ரத்தமும் அநியாயந்தான்.” என்று கடுப்பான தொனியில் கூறினாள்.

அம்மாவின் நிலமை நெஞ்சைப்பிழிந்தாலும் அவர்களாலும் என்ன செய்ய முடியும். மீண்டும்

“அம்மா உங்கட பிள்ளை வந்தால் கட்டாயம் அடுத்த கப்பலில் அனுப்புவம்…………” என்றாள் நிலா.

அம்மாவும் என்ன நினைத்தாளோ தெரியவில்லை. நிலாவை அருகில் அமர்த்தி கைகளை இறுகப்பற்றிக்கொண்டு

“என்ர அவர் பிள்ளைக்கு பத்து மாதத்திலயே செத்திட்டார். எனக்கு என்ர சொந்தம், சுகம் எல்லாமே அவன்தான். அவன் இல்லாட்டி என்ர உயிர் தேவையில்லை. அவன என்னட்ட அனுப்புங்க” என்று நிலாவின் கைகளைக் கண்ணில் ஒற்றினாள். பின்பு தன்னிடம் இருந்த ஒரேயொருரு சொத்தான பிள்ளையின் படத்தை நீட்டினாள்.

நாளை தானும் இறக்கலாம் என்ற எண்ணத்துடன் மறுப்பாக தலையசைத்த நிலா, “அம்மா இத கொண்டு போங்கோ. மகன்ர பேரை மட்டும் சொல்லுங்கோ” என்று எழுதினாள.

அம்மா போக சம்மதித்தது சிறிது சந்தோசமாகவும் இருந்தது. அம்மாவிற்கு போட்டு அனுப்புவதற்கு உடுப்பெதுவும் கூட இருக்கவில்லை. ஓர் சிறிய பெட்சீற்துண்டால் தான் மூடியிருந்தாள். நிலாவிற்கு கண்கள் மரத்துவிட்டன. இப்போதெல்லாம் அழுகைகூட வருவதில்லை. எத்தனை சோகங்களை நேரில்பார்த்து சுமக்கிறாள் அவள்.

“கெதியண்டு அனுப்புங்கோ நேரம் போகுது” என்று நோயாளரை தூக்கும் உதவியாளர்கள் அவசரப்படுத்தினார்கள். கையிலிருந்த மருத்துவமனை உடுப்புக்களும் முடிந்து போய்விட்டது. அம்மாவின் மானத்தைக்காத்து எப்படி அனுப்புவது என்று தெரியாது தவித்தாள். அம்மாவின் வயிறு பெருத்து வீங்கியிருந்தது. இறுக்கமான உடுப்பு போடமுடியாது. யாரிடமும் உதவி கேட்க முடியாது. எல்லோருக்கும் அதேநிலைதான்.

வேகமாக சத்திர சிகிச்சைக்கூடத்தினுள் நுழைந்தவள் சத்திரசிகிச்சை செய்யும் வேளையில் தான் போட்டுக்ககொள்வதற்காக வைத்திருந்த கவுணை எடுத்துக்கொண்டு ஓடி வந்தாள்.

வேகமாக அம்மாவிற்கு போட்டு அவரை கப்பலில் அனுப்பினாள் சரி. தான் தியேட்டர் கவுணையே எடுத்துப்போட்டுவிடுவது பிழை என்று அவளது மனம் சொன்னது. என்றாலும் பிழைக்கு அப்பால் அம்மாவிற்கு உடுப்புக்கிடைத்ததையிட்டு மகிழ்ந்தாள்.

“பிள்ளையள் என்ர பிள்ளையை எப்படியும் அனுப்புங்கோ” என வழிக்குவழி சொல்லிக்கொண்டே போனார் அந்த தாயார்.

இப்போதும் நிலாவிற்கு அந்த அம்மா வேதனையின் வடிவமாக வந்து கனவிலும் நினைவிலும் அவளை அலைக்கழிக்கிறார். நிலா அங்கு நின்றநாள்வரை அப்படியொரு பிள்ளை கிடைக்கவேயில்லை.

பொன்னுச்சாமி உசாந் உயிருடன் இருப்பானா? யாராவது அறிந்தீர்களா?

அன்று நிலாவும் காலச்சக்கரத்தின் கடுகதி வேகத்தால் யாரும் கனவிலும் நினைக்காத ஒன்று கண்ணிமைக்கும் நொடியில் நடந்து முடிந்து, முகாமினுள் பல நூறு பேரில் ஒருத்தியாக இருக்கிறாள்.

அந்த அம்மா உயிருடன் இருப்பாளா? மகன் இல்லாவிட்டால் உயிர் வாழ்வாளா? என்ற கடந்தகால பல நிஜமான நினைவுகளால் அடிக்கடி அரிக்கப்படுவதனால் அந்தரித்துப்போகிறாள்.

இன்றும் தூக்கம் வரவில்லை. கடந்த நாட்களில் நின்ற எதிர்பார்ப்புக்களை போர் பறித்துச்சென்று வெகு நாட்களாகி விட்டன. ஆனால் அவளது நினைவுகளை பறிக்கவோ அழிக்கவோ கோர யுத்தத்தால் முடியவில்லை. அவளின் காயாத கண்ணீருடன் எதிர்பார்ப்பின் கண்கள் இன்னமும் வழிந்தவண்ணமாக உள்ளன.

ஆக்கம் - மருத்துவமனை நிலா

ஈழநேசன்

0 Responses to காயாத கண்ணீர் (சிறுகதை)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com