2004ம் ஆண்டு ஏற்பட்ட இயற்கை அனர்த்தமான சுனாமியையும், 2009ம் ஆண்டு தமிழினம் மீது சிங்கள பேரினவாதம் புரிந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தையும் எமது இனம் என்றும் மறக்க தயாரில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான வவுனியா நகரசபையின் உப – தலைவர் எம்.எம். ரதன் தெரிவித்தார்.
சுனாமியில் உயிர்நீத்த மக்களுக்கான ஏழாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் ஏற்பாடு செய்த நிகழ்வு, இறம்பைக்குளம் கருமாரி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்றபோது அதில் கலந்துகொண்டு நினைவுரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இந்நிகழ்விற்கு வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் தலைவர் முத்து ஸ்ரீஜெயந்திநாத குருக்கள் தலைமை தாங்கினார். உயிர் நீத்த உறவுகளுக்காக இரண்டு நிமிடம் அகவணக்கம் செலுத்தப்பட்டது. அத்துடன் நினைவுச்சுடரும் ஏற்றப்பட்டது
அங்கு தொடர்ந்து உரைநிகழ்த்திய ரதன்,
உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்களில் அதிக துன்பத்தை சந்தித்த இனம் தமிழ் இனமே. இயற்கை அனர்த்தங்களும், செயற்கை அனர்த்தங்களும் நிகழ்ந்தாலும் அதிலிருந்து மீண்டெழும் இனம் தமிழினமே. இதனடிப்படையில் எத்தனையோ துயரமான நிகழ்வுகளை எங்கள் இனம் சந்தித்தாலும் 2004ம் ஆண்டு ஏற்ப்பட்ட இயற்கை அனர்த்தமான சுனாமியையும், 2009ம் ஆண்டு தமிழினம் மீது சிங்கள பேரினவாதம் புரிந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தையும் எமது இனம் என்றும் மறக்க தயாரில்லை.
இன்றைய நாள் உலக வாழ் மக்கள் மத்தியிலே குறிப்பாக தென்கிழக்காசிய மக்கள் மத்தியிலே ஓர் துயர நாளாகும். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் நாள் சுமாத்திரா, இந்தோனேசியா தீவுகளில் ஏற்ப்பட்ட நிலநடுக்கம் பூமி அதிர்வு காரணமாக ஏற்ப்பட்ட சுனாமி பல நாடுகளை தாக்கியது.
இதன் தாக்கம் இலங்கையையும் பாதித்தது. குறிப்பாக வட – கிழக்கு இணைந்த எமது தாயக பகுதியில் தான் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் கொள்ளப்பட்டார்கள். கோடிக்கனக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டன. புலர் அங்கசுகவீனர்களாகினர். தமிழ்சமூகத்திற்கு மட்டுமல்ல ஏனைய சமூககளையும் இச்சுனாமி பாதித்தது
நீண்டகாலமாக தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள இராணுவத்திற்கும் இடையிலான போருக்கு பின்னர் 2002ம் ஆண்டு ஏற்பட்ட சமாதான ஒப்பந்தத்தின் பிரகாரம் எமது தமிழ் பேசும் மக்கள் ஒராளவுக்கேனும் நிம்மதியாக வாழ்ந்து வந்த வேளையில்தான் இவ் அனர்த்தம் 2004ம் ஆண்டு ஏற்ப்பட்டது.
போரினால் பாதிக்கப்பட்டிருந்த எமது மக்கள் சுனாமியால் மேலும் பாதிக்கப்பட்டனர். சுனாமி தாக்கம் காரணமாக வெளிநாடுகள் பல இலங்கைக்கு பாரிய நிதி உதவிகள் பொருள் உதவிகள் செய்தன. ஆயினும் அவ்வுதவிகள் அன்று ஆட்சியில் இருந்த சந்திரிக்கா அரசாங்கத்தினால் வட – கிழக்கு இணைந்த எமது தாயகப் பிரதேசத்தில் புறக்கணிக்கப்பட்டது.
சுனாமி மீள்கட்டுமான பணிசார்ந்த குழு ஒன்று அமைக்கப்பட்டபோதிலும் தெற்கில் அன்று மேலோங்கி இருந்த விமல் வீரவன்ச, ரில்வின் சில்வா போன்ற இனவாதிகளின் இனவாதம் சார்ந்த போக்குகளால் அக்குழுவும் அன்றைய சூழ்நிலையில் நிறுத்தப்பட்டது. ஆயினும் எமது மக்கள் தங்கள் சுயமுயற்சியாலும் புலம்பெயர் எமது உறவுகள் மேற்கொண்ட உதவிகளாலும் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தினர்.
இதேபோன்றுதான் இறுதியாக இடம்பெற்ற யுத்தத்தின் பின்னர் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் குறிப்பாக எமது வன்னி உறவுகள் அடிப்படைத் தேவைகள் இன்றி வாழ்வதையே காணக்கூடியதாகவுள்ளது. வெள்ளத்தால் அவதியுற்று அல்லலுறுகினார்கள்.
சிறிய தறப்பாள்களுக்குள் உறங்குவதற்கும் உண்ணுவதற்கும் வழிதெரியாமல் தவிக்கின்றார்கள். இவ்வாறான கட்டத்தில் புலம்பெயர் எமது உறவுகள் உதவிகள் சிலவற்றை வழங்க முன்வரவேண்டும்.
சுனாமி ஏற்படும் முன் உள்ள சூழ்நிலை போலதான் இன்று எமது போராட்டமும் அடங்கி காணப்படுகின்றது. கடல் அலையானது எவ்வாறு உள்ளீர்க்கப்பட்டு பின்னர் யாராலும் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கடல் அலையானது மேலோங்கி வருமோ – அதே போல் நாமும் எமது இனமும் தற்போது அடங்கி உள்ளீர்க்கப்பட்டு காணப்படுகின்றோம்.
ஏன்றோ ஒருநாள் எமது போரிலும் அது சார்ந்த தன்மைகளையும் யாவருக்கும் புரியவைப்போம். எனவே சுனாமி என்ற இயற்கை அழிவில் இருந்தும், போர் என்ற செயற்கை அழிவுகளிலிருந்தும் எம்மை நாம் மன ஆறுதல் படுத்தி புதிய பாதையில் புதிய சிந்தனையில் பயணிப்போம்.
சுனாமி பேரலை தாக்கத்தினாலும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தினாலும் உயிரிநீத்த மக்கள் அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதோடு அவர்களின் ஆத்ம சாந்திக்கும் பிரார்த்திப்போம் என அவர்மேலும் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் மனங்களில் சுனாமியும், முள்ளிவாய்கால் பேரவலமும் மறக்கமுடியாதவை!
பதிந்தவர்:
ஈழப்பிரியா
27 December 2011
0 Responses to தமிழ் மக்கள் மனங்களில் சுனாமியும், முள்ளிவாய்கால் பேரவலமும் மறக்கமுடியாதவை!