பிரித்தானியாவைச் சேர்ந்த சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இலங்கையில் கொலைக்களம் என்ற ஒளிபரப்பு நிகழ்ச்சி உலக மக்களின் மனக்கதவைத் திறந்துள்ளது. ஆயிரம் சொல்லிலும் கூடிய வலிமை நிழற்படத்திற்கு இருப்பது உண்மை என்பதை இந்த ஒளிபரப்பு நிரூபித்துள்ளது.
மே 2009ல் முடிவுக்கு வந்த நான்காம் கட்ட ஈழப்போருக்குப் பிறகு பல அடுக்கடுக்கான உண்மை நிகழ்வுகளை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. 2009 ஆகஸ்து மாதம் சனல் 4 இரகசியக் கமராக்களை வவுனியா செட்டிக்குளம் முட்கம்பி முகாம்களுக்குள் நுளைத்தது.
இந்த படப்பிடிப்பு மூலம் முகாம்களில் அடைபட்ட தமிழ்ப் பெண்களை ஆண் சிங்களப் படையினர் உடற் பரிசோதனை செய்யும் காட்சிகள் வெளி உலகை எட்டின. நிர்வாணமாக்கப்பட்ட எட்டுத் தமிழ் இளைஞர்கள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட காட்சி அடுத்ததாகச் சனல் 4 இல் ஒளிபரப்பாகின.
இந்தக் காட்சிகள் பொய்யானவை என்று சிறிலங்கா கூறியதை மறுக்கும் விதத்தில் அனைத்துலக நிபுணர்கள் மூவர் சனல்4 காட்டிய படங்கள் உண்மையானவை என்று சாட்சியம் கூறினர். பான்கீமூன் நிபுணர் குழுவை அமைத்து போர் குற்ற விசாரணைகளை ஆரம்பித்ததற்கு உடனடித் துண்டுதலாக சனல் 4 படங்கள் அமைந்துள்ளன.
இவ்வருடம் ஐநாவின் ஜெனிவா மனித உரிமைக் கவுன்சில் மண்டபத்தில் சனல் 4 தயாரித்த இலங்கையில் கொலைக்களம் பேராளர்களுக்குத் திரையிடப்பட்டது. “21ம் நூற்றாண்டின் மிகக் கொடிய போர் குற்ற ஆவணத் திரைப்படம்” என்று அது விமர்சனம் செய்யப்படுகிறது.
உலக நாடுகள் பெரும்பாலானவற்றின் தொலைக்காட்சிகள் “இலங்கையின் கொலைக்களம்” படத்தைக் காண்பித்துள்ளன. தொண்டு நிறுவனங்கள் இந்தப் படத்தின் இலவச குறுந்தகடுகளைப் பரவலாக விநியோகம் செய்துள்ளன.
இந்த படத் தொகுப்பை உருவாக்குவதற்கு நவீன தொழில் நுட்பம் பேருதவி புரிந்துள்ளது. தமது வெற்றியின் வெளிப்பாடாகப் படையினர் கைபேசிகள் மூலம் கற்பழிப்புக் காட்சிகள் படுகொலைகள் மற்றும் சித்திரவதைக் காட்சிகளைப் படம் பிடித்துத் தமது சாகக்களுக்கு விநியோகித்துள்ளனர்.
இவை வெளியுலகை எட்டியுள்ளன. போர் நடந்து கொண்டிருக்கும் போதே படப்பிடிப்புக்கள் தனி மனிதர்களாலும், மருத்துவர்களாலும் தொண்டு நிறுவனத்தினராலும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டன. இவை உடனக்குடன் போர் முடியுமுன்பே வெளி நாடுகளுக்கு அனுப்பப்பட்டன.
அவுஸ்திரேலியாவின் ஏ.பி.சி தொலைக்காட்சி அடுத்தடுத்து மூன்று தடவை இலங்கையின் கொலைக்களம் ஆவணப் படத்தை ஒளிபரப்பியது. அதைப் பார்த்த அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரான முன்னாள் பிரதமர் கெவின் றூட் கடும் கண்டனம் வெளியிட்டார்.
அத்தோடு இலங்கை அரசிற்கு எதிராகக் குற்றவியல் நடவடிக்கை தேவை என்று பகிரங்கமாகச் சொன்னார். இந்தியா தொடர்ந்து மௌனம் சாதித்து வருகையில் வெறும் அறிக்கையோடு நிறுத்திக் கொண்ட அவுஸ்திரேலிய அரசின் மாற்றத்திற்கு சனல் 4 படம் காரணம் என்றால் மிகையல்ல.
1831ல் ஆரம்பிக்கப்பட்டுக் கடந்த 180 வருடங்களாகத் தொடர்ச்சியாக வெளிவரும் அவுஸ்திரேலியாவின் முன்னணி நாளிதழ் சிட்னி மோர்னிங் ஹெரால்ட் (Sydney Morning Herald) இலங்கை விவகாரங்களில் தீவர கவனம் செலுத்துகிறது.
இந்தப் பத்திரிக்கையின் புலனாய்வுச் செய்தியாளர் பென் டொகேர்ட்டி (Ben Doherty) வெள்ளைக் கொடி விவகாரத்தில் முன்னாள் இலங்கைப் பாதுகாப்புச் செயலர் பாலித கொஹனவின் பங்களிப்பு பற்றிய தகவலை வெளிக் கொணர்ந்தார். இதனால் பாலித கொஹன குற்ற விசாரணை செய்யப் படவிருக்கிறார்.
அவுஸ்திரேலிய தொலைக்காட்சிகளைப் போல் செய்தித்தாள்களும் ஊடகத் தர்மத்தை நெஞ்சில் சுமந்து குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றுவதற்கு உதவ முன்வரவேண்டும்.
எதிர்வரும் யூலை 23ம் நாள் சிட்னி நகரில் சனல் 4 வெளியிட்ட இலங்கையின் கொலைக்களம் தொடர்பான ஆர்ப்பாட்டப் பேரணி நடக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இதில் வேற்றின மக்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.



0 Responses to அவுஸ்திரேலியாவில் ''இலங்கையின் படுகொலைக் களம்" ஒளிபரப்பு