முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் கேரள அரசின் தமிழர் விரோத போக்கைக்கண்டித்து போராடியவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை இரத்து செய்ய வேண்டும் என்று கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை:
முல்லைப் பெரியாறு அணை காக்கப் போராடியவர்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெறுக: நாம் தமிழர் கட்சி கோரிக்கை
முல்லைப் பெரியாறு அணையின் உறுதித் தன்மையை முழுமையாக ஆய்வு செய்ய நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் இந்திய உச்ச நீதிமன்றம் அமைத்த அதிகாரமிக்க நிபுணர்கள் குழு அணைப் பகுதியில் ஆய்வு நடத்திவரும் நிலையில், கேரள அரசும், அம்மாநில அரசியல் கட்சிகளும் அணையை உடைக்கும் நோக்கோடு தம் மாநில அரசியல் சக்திகளை தூண்டின. முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள இடுக்கி மாவட்டத்தில் கூலித் தொழிலாளர்களாகப் போய் வேலை செய்துவரும் தமிழர்கள் பலரும் தாக்கப்பட்டு அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். தமிழ்நாட்டு பெண்கள் சிலரின் மாராப்பு சேலைகளை பிடித்து இழுத்து மலையாளிகள் சிலர் அத்துமீறினர். தமிழ்நாட்டு வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டன. தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்குச் சென்ற பக்தர்கள் தாக்கப்பட்டனர்.
இப்படி பல்வேறு முனைகளில் தமிழர்கள் மீது நடந்த தாக்குதலைத் தொடர்ந்தே தமிழ்நாட்டில் எதிர்ப்பு கிளம்பியது. எல்லைப் பகுதிகளில் இருந்த மலையாளிகளின் சில நிறுவனங்கள் தாக்குதலுக்கு உள்ளாயின. ஆனால், ஒரு மலையாளி கூட போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களால் தாக்கப்படவில்லை. ஒவ்வொரு நாளும் கேரள எல்லையை நோக்கி பேரணி நடத்தி முல்லைப் பெரியாறு அணையைக்காப்போம் என்பதைத்தான் தமிழர்கள் தங்கள் போராட்டத்தின் மூலம் வெளிக்காட்டினார்களே தவிர, திட்டமிட்ட வன்முறையில் ஒருபோதும் ஈடுபடவில்லை. இந்த நிலையில், வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி நூற்றுக்கணக்கான தமிழர்களை தமிழக காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். குறிப்பாக தேனி மாவட்டத்தில் மட்டும் 40 பேர் கைது செய்யப்பட்ட சிறைபடுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன்குமார் அபினபு கூறியுள்ளார். இது நியாயமான நடவடிக்கைதானா?
தமிழர்கள் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்திய, தமிழ்நாட்டு பெண்களின் மாராப்பு சேலையை இழுத்தி அத்துமீறிய, சபரிமலை சென்ற ஐயப்ப சுவாமி பக்தர்கள் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்திய, தமிழ்நாட்டின் பேருந்துகள் மீது கல்வீசித் தாக்கிய மலையாளிகள் மீது அம்மாநில காவல்துறையினர் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லையே? வன்முறையில் ஈடுபட்ட மலையாளிகளில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லையே? தமிழக முதல்வரின் உருவபொம்மை ஆங்காங்கு கொளுத்தப்பட்டதே, ஆனால் அதற்காக ஒருவரும் அங்கு கைது செய்யப்படவில்லையே? தங்கள் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்திய மலையாளிகள் மீது காவல் நிலையம் சென்று புகார் அளிக்கச் சென்ற ஐயப்ப பக்தர்களை 10 நேரம் காவல் நிலையத்திலேயே அமர வைத்து அவமதித்தது கேரள மாநில காவல் துறை. அதன் எதிரொலியாகத்தான் திருப்பூரில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இப்படி தங்கள் மாநிலத்தவரின் அராஜகசெயல்களையெல்லாம் நடத்தும் மலையாளிகள் மீது அம்மாநிலத்தில் வழக்கேதும் பதிவு செய்யப்படாத நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது செய்யப்படுவதும், வழக்குப் பதிவு செய்யப்படுவதும் ஏன்?
சட்டம் ஒழுங்கு என்பது தமிழனுக்கு மட்டும்தானா? மலையாளிக்கு இல்லையா? இங்குள்ள தென் மண்டல காவல் தலைமை ஆய்வாளர் ஒருவர், போராட்டக்காரர்கள் எல்லைப் பக்கம் வந்தால் அவர்களின் கை, கால்களை ஒடித்துவிடு என்று ஒலிபெருக்கி மூலம் காவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கிறார். ஆனால் அம்மாநில காவல் துறையினர் அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லையே? தமிழர்கள் எல்லைத் தாண்டினால் கண்டதும் சுடு என்று அம்மாநில காவல் துறைத்தலைவர் உத்தரவு போடுகிறார். இங்கிருக்கும் காவல் அதிகாரிகளும் ஐ.பி.எஸ். தேரியவர்கள்தான், கேரளத்தில் இருக்கும் காவல் அதிகாரிகளும் ஐ.பி.எஸ்.தேரியவர்கள்தான். ஆனால் நடவடிக்கையில் மட்டும் ஏன் இவ்வளவு பெரிய வித்தியாசம்? போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களை கெட்ட, கெட்டவார்த்தைகளில் பேசியிருக்கிறார் தென் மண்டல ஐ.ஜி. இவருக்கு இப்படியெல்லாம் முறையின்றி நடந்துகொள்ளும் அதிகாரம் எங்கிருந்து வருகிறது? எல்லைப் பகுதியில் வாழும் தமிழர்கள் காவல்துறையினரின் இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் மிகவும் கொதித்துப்போய் இருக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பு நியாயமானதே. சட்டம் ஒழுங்குத் தொடர்பான அணுகுமுறை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுமா என்ன?
எனவே தமிழக அரசு இப்பிரச்சனையில் தலையிட வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீதான வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெறுவதாக அறிவிக்க வேண்டும். முல்லைப்பெரியாறு அணையைக் காப்போம் என்று தமிழக மக்கள் ஒன்றிணைந்து காட்டி எழுச்சியால்தான் இன்றைக்கு நமது பலம் மத்திய அரசுக்கு புரிந்துள்ளது என்பதை உணர வேண்டும். மக்கள் சக்தி இல்லாமல் இப்பிரச்சனையில் தமிழ்நாடு வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து தமிழக அரசு செயல்பட வேண்டும்.
வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற்று, கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறது.
நாம் தமிழர் கட்சிக்காக,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
முல்லைப் பெரியாறு – வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்: சீமான் அறிக்கை!
பதிந்தவர்:
ஈழப்பிரியா
27 December 2011
0 Responses to முல்லைப் பெரியாறு – வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்: சீமான் அறிக்கை!