காசா மக்களின் அவலம் உச்ச கட்டம் அடைந்துள்ளது. எகிப்து, இஸ்ரேயில் நாடுகளுக்கிடையில் மத்தியதரைக் கடலின் கிழக்குக் கரையில் காசா (Gaza) என்ற ஒடுங்கலான பிரதேசம் காணப்படுகிறது. அதனுடைய நீளம் 40 கி.மீ (25 மைல்) அகலம் 10 கி.மீ.
காசாவை ஸ்ற்றிப் (Strip) என்று அழைப்பார்கள். அதாவது நீண்ட குறுகிய துண்டு நிலம் என்று பொருள். காசாவின் மக்கள் தொகை 1.5 மில்லியன். அனைவரும் பாலஸ்தீனியர்கள். உலகின் மக்கள் அடர்த்தி கூடிய நிலங்களில் ஒன்றாகக் காசா இடம்பெறுகிறது.
1948ல் இஸ்ரேயில் நாடு உருவாகியபோது காசாக் கீற்று தோன்றியது. இஸ்ரேயில் நாட்டிலிருந்து விரட்டப்பட்ட மக்கள் காசாவில் தஞ்சம் அடைந்தனர். அன்று தொட்டுக் காசாவில் அகதி முகாம்களும் அகதி முகாம் வாழ்க்கையும் தொடங்கிவிட்டன.
இன்று எட்டுப் (8) பாரிய அகதி முகாம்கள் காசாவில் இடம்பிடித்துள்ளன. வறுமையும், பசிப்பிணியும் நோய் நொடியும் காசாவில் கோர தாண்டவம் ஆடுகின்றன. மனித நேயம் பற்றித் தமது வசதிக்கேற்றப் பேசும் மேற்கு நாடுகள் காசாவை ஏறெடுத்துப் பார்க்க மறுக்கின்றன.
1948 தொடக்கம் 19 வருட காலம் காசாவை எகிப்து நிர்வாகஞ் செய்தது. 1967ல் நடந்த போரில் காசா இஸ்ரேயிலின் கட்டுப்பாட்டில் வந்தது. அன்று தொட்டு இன்றுவரை காசாவின் தலைவிதி இஸ்ரேயிலினால் தீர்மானிக்கப்படுகிறது.
2005ல் இஸ்ரேயில் பிரதமர் ஏறியல் ஷரோன் (Ariel Sharon) காசாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். யூதக் குடியேற்றங்கள் அகற்றப்பட்டன. யூத இராணுவம் வெளியேறியது. ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட்டதாக ஒப்புக்குச் சொல்லப்பட்டாலும் உலக சமுதாயமும் ஐநாவும் அதை ஏற்க மறுத்தன.
காசாவின் எல்லைகளை இஸ்ரேயில் படைகள் தமது இறுக்கமான பிடியில் வைத்திருக்கின்றன. காசாவின் மேற்கு எல்லைக் கடலை யூதக் கடற்படை கண்காணிக்கிறது. காசா மக்கள் கடற்கரையை அண்மிக்க அனுமதிக்கப்படுவதில்லை. காசாவின் தெற்கு எல்லை எகிப்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
காசாவின் வான்பரப்பில் இஸ்ரேயில் விமானங்கள் பறப்பில் ஈடுபடுகின்றன. காசாவைச் சுற்றி இரும்பு வேலிகளை இஸ்ரேயில் அமைத்துள்ளது. போக்குவரத்திற்காகச் கதவுகள் போடப்பட்டுள்ளன. கதவுப் பொறுப்பு யூதப் படைகள் வசம் இருக்கின்றன.
மனிதநேய சேவைகள் (Humanitarian Services), உதவிகளை ஐநா வழங்குகிறது. சுகாதாரம் மற்றும் கல்வி உதவிகளையும் அது வழங்குகிறது. ஐநா வழங்கும் உதவிகள் இஸ்ரேயில் அரசின் அனுமதியுடன் காசா மக்களைச் சென்றடைகின்றன.
உணவுத் தட்டுப்பாடு உச்சம் அடைந்துள்ளது. உணவுப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி கிடையாது. இஸ்ரேயில் படைகளின் கட்டுப்பாட்டிலுள்ள இரும்புக் கதவுகள் ஊடாகச் செல்லும் மனிதநேய உதவிகள் காசா மக்களுக்கு எது விதத்திலும் போதுமானவையல்ல.
காசாவுக்கு வழங்கும் மனிதநேய உதவிகளின் தன்மையும் விவரமும் கிடைக்கவில்லை. ஐநா அதிகாரிகள் ‘மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மனித உணவுகள், விலங்கு உணவுகள், சுத்தகரிப்பு மற்றும் கழிப்பறைப் பொருள்கள், சில்லறைச் சாமான்கள், மருந்துகள்” வழங்கப்படுவதாகச் சொல்கிறார்கள்.
