Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தோனேசிய அரசால் நடுக்கடலில் சிறைப்படுத்தப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளை விடுவிக்க தமிழக முதல்வர் முயற்சி மேற்கொள்ள கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆன பின்னரும் தமிழர்கள் மீது சிங்கள இனவாத அரசு தொடர்ந்து நடத்திவரும் இன அழித்தலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளவும், தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் பாதுகாப்பையும் உறுதிசெய்துக்கொள்ளவும், நியூசிலாந்து நாட்டை நோக்கி கப்பலில் பயணம் செய்த 87 ஈழத் தமிழ் அகதிகளை இந்தோனேசிய அரசு நடுக்கடலில் சிறைபிடித்துள்ளது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.

ஈழத் தமிழ் அகதிகள் பயணம் செய்த கப்பல் சர்வதேசக் கடற்பரப்பில் பழுதாகி நின்றபோது இந்தோனிசிய கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்டு, சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை கப்பலில் இருந்து இறக்கி இந்தோனேசியா நாட்டிற்குக் கொண்டு செல்ல அந்நாட்டுப் படையினர் முயற்சித்தபோது, கப்பலில் இருந்து இறங்க அகதிகள் மறுத்துள்ளனர். தாங்கள் நியூசிலாந்து நோக்கி பயணிக்க அனுமதிக்க வேண்டும், இல்லையென்றால் கப்பலில் இருந்தே சாவோம் என்று கூறிவிட்டனர். இந்தத் தகவல்களையெல்லாம் அந்தக்கப்பலில் உள்ளவர்கள் அலைபேசியில் தொடர்புகொண்டு என்னிடம் வேதனையுடன் தெரிவித்தனர்.

அந்த 87 அகதிகளில் 5 பேர் குழந்தைகள், 6 பேர் பெண்கள். அவர்களில் ஒருவர் 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். கப்பலை விட்டு இறங்க மறுத்த அகதிகளுக்கு கடந்த 13ஆம் தேதி முதல் உணவு அளிப்பதை நிறுத்தி துன்புறுத்தி வருகிறது இந்தோனேசிய அரசு. ஆஸ்ட்ரேலியாவிற்கும், நியூசிலாந்து நாட்டிற்கும் தப்பிச் செல்ல முயலும் ஈழத் தமிழ் அகதிகளை இதற்கு முன்னும் இப்படி தடுத்து நிறுத்தி சிறைப்படுத்தியுள்ளது இந்தோனிசிய அரசு.

ஐ.நா.வின் சர்வதேச மனித உரிமைப் பிரகடனம் விதி 14கின் படி, “தங்கள் நாட்டில் கொடூரமான ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படும் எந்த ஒரு நபரும் வேறொரு நாட்டிற்கு அகதியாகச் சென்று தன்னை காத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும்” என்று கூறியுள்ளது. இந்தோனேசிய அரசின் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் ஐ.நா.வின் பன்னாட்டு மனித உரிமை பிரகடனத்திற்கும், ஐ.நா.வின் அகதிகள் பிரகடனத்திற்கும் முற்றிலும் முரணானதாகும்.ஆனால் சர்வதேச பிரகடனங்களின் இந்த நெறிமுறைகளை மதிக்காமல், தனது நட்பு நாடான இலங்கை அரசுக்கு உதவும் வகையில் இந்தோனிசிய அரசு செயல்பட்டு வருகிறது. ஈழத் தமிழ் அகதிகள் வந்தால் நாங்கள் ஏற்க மாட்டோம் என்று நியூசிலாந்து நாடு கூறுவதும் ஐ.நா.அகதிகள் பிரகடனத்திற்கு முரணானதே.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், அங்கு தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை இன்னமும் நீடிப்பதால்தான் சொந்த மண்ணில் இருந்து அவர்கள் அகதிகளாக மற்ற நாடுகளுக்குச் செல்கின்றனர். அங்கு ‘அமைதி’ ஏற்பட்டுள்ளதாக கூறும் அந்நாட்டு அரசின் குரலாக பேசிவரும் சி்வசங்கர் மேனன்கள் இதற்கு மேலாவது அமைதி என்ற வார்த்தைக்கு மயான அமைதி என்பது பொருளல்ல என்பதை உணர்ந்திட வேண்டும்.

எனவே, நடுக்கடலில் சிறைப்படுத்தப்பட்ட ஈழத் தமிழ் அகதிகளுக்கு உணவளித்து, அவர்கள் விரும்பும் நாட்டிற்கு செல்ல அனுமதிக்க தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும்.

0 Responses to கடலில் சிறைப்படுத்தப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளை விடுவியுங்கள்: சீமான்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com