துருக்கி அரசு குர்டிஸ்தானிய மக்களுக்கு இழைத்துவரும் கொடுமை சொல்லி முடியாத சோகமாக உள்ளது.
நேற்று கிழக்கு துருக்கியில் உள்ள குர்டிஸ்தானிய மக்கள் வாழும் பகுதியில் துருக்கிய கட்டாக்காலி விமானங்கள் குண்டு வீசின. தம்மை நோக்கி எதிர்த்தாக்குதல் நடாத்தப்பட்ட காரணத்தால் இந்தத் தாக்குதலை நடாத்தியதாகவும், கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் என்றும் துருக்கி ஓலமிட்டது. ஆனால் இன்று அதனுடைய செப்படி வித்தை சாயம் வெளுத்து உண்மை அம்பலத்திற்கு வந்துள்ளது.
கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்ல பொது மக்களே என்ற உண்மை வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. எப்போதுமே ஓர் இனத்திற்கு நயவஞ்சகமான கொடுமை இழைத்த நாடுகள் இப்படித்தான் தொழிற்படும். தாம் புரிந்த நயவஞ்சகத்திற்கு ஒரு காலமும் தமக்கு மன்னிப்பு கிடையாது என்ற உண்மை இந்த நாடுகளுடைய அடி மனதில் இருக்கும்.
ஆகவே எதிர்ப்பு இல்லாவிட்டாலும் போர் நடப்பது போன்ற நெருப்பை ஊதி எரித்தபடி இருக்கும். தமக்கு எதிரான உணர்வு மறை பொருளாக மூண்டு விடும் என்ற அச்சம் இவர்களுக்கு எப்போதுமே இருப்பதால் இவ்வாறு செய்வார்கள். ஈழத் தமிழர் விவகாரத்தில் யாவும் முடிந்து போனாலும் சிறீலங்காவும், இலங்கையும் தொடர்ந்து அவர்களுக்கு எதிராக செயற்படுவதும் இது போன்ற விதியின் பாற்பட்டமே.
தன் நெஞ்சு தனக்கு தெரியும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் இவர்கள் செயற்படுகிறார்கள். ஈழத் தமிழர் நடந்ததை மறந்து உண்மையாக உறவு கொண்டாலும் இவர்கள் ஒரு போதும் நம்பமாட்டார்கள். அது போலவே துருக்கியும் ஒரு போதும் குர்டிஸ்தானியரை நம்பப்போவதில்லை. இந்தக் குண்டு வீச்சு உணர்த்தும் உண்மை இதுவாகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைத்தால் நயவஞ்சகன் குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டிய நிலை வரும் என்பதால் அவன் போர் முடிந்தாலும் நெருப்பை ஊதியபடி காலம் கடத்துவான் என்பது இயற்கை விதியாகும்.
0 Responses to துருக்கியின் கோமாளித்தனம் 35 அப்பாவிகள் பலி