தமிழருக்கு நல்ல எதிர்காலத்தை வரைந்து செல்லும் 2011.
ரூனீசியாவில் புறப்பட்ட புரட்சிகரமான புது நதி அநீதிகளை எல்லாம் அழிக்கும் என்ற புது நம்பிக்கையை ஏற்படுத்திய பொன்னான ஆண்டு..
1948 ம் ஆண்டு இலங்கை அடைந்த போலிச் சுதந்திரத்திற்கு பின்னர் பெரும் துயரடைந்த ஈழத் தமிழர் வாழ்வில் 2011 ம் ஆண்டு பொன்னான ஆண்டு மட்டுமல்ல பொற்காலத்திற்கு பாதை வரைந்து விடைபெறும் புதுமை ஆண்டாகவும் அமைந்திருக்கிறது.
ஏன் 2011 பொன்னான ஆண்டு இதோ காரணங்கள்:
01. கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்ற போர் காரணமாக வருடம் தோறும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை சிங்கள இனவாத அரசு கொன்றொழித்துள்ளது. அவர்களுடைய வீடுகள், பாடசாலைகள், பொதுக் கட்டிடங்கள் யாவும் அழிக்கப்பட்டன. இந்த ஆண்டு அந்த மரணங்களும், அழிவுகளும் குறைந்துள்ளன.
02. இலங்கைச் சுதந்திரம் சிங்கள இனவாத அரசை ஒரு லைசென்ஸ் கொலையாளியாக மாற்றியிருந்தது. அது நாளும் நாளும் மோசமடைந்து 2009 ம் ஆண்டு வன்னியில் 140.000 பேரை கொல்லுமளவுக்கு உயர்ந்தது. ” இந்த அவலத்திற்கு விசாரணை வேண்டும், சிறீலங்கா போர்க் குற்றவாளி நாடே, அதற்கான விசாரணை வேண்டும்..!” என்ற தெளிவான முடிவை ஐ.நா எடுத்தது, அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கை சிங்கள இனவாத அரசின் தமிழர் படுகொலை லைசென்சை ரத்து செய்துள்ளது மிகப்பெரிய வெற்றியாகும்.
03. சனல் 4 காணொளி இதுவரை உலகில் வெளிவராத பேரவலத்தை உலக மன்றின் முன்னால் தெட்டத்தெளிவாக போட்டது. ஐ.நா செயலர் உட்பட உலகத் தலைவர்கள் அனைவருமே அதைப் பார்த்தார்கள். ” தவறு செய்தது சிறீலங்கா அரசசோ இந்தியாவோ, சீனாவோ அல்ல நாமே..” என்று நாகரிழகமான தலைவர்கள் கவலைப்பட்டார்கள். இப்படியான பெரும் தவறு நடக்கும் அசிங்கமான உலகத்தை நாம் 21 ம் நூற்றாண்டிலும் வைத்திருக்கிறோமே என்ற பெரும் வெட்கத்தை உலகத் தலைவர்கள் அடைய தூண்டுபோலாக அமைந்தது. இதுவரை மரணிக்கும் ஒவ்வொரு கணமும் அட இப்படி ஓர் அசிங்கம் இந்த உலகில் நடக்கிறதே என்று எண்ணியபடி மரணித்தான் தமிழன். அவன் கவலையுடன் மரணிக்கவில்லை வெட்கத்துடனும், நாணத்துடனும் மரணித்தான். இன்று உலகத் தலைவர்கள் அனைவரும் வெட்கமும் நாணமும் அடைய வேண்டிய நிலையை சனல் 4 ஏற்படுத்தியது. ஈழத் தமிழனின் இறப்புக்கள் உலகத்தின் மௌனத்தை கலைத்துவிட்டது. இனிமேல் உலகப் பந்தில் இப்படியான நாடுகள் தேவையில்லை என்ற உலக சமுதாயத்தின் முடிவு ரூனீசியாவில் இருந்து பயணிக்க ஆரம்பித்துவிட்டது.