கடும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதால் கழிவு நீர் அகற்றப்படுவதில்லை, தெருக்களில் குப்பைகள் குவிந்துள்ளன, குழாய் நீர் வழங்கல் தடைபட்டுள்ளது, சுகாதாரச் சீர்கேடுகள் நிலவுகின்றன. எல்லாவற்றிலும் பார்க்க மருத்துவ வசதிகள் போதுமானவையல்ல.
2007 தொடக்கம் ஹாமாஸ் (Hamas) அமைப்பு காசாவின் ஆட்சிப் பொறுப்பை மக்கள் தெரிவு மூலம் பெற்றுள்ளது. இதன் பிறகு காசா முற்றுகையை இஸ்ரேயில் இறுக்கியுள்ளது. இந்தக்கொடிய முற்றுகையை ஐநா ‘கூட்டுத் தண்டனை” (Collective Punishment) என்று தீர்மானித்துள்ளது,
1990 பிற்பகுதியில் இஸ்ரேயில் சிறிது காலம் மென்போக்கைக் கடைப்பிடித்தது. காசாவில் சிறிய விமான நிலையம் அமைக்க அனுமதிக்கப்பட்டது. பின்பு அது விமானக் குண்டு வீச்சு மூலம் அழிக்கப்பட்டது. சிறிய துறைமுகம் அமைப்பதற்கும் பேருந்து சேவையைத் தொடங்குவதற்கும் அனமதிக்கப்போவதாக இஸ்ரேயில் கூறியது. ஆனால் இன்று வரை அனுமதிக்கவில்லை.
காசாவில் இருந்து ஹாமாஸ் போராளிகள் இஸ்ரேயில் மீது 40 கி.மீ தூரம் பாயும் றொக்கெற் தாக்குதல் நடத்துகின்றனர். யூத உயிரிழப்பு சொத்திழப்பு குறைவென்றாலும் இஸ்ரேயில் விமானப் படையின் பதிலடியில் பொது மக்கள் கொல்லப்படுகின்றனர். கட்டிடங்கள் சேதம் அடைகின்றன.
அரசுகள் தலையிட மறுத்தாலும் காசாப் பிரச்சனை உலகின் தனிமனிதர் மனச்சாட்சியைத் தொட்டுள்ளது. காசா மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்களையும் மருந்துகளையும் இஸ்ரேயிலின் முற்றுகையை உடைத்துச் சென்று வழங்கும் தொண்டர் அமைப்புக்கள் எழுந்துள்ளன.
முதலாவது முயற்சி மே, 2010ல் மேற்கொள்ளப்பட்டது. பாலஸ்தீனர்களுக்குச் சார்பான தொண்டர் அமைப்புக்களும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஐஏச்ஏச் (IHH) என்ற துருக்கி நாட்டு என்ஜிஓவும் உதவிப் பொருள்களைக் கடல் மார்க்கமாகக் கொண்டு செல்லத் தீர்மானித்தன.
37 உலக நாடுகளைச் சேர்ந்த 800 தொண்டர்கள் இதில் பங்குபற்ற முன்வந்தனர். காசாப் பயணத்திற்குப் கப்பல் வாடகைக்குவிட ஒரு நிறுவனமும் முன்வராததால் எம்.வீ. மாவி மர்மரா (M.V.mavi marmara) என்ற கப்பலைப் பொது மக்களின் நிதிப் பங்களிப்புடன் ஐஏச்ஏச் கொள்வனவு செய்தது.
மாவி மர்மரா தலைமையிலான கப்பல் தொடரணி காசாவை நோக்கி சர்வதேசக் கடற்பரப்பில் சென்றபோது இஸ்ரேயில் கடற்படையின் தாக்குதல் பிரிவினர் தொடரணியைத் தடுத்து நிறுத்திக் கப்பல்களில் ஏறினார்கள் அவர்கள் நடத்திய துவக்குச் சூட்டில் 9தொண்டர்கள் உயிரிழந்தனர், பலர் காயமுற்றனர். இதை ஐநா உறுதி செய்துள்ளது.
மே 30, 2010ல் நடந்த இந்த சம்பவத்தைத் தொடர்ந்து துருக்கிப் பிரதமர் றெசெப் தயிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) இதுவரை இஸ்ரேயிலுடன் பேணிய இராணுவ உறவுகளை முறித்துக்கொண்டார். மாவி மர்மரா கப்பலில் மலேசியா வழங்கிய உதவிப் பொருள்களுடன் தொண்டர்களும் சென்றனர்.
