Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகள் பயனளிக்காது போனால் தமிழ் மக்கள் வீதியில் இறங்கி அறவழிப்போராட்டத்தில் ஈடுபடுவதற்குத் தயாராக வேண்டும் என்று வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

பன்முகப்படுத்தப்பட்ட வரவு-செலவுத்திட்டத்தின்கீழ், ஒரு இலட்சம்ரூபாய் நிதியொதுக்கீட்டில் வவுனியா மாவட்டத்தில் பறநட்டகல் மீள்குடியேற்ற கிராம மக்களுக்கு தென்னங்கன்றுகளை வழங்கி வைக்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த ஜனவரி மாதம் 10ஆம் திகதி தொடங்கி இன்றுவரை அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. இறுதியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்பவைகளை வழங்கினால், தன்னால் தனது சொந்த கிராமத்திற்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுவிடும் என்ற ஜனாதிபதி கூற்று மிகவும் கவலையளிப்பதாக உள்ளது என சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துவரும் நாட்டின் இனப்பிரச்சினையைத் தீர்த்தால் தனது சொந்தக் கிராமத்திற்குச் செல்ல முடியாது என்று சொல்லியிருப்பது பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது என சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினை என்பதை ஜனாதிபதி தன்னுடைய சுயநலத்துடன் ஒப்பிட்டுப்பார்க்கிறாரா, என்ற சந்தேகம் இதன் மூலம் எழுந்துள்ளது. இதுவரை இந்த நாட்டை ஆட்சி செய்த அனைத்து அரசியல் தலைவர்களும் இனப்பிரச்சினையைச் சரியாக அணுகவில்லை. நான் தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வை முன்வைப்பேன் என்று தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்த ஜனாதிபதியே இப்போது இவ்வாறு கூறியிருக்கின்றார்.

இதன் மூலம் தமிழ் மக்களுக்கும் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சி குறித்தும் அரசாங்கம் இரட்டைவேடம் பூண்டிருக்கின்றதா? இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்பது வெறும் தேர்தல் பிரச்சாரமா? என்று கேட்கத் தோன்றுகின்றது.

தமிழ் மக்களுக்கு பேச்சுவார்த்தை மூலம் நியாயமான தீர்வு கிடைக்காவிட்டால், அறவழியில் போராடுவதற்கு தமிழ் மக்கள் அனைவரும் தயாராக வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைக்குப் பாதிக்கப்பட்டவர்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய குறைந்த பட்ச தீர்வையாவது முன்வைக்க முடியாது, அவ்வாறு செய்தால் தான் தனது சொந்த ஊருக்குச் செல்ல முடியாது என்று ஒரு நாட்டின் ஜனாதிபதி கூறுவது சரியானதா? என வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் வவுனியா பிரதேசசபையின் தவிசாளர் சிவலிங்கம், உறுப்பினர்கள் கதிர்காமு பரமேஸ்வரன், தர்மலிங்கம், பார்த்திபன் ஆகியோரும் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பறநட்டகல் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் தலைமை தாங்கினார்.

0 Responses to தமிழ் மக்கள் அறவழிப் போராட்டத்திற்குத் தயாராக வேண்டும்: சிவசக்தி ஆனந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com