தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் அனைத்தும் முகாம் வாழ் இலங்கை தமிழ் மக்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க பல்வேறு திட்டங்களின் கீழ் முதல்வர் ஜெயலலிதா 17 இலங்கைத் தமிழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக முதல்வர் ஜெயலலிதா இலங்கைத் தமிழர்கள் நலனில் எப்போதும் மிகுந்த அக்கறையும், ஆதரவும் கொண்டு அவர்கள் நல்லமுறையில் வாழ தமிழக மக்களுக்குக் கிடைக்கப் பெறும் அனைத்து நலத் திட்டங்களும் அவர்களுக்கும் கிடைத்திட நடவடிக்கை எடுத்து வருகிறார்.
முதல்வர் ஜெயலலிதா தலைமைச்செயலகத்தில் இன்று திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி முகாம் வாழ் இலங்கை தமிழர்கள் லட்சுமி வேலு, வேலு, லட்சுமி துரைசாமி ஆகியோருக்கு ஆதரவற்ற முதியோர் ஓய்வூதியத் திட்டத்திற்கான ஆணையையும், புவனேஸ்வரி, நாககன்னி, சுந்தரியம்மாள் ஆகியோருக்கு ஆதரவற்ற பெண்கள் ஓய்வூதியத் திட்டத்திற்கான ஆணையையும், இன்பரதி, சிவபாக்கியம், கமலாதேவி ஆகியோருக்கு ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டத்திற்கான ஆணையையும், சுகநந்தினி, வத்சலா, பத்மவேணி ஆகியோருக்கு திருமண உதவி திட்டத்தின் கீழ் திருமாங்கல்யம் செய்ய தலா 4 கிராம் தங்கம் மற்றும் 25,000 ரூபாய் நிதியுதவியும், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி முகாமில் இயங்கி வரும் அன்னை தெரசா மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த அமிர்தசெல்வநாயகி, ஜூலியட் கொன்சி, தென்றல் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த நாகம்மாள், ஞானசீலி, புதிய உதயம் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த விஜயா, பத்மஜோதி ஆகிய மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு சுழல் நிதியினையும், வாசுகி, பாக்கியலட்சுமி ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்களையும் வழங்கினார் என்று அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 இலங்கைத் தமிழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: முதல்வர் வழங்கினார்
பதிந்தவர்:
Anonymous
16 August 2011
0 Responses to 17 இலங்கைத் தமிழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: முதல்வர் வழங்கினார்