மலேசியாவின் பாலஸ்தீனர்களுக்கு உதவும் பெர்தானா (Perdana) உலகளாவிய உதவி அமைப்பின் தலைவர் முன்னாள் பிரதமர் டாக்டர் மகதீர் முகம்மது ‘மூர்க்கத்தனமான காட்டுமிராண்டி நாடு” என்று இஸ்ரேயிலைக் கண்டித்தார். மாவி மர்மரா உட்பட மூன்று கப்பல்களை இஸ்ரேயில் கடற்படை பிடித்துச் சென்றது. அவை யூலை 23, 2010ம் நாள் விடுதலை செய்யப்பட்டன.
இதுவரை காசாவுக்கு உதவும் கடல் மார்க்கமான தனியார் முயற்சிகள் ஆரம்பகட்டத்திற்கு மேல் நகராமல் நிற்கின்றன. இஸ்ரேயில் சார்பு நாடுகள் முட்டுக்கட்டை போடுகின்றன. அமெரிக்காவின் எயிப்பாக் (Aipac) என்ற அமெரிக்க யூதர் அமைப்பு அமெரிக்க அரசைக் கட்டில் போட்டுள்ளது,
2009 மார்ச்சு மாதத்தில் ஐக்கிய இராச்சிய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் வணங்காமண் என்ற கப்பல் மூலம் உலர் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை தாயகத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தனர். சேகரிப்பு மையங்களில் தமிழுறவுகளின் வழங்கல்கள் குவிந்தன.
‘கப்டன் அலி” என்ற சிறியா நாட்டுக் கப்பல் வணங்காமண் என்று மறு நாமம் செய்யப்பட்டு 894 மெ. தொன் நிவாரணப் பொருள்களுடன் அர்ச்சுனா எதிர் வீரசிங்கம் தலைமையில் ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த முன்னாள் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு உறுப்பினர் கிறிஸ்டன் வூச்சனன் உட்பட 15 பேர் சென்றனர். மாவி மர்மராவையும் கப்டன் அலி என்ற வணங்காமண்ணையும் ஒப்பு நோக்கினால் பல வரலாற்று உண்மைகள் வெளிப்படும்.
யூன் 04.2009ல் ஏஎப்பி செய்திச் சேவை வெளியிட்ட தகவலின் படி கொழும்பிலிருந்து 160 கடல் மைல் தொலைவில் சிறிலங்கா கடற்படையினர் இந்தக் கப்பலைக் கைப்பற்றினர். அது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கப்பலென்றும் முல்லைத்தீவுப் பகுதிக்குள் பிரவேசிக்க முயன்ற போது கைது செய்யப்பட்டதாகவும் கடற்படை செய்தி வெளியிட்டது.
இக்கப்பல் இலங்கைக்;கு வரமுன்னர் முறையான அனுமதி பெறாது சட்டவிரோதமாக இலங்கைக் கடற்பரப்புக்குள் நுளைந்ததால் அது கைது செய்யப்பட்டு சோதனை செய்யப்பட்டதாகத் தெரிவித்த கடற்படை அதிகாரிகள் நிவாரணப் பொருட்களை இறக்காமலே கப்பலை வெளியேறு மாறு உத்தரவிட்டனர்.
யூன் 12ம் திகதியளவில் வணங்காமண் கப்பல் சென்னைக் கடல் பகுதிக்கு அப்பால் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. தமிழக முதல்வர் கருணாநிதி இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம் கிருஸ்ணாவுக்கு கப்பலில் உள்ள பொருட்கள் வன்னி மக்களுக்கு கிடைக்க ஆவன செய்யுமாறு கடிதம் எழுதினார்.
இதன் பிறகு இலங்கை, இந்திய அதிகாரிகள் மட்டச் சந்திப்பு புது டில்லியில் நடைபெற்றது. பொருட்களை ஏற்று வன்னி தடுப்பு முகாம் அகதிகளுக்கு வழங்க இலங்கை சம்மதித்தது. இந்திய செஞ்சிலுவைச் சங்கம் பொறுப்பேற்று வேறு கப்பலில் ஏற்றிப் பொருட்களைக் கொழும்புக்கு அனுப்பியது.
கொழும்புத் துறைமுகத்தில் பல மாதங்களாக நிவாரணப் பொருட்கள் தேங்கிக் கிடந்தன. சிங்களவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் பல சாக்குப் போக்குகளைச் சொல்லி இழுத்தடிப்பைச் செய்தது. நிவாரணப் பொருட்கள் வன்னி மக்களுக்குக் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது.
மூன்று மாதமாகச் கொழும்புத் துறைமுகத்தில் தேங்கிக் கிடந்த பிறகு 680 மெ. தொன் நிவாரணப் பொருள்கள் அடங்கிய 27 கொள்கலன்கள் பார ஊர்திகள் மூலம் 23 ஒக்டோபர் 2009ம் நாள் விநியோகத்திற்காக வன்னி இடம்பெயர்ந்தோர் முகாமிற்கு எடுத்துச் செல்லப்பட்டன.



0 Responses to காசா மக்களின் துயர் துடைக்கும் பணிகள் முடக்கம்