Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்னை வரும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நாளை கருப்புக் கொடி காட்டப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், அவரைத் தொடர்ந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் அறிவித்திருப்பதால் சென்னை போலீஸார் படபடப்புடன் உள்ளனர். எந்த இடத்திலும் பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டப்பட்டு விடக் கூடாதே என்ற பதட்டத்துடன் அவர்கள் பாதுகாப்புப் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசுக்கு மத்திய அரசு ஆதரவாக செயல்படுகிறது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார் வைகோ. மேலும், பிரதமருக்கு நாளை கருப்புக் கொடி காட்டப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். அதேபோல விஜயகாந்த்தும் தனது தலைமையில் கருப்புக் கொடி காட்டப்படும் என்று அறிவித்துள்ளார். எந்த முகத்தை வைத்துக் கொண்டு பிரதமர் தமிழகத்திற்கு வருகிறார் என்றும் அவர் காட்டமாக கேட்டுள்ளார்.

இதேபோல, காரைக்குடிக்கு பிரதமர் வரும்போது அங்கு கருப்புக் கொடி காட்டப்படும் என்று விவசாய அமைப்புகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவையும் அறிவித்துள்ளன. மேலும், தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப் போவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதனால் சென்னை, காரைக்குடி, திருச்சி போலீஸார் கடும் பதட்டத்துடன் உள்ளனர். எந்த இடத்திலும் கருப்புக் கொடி காட்டப்பட்டு விடக் கூடாதே என்ற படபடப்புடன் உள்ளனர். இதனால் பிரதமர் செல்லும் வழியெல்லாம் பெருமளவில் போலீஸார் குவிக்கப்படவுள்ளனர். பலத்த பாதுகாப்பும் போடப்படுகிறது.

சென்னை ராஜ்பவனிலிருந்து பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் வரை ரகசிய கண்காணிப்புக் கேமராக்களும் பொருத்தப்படுகின்றன. ஆயுதப் படை போலீஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லியிலிருந்து ஏற்கனவே வந்து விட்ட 6 உறுப்பினர்களைக் கொண்ட பிரதமரின் பாதுகாப்பு்ப் படை நிபுணர்களும் பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்துள்ளனர்.

இதேபோல திருச்சி, காரைக்குடி ஆகிய இடங்களிலும் பெருமளவில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் காரைக்குடியில் ஆயிரக்கணக்கில் விவசாயிகளைத் திரட்டிக் கொண்டு வர பல்வேறு விவசாய அமைப்புகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருப்பதால் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

0 Responses to கருப்புக் கொடிகளுடன் தயாராகும் வைகோ, விஜயகாந்த்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com