நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் சர்வதேச அளவில் இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு இராஜதந்திர சேவைகளில் உள்ள இராணுவ அதிகாரிகளே முக்கிய காரணம் என்று கூறியிருந்தார் ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க.
இலங்கையின் வெளிவிவகாரச் சேவையில் உள்ளவர்கள் போதிய வினைத்திறனுடன் செயலாற்றவில்லை என்ற குற்றச்சாட்டு அண்மைக்காலமாக தீவிரமடைந்து வருகிறது.
இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்கள் அதிகக்கும் நிலையில் இத்தகைய குற்றச்சாட்டுகள் வெளிக் கிளம்புவது இயல்பானதுதான்.
போர்க்குற்ற அறிக்கை விவகாரத்தில் தொடங்கிய சர்வதேச அழுத்தங்கள், அது பற்றிய விசாரணை அழைப்பு, அரசியல் தீர்வு என்று பல்வேறு விவகாரங்களிலும் தொடர்கின்றன.
கடந்தவாரம் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனைச் சந்தித்து விட்டுத் திரும்பியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிமசிங்கவும் கூட, ஒரு வகையில் இதையே தான் கூறியுள்ளார்.
ஐ,நாவின் போர்க்குற்ற அறிக்கையை உதாசீனம் செய்தால் சர்வதேச தலையீடுகளைத் தடுத்து நிறுத்த முடியாது போய் விடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது ரணில் விக்கிரமசிங்க தானாகக் கூறிய கருத்தல்ல.
ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், ரணில் விக்கிரமசிங்க ஊடாக இலங்கை அரசாங்கத்துக்குப் பரிமாறியுள்ள செய்தி என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். வழிக்கு வராது போனால், வம்பு தான் என்று அவர் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
ரணில் விக்கிரமசிங்க இதை தனது கருத்தாகவே கூறியுள்ள போதும், இதுவே பான் கீ மூனின் கருத்தாக இருந்திருக்க வேண்டும் என்றே கருதப்படுகிறது.
இந்தச் சந்திப்பின் போது போருக்குப் பிந்திய நிலைமைகள், அரசியல் தீர்வு, போர்க்குற்றச்சாட்டுகள் பற்றியெல்லாம் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்புக்கான அனைத்து வசதிகளையும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அரசாங்கமே ஏற்பாடு செய்து கொடுத்திருந்தது.
அவர் ஒரு முன்னாள் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் இந்த வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதா அல்லது வேறேதும் உள்நோக்கங்கள் இருந்ததா என்றெல்லாம் கேள்விகள் வரத்தான் செய்கின்றன.
சந்திப்பின் நோக்கம் எவ்வகையிலானதாக இருந்தாலும் அதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ள கருத்தே முக்கியமானது.
பான் கீ மூன் உறுதியான நிலைப்பாட்டில் இருக்கிறார் என்பதையே ரணில் சூசகமாக இப்படிக் கூறியிருக்கலாம்.
ஆனால் பான் கீ மூனுடனான சந்திப்பில் எத்தகைய இரகசியங்கள் பேணப்பட்டன என்பதும் சந்திப்பின்போது படம் எடுப்பதற்குக் கூட ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடயங்கள்.
நாடுகளின் அரசியல் தலைவர்களுடனான சந்திப்புகளின் போது பேணப்படும் அதிகபட்ச இரகசியத்தன்மை ஐ.நா தரப்பில் பேணப்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க சர்வதேச தலையீடுகளை தடுக்க முடியாது என்று கூறியுள்ள நிலையிலேயே, அவரது கட்சியைச் சேர்ந்த ஜோன் அமரதுங்க நடாளுமன்றத்தில் இராஜதந்திரிகளான இராணுவ அதிகாரிகளை நியமிப்பதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
இராணுவ அதிகாரிகள் இராஜதந்திர சேவைகளில் முன்னனுபவம் இல்லாதவர்கள் என்றும் அவர்கள் இராஜதந்திர வழிகளில் கையாள வேண்டிய விவகாரங்கள் பலவற்றைத் தவறவிட்டு விட்டதாகவும் ஐ.தே.க குற்றம்சாட்டியுள்ளது.
நெருக்கடிகள் அதிகரித்து வரும் நிலையில் இத்தகைய குற்றச்சாட்டுகளைச் சந்திப்பது சாதாரண விடயம் தான்.
ஆனால், ஓய்வுபெற்ற படை அதிகாரிகளை இராஜதந்திர சேவையில் இணைப்பது பற்றிய விவகாரத்துக்கு அப்பால், சேவையில் உள்ள படை அதிகாரிகளை இராஜதந்திரப் பணிகளில் அமர்த்தும் வழக்கம் அதிகரித்து வருகிறது.
இஸ்ரேல் போன்ற சில நாடுகளில் நாட்டின் அரசியலிலும் சரி, வெளிநாட்டுத் தூதரகப் பதவிகளிலும் சரி ஓய்வுபெற்ற படை அதிகாரிகளே நிறைந்திருப்பர். அதுபோன்றதொரு நிலைமைக்குள் தான் இலங்கையும் தள்ளப்பட்டு வருகிறது.
