தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தான் தங்களின் ஏக பிரதிநிதிகள் என வடக்கு மக்கள் இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்களின் மூலம் ஆணித் தரமாக முழு உலகத்துக்கும் பறைசாற்றியுள்ளனர். இவ்வாறு புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.
நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 26 சபைகளில் போட்டியிட்டு 21 சபைகளைக் கைப்பற்றி அமோக வெற்றி ஈட்டியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:
அரசு தமிழ் மக்களின் வாக்குகளை பறித்தெடுப்பதற்குப் பல்வேறு யுத்திகளைக் கையாண்டது. பட்டுவேட்டி, பட்டுச்சேலை, தண்ணீர் பம்புகள், தையல் இயந்திரங்கள் என ஏராளமான பொருள்களை இலவசமாக அமைச்சர்கள் வாரிவாரி வழங்கினர்.
அதுமட்டுமன்றி தென்னிலங்கையிலிருந்து கவர்ச்சிக் கன்னிகளை அழைத்துச் சென்று கூத்து கும்மாளம் என வடக்கு மக்களைக் குதூகலிக்க வைத்தனர்.
ஆனால் வடக்கு மக்கள் தாங்கள் பட்டுவேட்டிக்கும், பட்டுச் சேலைக்கும் சோரம் போகிறவர்கள் அல்லர் என்பதை நிரூபித்துவிட்டனர்.
பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் அவர்கள் புத்திசாலித்தனமாகக் கூட்டமைப்புக்கே வாக்களித்தனர். தமது கொள்கையில் சற்றும் தளராத அவர்கள் உறுதியாக இருந்துள்ளனர்.
இது பாராட்டுக்குரியதொரு விடயமாகும். இதற்கு நான் வடக்கு மக்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்று எவரும் இல்லை என அரசு கூறிவருகின்றது. மக்களின் ஏக பிரதிநிதிகள் யார் என்பதை தேர்தலே நிர்ணயிக்கும். வடக்கு மக்கள் தங்களின் பொன்னான வாக்குகள் மூலம் கூட்டமைப்பினர்தான் தங்களின் ஏக பிரதிநிதிகள் என முழு உலகத்துக்கும் எடுத்துக்காட்டியுள்ளனர்.
எனவே அரசு இனியும் இவ்வாறு பூச்சாண்டித் தனம் காட்டும் வேலைகளைச் செய்யாது, கூட்டமைப்பினருடன் சுமுகமான முறையில் பேச்சு நடத்தி, இனப்பிரச்சினைக்கு அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை வழங்க முன்வரவேண்டும்.
இனியும் மௌனம் காத்தால் சர்வதேச தலையீடுகள் தவிர்க்கமுடியாததாகிவிடும்.
தமிழ் மக்களுக்கு இந்தத் தேர்தல் வெற்றியானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு இது உந்துசக்தியாக அமையும்.
சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பிக் கொள்வதற்காக இந்தத் தேர்தல்களைப் பயன்படுத்த முனைந்த அரசு, வடக்கு மக்களை இலகுவில் ஏமாற்றிவிடலாம் என்றும் நினைத்தது. ஆனால் அங்குள்ள மக்கள் அரசுக்கு தக்க பாடம் புகட்டியுள்ளனர்.
வடக்கு மக்களுடன் "ஏமாற்று"விளையாட்டு விளையாடி தனக்குத் தேவையான கோல்களைப் போட்டுக்கொள்வதற்கு அரச தரப்பினர் முனைந்தனர். அதற்காக ஜனாதிபதி உட்பட அமைச்சர்கள் பட்டாளம் வடக்குக்குப் படையெடுத்துச் சென்றனர். ஆனால் அங்கு சென்று "சேம் சைட்"(sameside) கோலையே போட்டனர்.அரச தரப்பினருக்கு தமிழ் மக்கள் கொடுத்த "கிக்கில்'(உதையில்) வெறுங்கையுடனேயே கொழும்புக்குத் திரும்ப வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
எனவே, இனியும் அரசு காலம் தாழ்த்தாது வடக்கு கிழக்கு மக்களுக்குத் தேவையான அரசியல் தீர்வை வழங்க முன்வரவேண்டும். அதுவே சர்வதேசத்தின் எதிர்பார்ப்பு என்பதையும் புரிந்து அரசு செயற்பட வேண்டும்.தமிழ் மக்கள் தங்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்மைப்பினருக்கு வாக்களித்தமைக்காக நான் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.
கூட்டமைப்பினர் தான் தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள் - தேர்தல் நிரூபித்துள்ளது
பதிந்தவர்:
Anonymous
25 July 2011



0 Responses to கூட்டமைப்பினர் தான் தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள் - தேர்தல் நிரூபித்துள்ளது