சுனாமி என்ற ஆழிப்பேரலையால் தமிழீழக் கரையோரம் காவு கொள்ளப்பட்டு, இன்று ஏழு வருடங்கள் கடந்துவிட்டது. இந்தக் கொடூரம் தமிழின அழிப்பிற்கு முந்திய இயற்கையின் அழிப்பு.
சாட்சியகளற்ற வகையில் சிங்கள தேசத்தால் ஈழத் தமிழினம் அழித்து முடிக்கப்பட்டது போலவே, அதற்கும் ஆறு வருடங்களுக்கு முன்னர் சுனாமி ஈழத்துக் கரையோரங்களை முற்றாக அழித்துச் சென்றது.
அந்தப் பேரவலத்தில் சிங்கள தேசம் உட்பட 35 ஆயிரம் மக்கள் பலியானதாக அறிவிக்கப்பட்டாலும், அவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள்தான். அந்த மக்களுக்காக உலக நாடுகள் அள்ளி வழங்கிய நிவாரணப் பொருட்களைக் கூட சிங்கள தேசம் தமது வாயில் போட்டு சிங்கள நீதியை உலகுக்கு எடுத்துக் காட்டியது.
அந்தக் கொடூரமான காலத்தில், ஈழத் தமிழினம் பலமாக இருந்தது. உணர்வோடு, ஒன்றாகப் பணியாற்றியது. அந்தப் பேரழிவின் மீட்புக்காகத் தெருக்களெல்லாம் இறங்கி நிதியும், பொருட்களும் சேர்த்து அனுப்பியது. ஆனாலும், களத்தில் நின்று பணியாற்றிய விடுதலைப் புலிகளது செயற்திறனை உலக நாடுகளே வியந்து பாராட்டின.
சுனாமிப் பெருந்துயரை, அதன் பின்னே நிகழ்ந்த மனிதப் பேரவலம் சிறிதாக்கிச் சென்றாலும் இழப்பு எல்லாமே ஈழத் தமிழர்களுக்கானதாகவே எண்ணத் தோன்றுகின்றது. ஈழத் தமிழர்களது இந்த இரண்டு துயரங்களும் அந்த மண்ணின் கரைகளிலேயே நடைபெற்று முடிந்துள்ளன.
அன்று ஆழிப்பேரவலத்தில் துயருற்ற எம் தமிழினத்தைத் தேற்றுவதற்கும், அதிலிருந்து மீண்டு வாழ வைப்பதற்கும் விடுதலைப் புலிகள் பலமாக உயர்ந்து நின்றார்கள். இன்று, எதிரியின் படைகளால் சூழப்பட்டு, ஏன் என்று கேட்பதற்கு நாதியற்று, திக்குத் திசை தெரியாத அடிமை இருட்டுக்குள் ஈழத் தமிழர்கள் அடக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் மக்களுக்காக அழுவதற்கும், எழுவதற்கும், போராடுவதற்கும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களாகிய நாங்களே இருக்கின்றோம். இன்னொரு பேரழிவை அவர்கள் எதிர் கொள்வதற்கு முன்னதாக, அவர்களை மீட்டு வாழவைக்க நாம் எம்மால் முடிந்த அனைத்தையும் செய்வதற்கு, நாம் ஒன்றாக இணைந்து செயற்படுவோம்.
பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை
0 Responses to ஈழத் தமிழரை வஞ்சித்த ஆழிப் பேரலையின் ஏழாம் ஆண்டு நினைவு!