இலங்கையில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், இதற்கான அனுமதியை சிறீலங்கா அரசாங்கம் பன்னாட்டு சமூகத்திற்குக் கொடுக்க வேண்டும் என்றும், பிரித்தானிய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய சனல்-4 தொலைக்காட்சியின் ‘இலங்கையின் படுகொலைக்களம்’ நிகழ்ச்சியை கடந்த மூன்று நாட்களாக (வியாழன், வெள்ளி, சனி) ஒளிபரப்பிய இந்தியாவின் ஹெட்லைன்ஸ் ரூடே (Headlines Today) தொலைக்காட்சி, இது பற்றிய நடத்திய விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.மக்கள் மத்தியில் நடைபெற்ற இந்த தொலைக்காட்சி விவாதத்தில் தமிழ்நாட்டின் ஆளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் தம்பித்துரை, தமிழ் எழுத்தாளரான கலாநிதி. நாகநாதன், மக்கள் சமத்துவக் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான சரத்குமார், இலங்கைப் பிரச்சினையை உற்றுநோக்கிவரும் ராஜேஸ் சுந்தரம், இந்தியப் படைகள் இலங்கையில் இருந்த காலத்தில், அப்படைகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளராக இருந்த இந்திய முன்னாள் படைத்தளபதியும், ஆய்வாளருமான கேணல் ஹரிஹரன் ஆகியோர் நேரடியாகக் கலந்துகொண்டனர்.
இவர்களுடன், சிறீலங்கா படைத்துறைப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவெல, இந்திய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் யஸ்வந் சிங், பிரித்தானிய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் உட்பட பலர் தொலைத்தொடர்புக் காணொளி ஊடாகக் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கருத்துரைத்த மிலிபான்ட், சிறீலங்கா அரசாங்கம் போர்க்குற்றங்கள் இழைத்திருப்பதாகவும், இது பற்றிய விசாரணைக்கு காலக்கெடு விதிக்க வேண்டும் என்றும், பன்னாட்டு சமூகம் இதில் தலையிட சிறீலங்கா அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பி.பி.சி தொலைக்காட்சியின் ஹார்ட் ரோக் நிகிழ்ச்சியில் கலந்துகொண்ட சிறீலங்கா அரச அதிபர் மஹிந்த ராஜபக்சவின் இன நல்லிணக்கத்திற்கான ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க, பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளை தமது அரசாங்கம் பன்னாட்டு சமூகமாகக் கருதவில்லை எனக் கூறியிருந்தார்.
இலங்கையில் இடம்பெற்ற போர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழு அறிக்கை வெளியிட்டு பல மாதங்கள் ஆகியும் அந்த அறிக்கையை ஐ.நா செயலர் பான் கி-மூன் இதுவரை கருத்தில் எடுக்காது அது கிடப்பில் போடப்பட்டிருப்பதாக, கடந்த சில வாரங்களிற்கு முன்னர் த நியூயோர்க் ரைம்ஸ் உட்பட பல முன்னணிப் பத்திரிகைகளில் அபிப்பிராயப் பத்தி எழுதியிருந்த பிரித்தானிய, பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் டேவிட் மிலிபான்ட், பேர்ணாட் குஸ்ணர் ஆகியோர் கூறியிருந்தமை நினைவூட்டத்தக்கது.
சிறீலங்கா அரசாங்கத்திற்கு காலக்கெடு விதிக்க வேண்டும்: டேவிட் மிலிபான்ட்
பதிந்தவர்:
தம்பியன்
10 July 2011



0 Responses to சிறீலங்கா அரசாங்கத்திற்கு காலக்கெடு விதிக்க வேண்டும்: டேவிட் மிலிபான்ட்