அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் அரச நிர்வாகக் கட்டிடத்தொகுதியில் சென்ற வாரம் இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படத்தை அமெரிக்க செனட்சபை உறுப்பினர்களும் மனித உரிமை காப்பக முக்கியஸ்தர்களும் அரசின் படமாளிகையில் பார்த்தனர்.
அமெரிக்க அரசு இந்த படத்திற்குக் கொடுத்த பகிரங்க அங்கீகாரமாக இந்த நிகழ்ச்சி இடம் பெறுவதாக AFP செய்திச் சேவை குறிப்பிடுகிறது. அதிபர் ஓபாமாவின் ஆளும் ஜனநாயகக் கட்சியின் செனட் சபை உறுப்பினர்கள் படக்காட்சியை ஒழுங்கு செய்தனர். சிஎன்என், பொக்ஸ் நியூஸ் போன்ற இணையங்களில் இலங்கையின் கொலைக்களம் பொதுமக்கள் பார்வைக்கு வைப்புச் செய்யப்பட்டுள்ளது.
வீடியோச் செய்திகளை வெளியிடும் யூரியூப் (You Tube) இணையத்தில் இந்தப் படத்தை பார்க்கும் வசதி வாடிக்கையாளர்களுக்கு இருக்கிறது. இலங்கையின் கொலைக்களத்தை பார்த்தோர் அதிர்ச்சியும் மனக்கிலேசமும் அடைந்திருக்கிறார்கள்.
அமெரிக்க ஆட்சியாளர்களின் அபிப்பிராயங்களையும் தீர்மானங்களையும் கட்டியெழுப்பும் நியூயோர்க் ரைம்ஸ், வாஷிங்டன் போஸ்ற், சிக்காகோ டெய்லி நியூஸ் போன்ற தேசியளவிலும் சர்வதேச மட்டத்திலும் வலுவான பத்திரிகைகள் இந்தப் படம் பற்றிய விமர்சனக் கருத்துக்களை வெளியிட்டுள்ளன.
சென்ற வெள்ளிக்கிழமை (15.07.2011) காங்கிரஸ் உறுப்பினர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் சர்வதேச விசாரணையை வலியுறுத்திக் குரல் கொடுத்துள்ளனர். 50 நிமிடம் நீடித்த ஆவணப் படத்தைப் பார்த்த பிறகு அரச உயர் மட்டத்தில் பல பரபரப்பான நிகழ்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன.
காலஞ்சென்ற முன்னாள் செனட்சபை உறுப்பினர் டொம் லான்ரொஸ் (Tom Lantos) பெயரில் உருவாக்கப்பட்ட மனித உரிமைப் பரிசை வென்ற ஜேம்ஸ் மெக்குகாவர்ன (James McGovern) இப்போது காங்கிரஸ் சபையின் மனித உரிமை ஆணையத் துணைத் தலைமை பதவி வகிக்கிறார்.
படத்தைப் பார்த்தபின் பத்திரிகையாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் காங்கிரஸ் உறுப்பினர் மெக் கொவர்ன், “மனிதர்களுடைய மிக மோசமான மிருகதனத்திற்கு உதாரணமாகத் திரைப்படம் விளங்குவதாகத்” தெரிவித்தார். மசாச்சு செற்ஸ் செனட்சபை ஜனநாயக் கட்சி உறுப்பினராகவும் அவர் பதவி வகிக்கிறார்.
வெறும் அதிர்ச்சியூட்டும் கருவியாக மாத்திரம் இந்தப்படம் அமையவில்லை. இலங்கையின் போர்க் குற்றங்களை விசாரிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் சான்றாதாரமாக அதைப் பார்க்க வேண்டும் என்று ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
உள்நாட்டில் நிறுவப்பட்ட விசாரணைக் குழு குற்றவாளிகளை அடையாளங்கண்டு தண்டிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக இலங்கை இராணுவம் கூறுகிறது. இதற்குப் பதில் கூறும் முகமாக செனட்டர் மெக் கொவர்ன் பின்வருமாறு கூறினார். “நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் அல்லது அதற்கான விருப்பம் இல்லாவிட்டால் சிறிலங்கா போர்க்குற்ற விசாரணையைச் சர்வதேச சமூகம் பொறுப்பேற்க வேண்டும்”
இதற்கு அமைவாக அமெரிக்க இராஜாங்கச் செயலகம் சிறிலங்காவுக்கு விடுத்த எச்சரிக்கையில் “பொறுப்புக் கூறும் கடமையிலிருந்து நழுவ முடியாததென்றும் தவறினால் சர்வதேச அழுத்தங்களுக்கு உட்பட வேண்டியவரும்” ஆனால் சர்வதேச விசாரணைக்கு அமெரிக்கா குரல் கொடுக்கும் என்ற அழுத்தம் திருத்தமான வாசகம் இந்த எச்சரிக்கையில் காணப்படவில்லை. என்று இராசதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மதில் மேல் பூனையாக இல்லாவிட்டாலும் அரசின் கொள்கை இன்னும் திரவ நிலையில் இருப்பதையே இது சுட்டிக் காட்டுகிறது.
படம் திரையிடப்படுவதற்கும், அது பற்றிய விழிப்பை ஏற்படுத்துவதற்கும் பெரும்பணியாற்றிய மனித நேய ஆர்வலர்களுக்கு நன்றியை கூறிக்கொள்வதோடு, அமெரிக்க அரசு சர்வதேச விசாரணைக்குக் குரல் கொடுக்கும் வரை அயராது உழைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
சனல் 4, அவுஸ்திரேலியாவின் ABC தொலைக்காட்சிகள் இலங்கையின் கொலைக்களம் திரைப்படத்தை முழு அளவில் ஒளிபரப்புச் செய்ததைப் போல் CNN தொலைக்காட்சியும் ஒளிபரப்பவேண்டும் என்று வலிறுத்துகின்றோம்.
CNN தொலைக்காட்சி இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படத்தை ஒளிபரப்பு செய்யுமா?
பதிந்தவர்:
தம்பியன்
20 July 2011



0 Responses to CNN தொலைக்காட்சி இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படத்தை ஒளிபரப்பு செய்யுமா?