Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பொலிஸ், காணி அதிகாரங்கள் இல்லை, இராணுவ முகாம்கள் வாபஸ் இல்லை, என்ற ஜனாதிபதியின் அறிவிப்புகள் புதிய ஆண்டில் தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கையை தகர்த்து விட்டுள்ளன.

புலிகளை அழித்து, போரை முடித்து வைத்து விட்டு சமாதானத்தை வாங்கித்தருகிறோம் என இலங்கை தமிழ் மக்களுக்கு இந்திய, அமெரிக்க, ஐரோப்பிய அரசாங்கங்கள் காப்புறுதி சான்றிதழ்கள் வழங்கியிருந்தன.

இன்று எல்லோரும் கூட்டுசேர்ந்து எம்மை ஏமாற்றி விட்டார்கள் என்ற அதிர்ச்சியுடன் தமிழ் மக்கள் புதிய ஆண்டை எதிர்நோக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இனி நியாயம் வேண்டி சாத்வீக மக்கள் போராட்டங்களை ஆரம்பிக்க வேண்டியதுதான் புதிய ஆண்டு தமிழர்களுக்கு காட்டும் வழி என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் புதிய நிலைப்பாடுகள் தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

காணி அதிகாரங்கள் தொடர்பிலே கடந்த கால ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக பண்டா செல்வா ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. வரையறைக்குட்பட்ட பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் 13ம் திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது. போர் நடை பெற்ற காலத்திலும், அதற்கு பிறகும் கூட இந்தியாவிற்கு சென்ற அரசாங்க பிரதிநிதிகள் 13ம் திருத்தத்திற்கு அப்பால் செல்வதாக கூறிவந்தார்கள். அதையே இந்தியா தமிழர்களுக்கு கூறிவந்தது. இன்று இவை அனைத்தையும் அரசாங்கம் கைவிட்டுள்ளது.

அதேபோல் வட கிழக்கில் உள்ள அனைத்து இராணுவ முகாம்களையும் முழுமையாக தமிழ் மக்கள் அகற்றும்படி சொல்லவில்லை. கடந்த காலங்களிலும் வடக்கிலும்இ கிழக்கிலும் நாடு முழுக்க இருப்பதைபோல் இராணுவ முகாம்கள் இருந்தன. இராணுவ தலைமை அதிகாரிகளாக தமிழர்கள் இருந்தார்கள். ஆனால் போர் ஆரம்பித்த பிறகு புதிய பெருந்தொகை முகாம்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இன்று போர் முடிந்து விட்டது. இந்நிலையில் இராணுவ மேலதிகமாக உருவாக்கப்பட்ட முகாம்கள் அகற்றப்படுவதுதான் நியாயம். உலகில் எந்த ஒரு நாட்டிலும் போர் முடிந்த பிறகு இத்தகைய முறையில் இராணுவம் வாபஸ் வாங்கப்படுவது வழமையாகும். இராணுவம் வாபஸ் வாங்கப்பட்டு காவல் நடவடிக்கைகளுக்காக அவசியமானால் பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்படவேண்டும். ஏனென்றால் போலிஸ் என்பது. வேறு ராணுவம் என்பது வேறு. ஆனால் இலங்கையில் இன்றும் தமிழ் பகுதிகளில் இராணுவம் போர் காலத்தை போலவே நிலை கொண்டு இருக்கிறது. இப்படி இருக்கும் இராணுவம் சும்மா இருக்க வில்லை. அது சிவில் நடவடிக்கைகளிலும் தலையீடு செய்து வருகிறது. ஏனென்றால் இராணுவத்திற்கு சும்மா இருக்க முடியாது.

இந்த பின்னணியில் நாட்டின் தலைவர் பொலிஸ், காணி அதிகாரங்கள் பகிந்து அளிக்க முடியாது என்றும், இராணுவ முகாம்களை வாபஸ் வாங்க முடியாது என்றும் கூறியுள்ளார். இது புதிய ஆண்டில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்த தமிழ் மக்களின் நம்பிக்கையை இந்த அறிவுப்புகள் தகர்த்துள்ளன.

போரை முடித்து வைத்து விட்டு சமாதானத்தை வாங்கித் தருகிறோம் என தமிழ் மக்களுக்கு காப்புறுதி சான்றிதழ்கள் வழங்கிய சர்வதேச சமூகம் செயற்படுவதாக தெரியவில்லை. இந்நிலையில் நியாயம் வேண்டி தமிழ் மக்கள் சாத்வீக போராட்டங்களை நடத்த வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இதுதான் புதிய ஆண்டு சொல்லும் செய்தி என மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to தமிழர்களை ஏமாற்றிய இந்தியா, அமெரிக்க, ஐரோப்பா: மனோ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com