Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்றைய தென்னாசிய அரசியலில் இந்தியா குளவிக்கூடு சிறீலங்கா தீப்பந்தம்.. இலங்கையை இனியும் இந்தியா எரிக்கக்கூடாது..

சிறீலங்காவின் உள்ளுராட்சித் தேர்தலில் வழமைபோல வடக்குக் கிழக்கில் சிங்கள இனவாத அரசும், அதன் அடிவருடிகளும் மக்களால் தூக்கி வீசப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வளவு காலமும் புலிகள் பின்னால் இருந்து செயற்படுகிறார்கள், சரியான பிரச்சாரங்களை செய்ய முடியவில்லை என்று ஒப்பாரி வைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மிதிவண்டியில் சென்று வாக்குக் கேட்குமளவிற்கு அவருக்கு சுதந்திரம் இருந்தது. ஆனாலும் மக்கள் அவருடைய கட்சியும் தூக்கி வீசப்பட்டிருக்கிறது. மக்கள் தீர்ப்பை மதிக்கத் தெரியாது மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார் டக்ளஸ்.

தமிழர் கூட்டமைப்பு ஓர் ஆற்றலுள்ள கட்சி என்ற அடிப்படையில் இந்த வெற்றி அமைந்ததாக மார்தட்ட முடியாது. சிங்கள இனவாதத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள தாங்கொணா வெறுப்பே கூட்டமைப்பை வெற்றிக்குள் தள்ளியுள்ளது. தமிழகத்தில் மு.கருணாநிதியும் அவர் குடும்பத்தினரும் செய்த அருவருக்கத் தக்க செயல்கள் எப்படி ஜெயலலிதாவுக்கு அமோக வெற்றியை கொடுத்ததோ அதுபோலவே மகிந்த அன் கொம்பனி செய்த அருவருக்கத்தக்க செயல்களே இந்த வெறுப்பை இரட்டைக்குழல் துப்பாக்கியாகக் கக்கியுள்ளது.

குடாநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெறும் 5000 ரூபாவை வழங்கினால் அந்த இடத்திற்கு இராணுவம் விசாரிக்க வந்துவிடுகிறது. சிறீலங்காவின் உள்ளுர் உளவுப் பிரிவினரே இங்கிலாந்தில் உள்ள சில தமிழர்களோடு பேசி தகவல் எடுக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.

யாழ்.மாவட்ட கல்வி அதிகாரி ஒரே இரவில் தூக்கி வீசப்பட்டுவிட்டார். குடாநாட்டின் பிரதான வைத்தியசாலை ஒன்றின் வைத்தியர் 24 மணி நேரத்தில் ஓடிவிடு என்று தொலைபேசி வழியாக எச்சரிக்கப்பட்டு, ஓடிவிட்டார். யாழ். சென்று வரும் மக்கள் செவிவழியாக சுமந்து வரும் தகவல்கள் ஏராளம் தாராளம். அவை மகிந்த ஆட்சி எப்படி நடக்கிறது என்பதற்கு அழகிய உதாரணங்களாக உள்ளன.

தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்குங்கள் என்று கேட்டபோது முதலில் இயல்பு வாழ்க்கையை வழங்குங்கள் என்று பிரபாகரன் அன்று கேட்டார். ஒரு தடவையல்ல பல நூறு தடவைகள் கேட்டார். அதை வழங்க சிங்கள அரசு ஒருபோதும் முன்வரவில்லை.

ஒரு சிறிய விழாவை நடாத்துவதானாலும் இராணுவத்திற்கு அவிப்பாகம் கொடுத்து அவ்விடத்துக்கு மாலை போட்டு வரவழைக்கப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறது. ஓர் உதைபந்தாட்டப் போட்டியை நடாத்தக்கூட முடியாத அவலம் நிகழ்வதாக கூறப்படுகிறது. இந்த இலட்சணத்தில் எதற்கு அரசியல் தீர்வு முதலில் இயல்பு வாழ்வை வாழ மக்களை அனுமதிக்க வேண்டும். பிரபாகரன் தெளிவாகத்தான் பேசியுள்ளார் என்பதை இன்று சரியாக உணர முடிகிறது.