அவுஸ்திரேலியா, ஜப்பான், இஸ்ரேல், பாகிஸ்தான், இந்தோனேஷியா, பிறேஸில் போன்ற பல நாடுகளில் ஓய்வுபெற்ற படை அதிகாரிகள் தூதுவர்களாகப் பதவி வகிக்கின்றனர்.
மலேஷியாவுக்கான பிரதித் தூதுவராக மேஜர் ஜெனரல் உதய பெரேரா இரண்டு ஆண்டுகள் பணியாற்றி விட்டுத் திரும்பியுள்ளார். அவரது இடத்துக்கு மற்றொரு படை அதிகாரியே நியமிக்கப்படவுள்ளார்.
அதேவேளை ஐ.நாவுக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதியாக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவும், ஜேர்மனிக்கான பிரதித் தூதுவராக மேஜர் ஜெனரல் ஜெகத் டயசும் பணியாற்றி வருகின்றனர்.
இறுதிப் போரில் முக்கிய பங்கெடுத்த மேஜர் ஜெனரல்கள் ஜெகத் டயஸ், சவீந்திர சில்வா, பிரசன்ன டி சில்வா மற்றும் பிரிகேடியர் ரவிப்பிரிய போன்றவர்கள் எல்லாம் வெளிநாடுகளில் தான் பணியாற்றுகின்றனர்.
முன்னதாக ஒன்றிரண்டு பேர் மட்டும் இந்தச் சேவையில் இருந்தனர். இப்போது அது வேகமாக அதிகரித்து வருகிறது.
இது பாதகமான நிலையை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நிராகரித்துள்ளார்.
வெளிநாடுகளுக்கு இராஜதந்திரப் பதவிகளுக்காக அனுப்பப்பட்ட படை அதிகாரிகள் பல விடயங்களைச் சாதித்துள்ளதாக அவர் புகழ்ந்துள்ளார்.
குறிப்பாக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா சனல்4 பிரசாரங்களை முறியடிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறார்.
அதுபோலவே மலேஷியாவில் இருந்த மேஜர் ஜெனரல் உதய பெரேராவின் மூலம் தான் அங்கிருந்த புலிகளின் செயற்பாடுகள் முடக்கப்பட்டன.
அவரே கே.பியைக் கைது செய்து கொழும்புக்குக் கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்தவர்.
மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், ஐரோப்பிய நாடுகளில் புலிகளின் நடவடிக்கைகளை முடக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
இவ்வாறு முன்னாள் படையதிகாரிகளின் மூலம் பல விடயங்கள் சாதிக்கப்பட்டுள்ளதாகப் பட்டியல் போட்டுள்ளார் பீரிஸ். இவையெல்லாம் நடந்தேயிருப்பினும் இவர்களின் ஊடாக பெறப்பட்ட அனுகூலங்களை விட பாதகமான விடயங்கள் தான் அதிகம் என்பதே எதிர்க்கட்சிகளின் கருத்தாக உள்ளது.
சர்வதேச ரீதியாக இப்போது இலங்கை அரசுக்கு அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.
இலங்கையை முகம் கொடுத்து வரவேற்க மேற்குலகில் எந்த நாடும் தயாராக இல்லை என்றாகிற நிலை உருவாகி வருகிறது.
இந்தநிலையை இராஜதந்திரிகளால் சரிப்படுத்திக் கொண்டிருக்க முடியும் என்பதே அரச தரப்பின் பொதுவான கருத்தாக உள்ளது.
அதையெல்லாம் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் ஏற்கத் தயாரில்லை. வீங்கிப் பருத்து நிற்கும் இராணுவத்தையும் அதன் அதிகாரிகளையும் மாற்று வழிகளிலும் சிந்திக்க வைத்தால், செயற்பட வைத்தால் தான் அரசாங்கத்தினால் எதையும் சமாளித்துக் கொள்ள முடியும்.
இல்லையேல் அவர்களுக்கு உரிய பதவிகள், பொறுப்புகளை வழங்குவதிலும் சரி, அரசியலில் தலையிடாமல் தடுப்பதற்கும் அரசு நெருக்கடியைச் சந்திக்கவே நேரிடும்.
உள்நாட்டில் தலைவலியைத் தீர்க்க வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட படை அதிகாரிகளால் அங்கேயும் தலைவலிகள் தோன்றத் தான் செய்கின்றன.
அரசாங்கம் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மறைக்கப் பார்க்கிறது.
ஆனால் அரசாங்கம் அந்த வலியை அனுபவிப்பதை உணர்ந்து கொள்வது ஒன்றும் சிரமமான காரியமில்லை.
சுபத்ரா



0 Responses to இராஜதந்திரப் பலவீனங்களுக்கு இராணுவ அதிகாரிகள் காரணமா? சுபத்ரா