அமெரிக்காவின் கடன் ரேட்டிங் குறைந்ததற்கு காரணம் எதிர்க்கட்சிதான். இதன் மூலம் நமக்கு நாமே சூடு போட்டுக் கொண்டோம் என்று பாரக் ஒபாமா கூறினார்.
இப்போதுதான் பதவி ஏற்றதுபோல உள்ளது. ஆனால் அதற்குள் அடுத்த தேர்தலைச் சந்திக்கிறார் பாரக் ஒபாமா. 2012-ம் ஆண்டு நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட இருக்கும் ஒபாமா அதற்கான பிரசாரத்தில் இறங்கிவிட்டார்.
மிச்சிகன் நகரில் ஆட்டோ தொழிலாளர்கள் மத்தியில் நேற்று அவர் பேசினார்.
அவர் கூறுகையில், “கடன்களை திருப்பி செலுத்த அமெரிக்காவுக்கு உள்ள திறனுக்கான மதிப்பீட்டை, தரச்சான்றிதழ் வழங்கும் நிறுவனம் ஒரு புள்ளி குறைத்து விட்டது. ‘ஏஏஏ’ என்ற தர மதிப்பீட்டில் இருந்து ‘ஏஏ பிளஸ்’ என்ற மதிப்பீட்டை கொடுத்துள்ளது. இது நமக்கு நாமே போட்டுக்கொண்ட சூடு ஆகும்.
அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கட்சிக்கு ஆதாயம் தேடுவதற்காக நாட்டின் நலனை பலிகொடுத்து விட்டார்கள். கடனுக்கான உச்சவரம்பை உயர்த்துவதற்கு குடியரசு கட்சியினர் தொடக்கத்தில் மறுத்து விட்டனர். இதன்மூலம் அவர்கள் நாட்டின் பொருளாதாரத்தை அவர்கள் நாசப்படுத்தி விட்டார்கள்.
இவர்களுக்கு நாட்டின் வெற்றியை விட எதிரிகளின் தோல்வி தான் முக்கியம். இந்த போக்கை அவர்கள் கைவிட வேண்டும்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக வேலை வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுப்பேன். வேலை இல்லாத் திண்டாட்டம் இப்போது 9 சதவீதத்துக்கு மேல் உள்ளது. இதை குறைக்க நடவடிக்கை எடுப்பேன். தொழில் வளர்ச்சியை பெருக்க நடவடிக்கை எடுப்பேன். தர சான்றிதழ் வழங்கும் கம்பெனிகளின் நம்பிக்கையை பெறுவதில் வெற்றி பெறுவேன்.
தீர்க்க முடியாத பிரச்சினையே இல்லை
வாரா வாரம் புதிய புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவேன். அந்த திட்டங்கள் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு வழிகாண்பேன். இதன்மூலம் அதிகம் பேருக்கு வேலை கொடுப்பேன்.
இப்போது நாம் சந்திக்கும் பிரச்சினைகள் எதுவும் தீர்க்க முடியாதது அல்ல. அமெரிக்காவுக்கு மிகப்பெரிய பொருளாதார பலம் இன்னும் உள்ளது என்பதை அனைவரும் புரிந்து வைத்து இருக்கிறார்கள்,” என்றார்.
0 Responses to ‘நமக்கு நாமே போட்டுக்கொண்ட சூடு’: ஒபாமா