04. சர்வதேச மனித உரிமைகள் கழகம், ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா என்று ஜனநாயகத்தை விரும்பும் நாகரிக சமுதாயங்கள் அனைத்தும் ஈழத் தமிழருக்கு இழைக்கப்பட்டது அநீதியே என்ற உறுதியான முடிவுக்கு வந்துவிட்டன. இன்னொரு யூலைக்கலவரமும், இன்னொரு குண்டு வீச்சும் நடாத்தினால் சிறீலங்கா சர்வதேச போர்க் குற்றவாளிக் கூண்டில் ஏற நேரிடும். இனி தமிழன் பயப்பட வேண்டியதில்லை துணிச்சலாக ஜனநாயக குரலை முன் வைக்கலாம்.
05. தமிழ் நாட்டில் செல்வி. ஜெயலலிதா ஜெயராம் ஈழத் தமிழருக்கு ஆதரவாக, சிறீலங்கா அரசின் போர்க்குற்றத்திற்கு விசாரணை வேண்டுமென பிரேரணை கொண்டு வந்தார். தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் ஏகோபித்து அதை ஆதரித்தன. இந்திய நடுவண் அரசே அச்சமும், பீதியும் அடைந்தது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கிளரி கிளின்டன் தமிழக முதல்வரை சந்தித்தார். இதுவரை வரலாற்றில் இல்லாத பெரிய வெற்றி இதுவாகும்.
06. விடுதலைப் போருக்காக பெரிய நிதியை வழங்கிவந்த புலம் பெயர் மக்கள் அதன் சுமையை தோளில் இருந்து இறக்க முடிந்தது. இப்போது அவர்கள் கைகளில் பணம் புழக்கத்தில் உள்ளது. ஐரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அவர்கள் வெற்றிகரமாக சந்திக்க அந்தப் புது வலு பேருதவியாக அமைந்திருக்கிறது. பணம் கேட்டு வீடு தட்டும் காலம் முடிவடைந்தது, நாகரிக யுகம் உருவானது தமிழர் வாழ்வில் பெரு வெற்றியாகும்.
07. தமிழகத்தில் சீமான் தலைமையில் காங்கிரசுக்கு எதிராக நடைபெற்ற பிரச்சாரம் அந்தக் கட்சியை 55 தொகுதிகளில் தோற்கடிக்கச் செய்தது. ஈழத் தமிழனுக்கு எதிராக அந்தக் கட்சி செய்த நயவஞ்சக செயலுக்கான தண்டனை தமிழக மக்களால் வழங்கப்பட்டது. அதுபோல தமிழக முதல்வராக இருந்த மு.கருணாநிதியின் முகமூடியையும் தமிழக மக்கள் கிழித்தெறிந்தார்கள். ஈழத் தமிழினத்திற்கு எதிரான பாதையில் சென்றால் தமிழகத்தின் ஆட்சிக்கட்டிலில் இருக்க முடியாது என்பதை செல்வி ஜெயலலிதாவே உணர்ந்து கொண்ட ஆண்டு.
08. புலம் பெயர் நாடுகளில் ஒவ்வொரு தமிழ் மக்களும் சுதந்திரமாக சிந்திக்கவும், தாம் நினைத்ததை செய்யவும் புது வழி பிறந்துள்ளது. மக்கள் வெளிப்படையாக பேசுகிறார்கள், ஜனநாயக வழியில் சிந்திக்கிறார்கள். தவறு செய்தால் தமிழன் செய்தாலும் அது தவறுதான், சிங்களவன் செய்தாலும் அது தவறுதான் என்று வெளிப்படையாக அவர்கள் பேசி, ஜனநாயக சமுதாயமாக எழுச்சி கொள்ளும் காலம் மலர்ந்துள்ளது. அடுத்த ஆண்டு புலம் பெயர் தமிழரின் ஜனநாயக, சுதந்திர செயற்பாடுகள் பெரும் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தும்.
09. சுதந்திரமான தமிழ் இளைய தலைமுறை ஒன்று மேலைத் தேய சமுதாயத்துடன் இணைந்து அபார முன்னேற்றத்தை சந்தித்துள்ளது. தமிழருக்கே தெரியாத சிகரங்களை பல இளைஞர்கள் தொட்டுவிட்டார்கள். தமிழ் ஊடகங்களால் விளங்க முடியாத உன்னதங்களை அவர்கள் அடைந்துவிட்டார்கள். இந்தியா, சீனா போன்ற ஆசிய வல்லரசுகளில் பிறந்தவர்கள் அடைய முடியாத உச்சங்களை அவர்கள் தொட்டுவிட்டார்கள்.