அதேவேளை உலகப் பந்தில் இப்படியான இனவாத நாடுகள் இருக்க முடியாது என்ற புதிய கொள்கை வகுக்கப்பட்டுள்ளது கவனிக்கப்பட வேண்டியது. எகிப்து, ரூனிசியா, லிபியா, சிரியாவில் ஆட்சி மாற்றங்களை நடாத்தியது இந்தக் கொள்கைதான். இந்த அலை ஆசியாவிற்குள் வரப்போகிறது, இந்தியாவால் இதை நிறுத்த முடியாது என்பதும் நிதர்சனமாக தெரிகிறது.

இன்றுள்ள தென்னாசிய அரசியல் நிலையில் இந்தியா என்ற நாடு மரத்தில் தொங்கும் குளவிக்கூடுபோல தெரிகிறது, அதன் கீழே தீப்பந்தம் எரிவதுபோல சிங்கள நாடு தெரிகிறது. சிறீலங்காவை இனியும் எரிய வைத்தால் இந்தியக் குளவிக்கூட்டுக்கே ஆபத்து என்பதை வடஇந்திய தலைவர்கள் பெரிதாக புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் மந்தமான அறிவுள்ளவர்கள் என்று ப.சிதம்பரம் கூறியது கவனிக்கத்தக்கது.

இந்த இடத்தில் முன்னாள் சமாதானப்புறா சந்திரிகா அம்மையார் துணிச்சலாக ஒரு கருத்தை முன் வைத்துள்ளார். போரில் வென்றாலும் சிறீலங்கா என்ற நாடு தோற்றுப்போன நாடு என்று தெளிவாகக் கூறியிருக்கிறார்.

சனல் 4 கொலைக்களத்தைப் பார்த்த தனது மகன் சிங்களவன் என்று சொல்லவே வெட்கப்படுவதாகவும் கூறியிருக்கிறார்.

சுமார் 5200 தமிழர்கள் மர்ம முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளதாக நேற்று அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளை வானில் கடத்தப்பட்டு சுவடு தெரியாமல் போன இந்த இளைஞர்கள் அமெரிக்காவின் குவாண்டனோமா சிறைக்கூடத்தைவிட மோசமான தகவல் தெரியாத பாதாள உலகத்தில் கிடக்கிறார்கள்.

என்ன செய்யப்போகிறது நாகரிக உலகம்…?

இந்த நாசகார செயல்களை சிங்கள இனவாதம் எப்போது நிறுத்திக் கொண்டு தன்னை திருத்தப்போகிறது..?

சீனாவும் ரஸ்யாவும் நண்பர்கள் அல்ல சதாம்உசேனை காலை வாரிய கதை தெரிந்தால், சலபொடான் மிலேசெவிச்சை காலை வாரிய கதை தெரிந்தால் இந்த நாடுகளை மகிந்த நம்பமாட்டார், அவருக்கு அதுவும் தெரியவில்லை.

இயல்பு வாழ்க்கையை கேட்டு தமிழ் மக்கள் வீதிக்கு இறங்கினால் பான் கீ மூன் போன்ற புண்ணுக்கு புனுகு தடவும் பேர்வழிகளை தாண்டி உலகம் திரும்பும். வெள்ளம் உள்ளுராட்சி தேர்தல்களால் சிங்களத்தை எச்சரித்துள்ளது. உணரத் தவறினால் உள்ளுருக்கள் இருந்தே அது ஊற்றெடுக்கும்.

அலைகளுக்காக இளவாலை தெற்கு க.புவனசுந்தரம் 28.07.2011

0 Responses to உள்ளுராட்சி தேர்தல் வெற்றிக்குப் பின் என்ன..?

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com