துருக்கியின் தென் கிழக்கு பகுதியான Sirnak மாகாணத்தில், Uludere எனும் இடத்தில் கடந்த புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட
ஜெட் விமான குண்டுவீச்சு தாக்குதலில், 36 குர்திஷ் இன மக்கள் கொல்லப்பட்டனர். இது தவறுதலாக நடைபெற்ற தாக்குதல் என ஆளும் கட்சி AKP மன்னிப்பு கோரியிருந்ததுடன், ஏன் இது இடம்பெற்றது என்பது தொடர்பிலான விசாரணைகளை முடக்கிவிட்டிருப்பதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில், குர்திஷ் இன மக்களின் ஆதரவு இயக்கமான PKK இத்தாக்குதல் தொடர்பில் தனது கடும் கண்டனத்தை விடுத்திருந்ததுடன், தமது தலைவர்களுக்காகவும், போராட்ட மக்களுக்கு எதிராகவும் ஆளும் AKP கட்சியினால் வேண்டுமென்றே கட்டவிழ்த்து விடப்படும் தாக்குதல் நடவடிக்கைகள் இவையென குற்றம் சுமத்தியிருந்தது. மேலும், தமது மக்களை வேண்டுமென்று கைது செய்து சித்திரவதைப்படுத்தி வருவதாகவும், ஆனாலும் துருக்கி தலைநகர் மற்றும் பிற முக்கிய நகரங்களில், ஆளும் அரசுக்கு எதிரான தமது போராட்டம் தீவிரமடையும் எனவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் துருக்கியின் துணைப்பிரதமர் Bulent Arinc தொலைக்காட்சி செவ்வி ஒன்றில் தெரிவிக்கையில், துருக்கி அரசானது தீவிரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை தீவிரப்படுத்தியுள்ளது. அவ்வப்போது இவ்வாறான தவறுதலான சம்பவங்கள் இடம்பெறக்கூடும். இவை வருத்தமளிப்பதாக இருப்பதாயின், போராடும் அம்மக்மளே இவ்விளைவுகளுக்கு பொறுப்பேற்கவேண்டும் என்றார்.
இலங்கையின் முள்ளியவாய்க்கால் இறுதியுத்தத்தின் போது வி.புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டதற்கு துருக்கி அரசே முதலில் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தது. தற்போது இலங்கை இராணுவத்தின் வழிமுறைகளை பின்பற்றி அதே உக்தியில் குர்திஷ் இன மக்களை அடக்குவதற்கு அந்த அரசு முயற்சிக்கிறது என தமிழ்நெற் இணையத்தளம் கண்டனம் விடுத்துள்ளது.
இலங்கையில் இனப்படுகொலை நடந்து முடிந்த போது மௌனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சர்வதேச சமூகம் தற்போது அதே வழிமுறையில் துருக்கியில் நடந்து வரும் இனப்படுகொலை நிகழ்வுகளையும் வேடிக்கை பார்க்க போகிறதா எனவும் அது கேள்வி எழுப்பியுள்ளது.
குறித்த எறிகணை தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை கண்டித்து ஆயிரக்கணக்கான குர்திஷ் இனத்தவர்கள் நடத்திய ஆர்ப்பாட்ட பேரணியின் போதும் இராணுவத்தினருக்கும் - பொதுமக்களுக்கும் இடையே பாரிய வன்முறை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
1984ம் ஆண்டு முதல், குர்திஷ் இன கிளர்ச்சி படையினர் தமது உரிமைகளுக்காக துருக்கியில் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.
விமான படை தாக்குதலில் கொல்லப்பட்ட மக்கள்.
இப்படுகொலைகளை கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட கலவரம்
0 Responses to முள்ளிவாய்க்கால் அவலம் இப்போது துருக்கியில் தொடர்கிறது?! (காணொளி இணைப்பு)