10. உலக சமுதாயத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்ற புதிய உலக ஒழுங்கு பிரான்சில் எழுதப்பட்டுவிட்டது. ரூனிசியா, எகிப்து, லிபியா போன்ற நாடுகளின் சர்வாதிகாரிகள் விரட்டப்பட்டுவிட்டார்கள். இரண்டாம் உலகப் போருக்கு பின் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி குடும்ப ஜனநாயகத்தை உருவாக்கி, ஜனநாயக சர்வாதிகார ஆட்சி நடக்கும் நாடுகளை உடைத்து, புதிய ஜனநாயகம் மலர்விக்கப் படுகிறது. இப்போது வடக்கு ஆபிரிக்காவில் ஊற்றெடுத்த புதிய நைல்நதி சிரியா, ஈரான் வழியாக பாய்ந்து தென்னாசியாவிற்குள் ஓடி, சிறீலங்காவிற்குள் பாய்ந்து வடகொரியா வழியாக சீனாவிற்குள் நுழையும் காட்சியை காணப் போகிறோம். அதற்கான அகரம் எழுதப்பட்ட ஆண்டு இதுவாகும். உலகத்தை பீடித்துள்ள அத்தனை பீடைகளும் அகற்றப்படப்போகின்றன.
இப்படியே எழுதிச் செல்ல ஏராளம் மகிழ்ச்சிகளை இந்த ஆண்டு தந்துள்ளது. அதுமட்டுமல்ல இனி வரும் காலம் இதே பாதையில்தான் வாழ்வு எழுச்சியுடன் போகப்போகிறது. ஈழத் தமிழனுக்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களுக்கு இனி எழுச்சியானகாலமே. கல்தோன்றி (கல்லில் இருந்து ஆயுதங்கள் தோன்றி) மண் தோன்றா காலத்தே (மண்ணில் இருந்து எடுக்கப்பட்ட உலோகங்களினால் ஆன ஆயுதங்கள் தோன்ற முன்னர்) வாளொடு முன்தோன்றிய (கற்களில் இருந்தே வாளைக் கண்டு பிடித்து உலகின் முன் வீரனாகத் தோன்றிய) மூத்த குடி (எல்லா இனங்களுக்கும் அண்ணன் போல பிறந்த முதல் இனம்) மூத்த இனமான தமிழினம் மறுபடியும் உலக அரங்கில் வெற்றியினமாக வலம்வருவதற்கான பாதையை வகுத்த பொன்னான ஆண்டு இதுவாகும்.
இனிய 2011 ம் ஆண்டே உனக்கு நன்றி.. உன் வழியில் வரும் உன் பிள்ளையான 2012ம் ஆண்டை இரு கரம் கூப்பி நம்பிக்கையுடனும், மகிழ்வுடனும் வரவேற்கிறோம். பேரொளியே கருணையுடன் தமிழினத்திற்கு நல்வழி காட்டு என்ற நம் கோரிக்கையை அந்த ஒளிப்பிரவாகம் ஏற்றுக் கொண்டுவிட்டது. எங்கும் புது நம்பிக்கை மலர்கிறது.
வாழ்க தமிழ்!
வெல்க தமிழினம்!
சிங்கள கொடுஞ்சிறைகள் உடைந்து தமிழினம் சுதந்திரமாக வெளி வரட்டும் !
போரினால் பாதிக்கப்பட்ட அத்தனை பேரும் புது நம்பிக்கை பெறட்டும் !
வெல்க உலக ஜனநாயகம்!
சிங்களவன், தமிழன், இந்தியன் என்ற பேதமின்றி நல்லவர்கள் எங்கிருந்தாலும் அனைவரும் ஒளி பெறட்டும்.. தீயவர்களும் திருந்தட்டும்..
ஒன்றே உலகம் என்ற கணியன் குரல் மறுபடியும் உலகை வழி நடாத்தட்டும்.
மகிழ்ச்சி..!
மகிழ்ச்சி ..!
மகழ்ச்சி…!!!
தமிழனுக்காக தன்னைத் தந்த 2011 ம் ஆண்டே நன்றி .. மகிழ்ச்சி!
வருக வருக 2012
அலைகள் 31.12.2011
0 Responses to தமிழனுக்கு மகிழ்வு தந்து விடைபெறும் 2011