இலங்கை என்கிற நாட்டில் இரு இனங்கள் தனித்தன்மையோடு வாழ்ந்தார்கள் என்பது வரலாறு. இரு இனங்களின் நாடுகளையும் ஆங்கிலேயர்கள் கைப்பற்றியவுடனேயே சிலோன் என்கிற நாட்டின் பெயரில் ஐக்கியப்படுத்தப்பட்டன.
ஐக்கியப்படுத்தப்பட்ட நாட்டை பெரும்பான்மை சிங்களவர்களின் கைகளில் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்கள் ஆங்கிலேயர்கள். தமிழ்ப் பிரதேசத்தில் தமிழர்களே பெரும்பான்மை இனத்தவராக வாழ்கிறார்கள். சிங்களப் பிரதேசத்தில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள்.
சிறிய நாடான தமிழீழத்தைப் பெரிய நாடான சிங்களத்துடன் இணைத்ததன் பின்னர் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக இருப்பது சாத்தியமே. இதனை மையமாகக் கொண்டு பிரித்தானிய ஏகாதிபத்தியம், தனக்கே கைவந்த கலையான பிரித்தாளும் தந்திரத்தை கைக்கொண்டது. இதன் விளைவே பல உலகநாடுகளில் இடம்பெற்ற மற்றும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இனப் போராட்டங்கள்.
குட்டையைக் குழப்பி மீன்பிடிக்கும் தந்திரத்தையே இன்றுவரை பல ஏகாதிபத்திய அரசுகள் செய்து வருகிறார்கள். காலம் தாழ்த்தியாவது சிங்கள அரசின் ஏமாற்றுத் தந்திரப் புத்தியை பிரித்தானியா போன்ற நாடுகள் உணர ஆரம்பித்துள்ளன என்பது சற்று மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை டிசம்பர் 16-ஆம் நாளன்று பொதுமக்கள் அறியும் வண்ணம் வெளியிடப்பட்டது. பதினெட்டு மாதங்கள் நடத்திய விசாரணையை ஆவலாக எதிர்பார்த்தார்கள் பல உலக நாடுகள்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நியமித்த மூன்று பேர் அடங்கிய குழு (தருஸ்மன் தலைமையிலான நிபுணர்குழு) பரிந்துரை செய்தவற்றை நிறைவேற்ற வேண்டியவைகள் பற்றி மகிந்தாவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு செய்யுமென்று சிறிலங்கா அரசு அறிவித்தது.
இதனை ஏற்றுக்கொண்ட பல மேற்கத்தைய நாடுகள் மற்றும் ஐ.நா. சபை தொடர்ந்தும் குறித்த கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டுமென்று குரல் கொடுத்து வந்தார்கள். சிறிலங்கா அரசும் இதனை செய்துவிட்டது.
ஆணைக்குழுவின் விடயங்களும் பரிந்துரைகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமா?
ஆணைக்குழுவின் 407 பக்கங்களைக் கொண்ட இறுதி அறிக்கையில் போர் தொடர்பான விடயங்களும், பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களையும், பரிந்துரைகளையும் மேலோட்டமாக அலசுவோமாக, அவையாவன:
(1) வேதனைகளை மறந்து எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுப்போம்,
(2) பொதுமக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து வேண்டுமென்றே தாக்குதல் நடத்தவில்லை,
(3) ஆணொருவர் வரம்பு மீறியிருந்தால் விசாரணைக்குட்படுத்த வேண்டும்,
(4) காணொளிக் காட்சிகளில் சந்தேகத்திற்கிடமான சட்ட, மருத்துவ பிரச்சினைகள் நிலவுகின்றன,
(5) தவறிழைத்தமை நிரூபணமானால் சட்ட ரீதியாகத் தண்டனை வழங்கப்படும்,
(6) உசிதமான வேளைகளில் மரண அத்தாட்சிப்பத்திரம், நிவாரணங்கள்,
(7) சனத்தொகை நிலைமையை மாற்றியமைக்கும் கொள்கை உண்மைக்குப் புறம்பானது,
(8) அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் காணிகளின் அளவு குறைந்துள்ளது,
(9) வடக்கு கிழக்கு காணிகளைக் கையாள தேசிய காணி ஆணைக்குழு,
(10) நாடு முழுவதும் படையினர் தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுவர்,
(11) அனுமதியின்றி ஆயுதங்களை வைத்திருப்பதற்குத் தடை,
(12) காணொளி காட்சிகள் தொடர்பில் சுயாதீனமான புலனாய்வு விசாரணை நடத்தவும்,
(13) சிறு இனக்குழுக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற பாராளுமன்றத் தெரிவுக்குழு,
(14) இனப்பிரச்சினைகளுக்கு இடையில் நட்புறவை மேம்படுத்துவதற்கு மும்மொழிக் கொள்கை.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை விடயங்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு விமோசனம் எதுவினையும் கொண்டுவரப் போவதில்லை.
புண் ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் தகுந்த மருந்து கொடுக்க வேண்டும். அத்துடன், மற்றவர்களுக்கு குறித்த நோய்க் கிருமிகள் அப்புண்ணிலிருந்து தொற்றிவிடாமல் இருக்க, தடுப்பு மருந்து கொடுக்க வேண்டும். இது சாதாரண புண்ணுக்கே பொருந்துமென்றால், அறுபது ஆண்டுகளுக்கு மேலாக ஆறாத வடுக்களைச் சந்தித்திருக்கும் ஈழத் தமிழினத்தின் புண்ணைக் குணப்படுத்த பல வகையான மருந்துகளைக் கண்டுபிடிக்க வேண்டும். அவைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கே தவிர குறித்த புண்ணை உருவாக்கிய சிங்கள ஏகாதிபத்திய அரசுகளுக்கு ஆதரவாக இருக்கக்கூடாது.
குறித்த ஆணைக்குழுவின் பரிந்துரை கூறும் செய்தி ஒன்று என்னவெனில், கடந்த கால நிகழ்வுகளை மறந்து எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுக்க தயாராக வேண்டுமென்பதே. போர் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு இரண்டரை வருடங்களுக்கு மேலாகிவிட்டது. தமிழர்கள் இன்றுவரை எந்தவித அடிப்படை உரிமைகளையும் பெறவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் இன்று வெள்ளத்தில் மிதக்கிறார்கள். அவர்களுக்கு அரசாங்கத்தினால் எவ்வித உதவிகளும் வழங்கப்படாத நிலை இன்றுள்ளது. எதிர்கால வளர்ச்சிகளையும், சவால்களையும் எவ்வாறு சந்திக்கலாம் என்று கூறுபவர்கள், துன்பப்படும் மக்களுக்கு எவ்வித உதவிகளையும் செய்யாமல் இருட்டடிப்புச் செய்யும் நிலையே இன்று நிலவுகிறது. இத்தோரணையில் எவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க முடியும் என்பதே பலரிடத்திலும் எழும் வினா.
ஆணைக்குழுவின் அறிக்கையில் “சனல்-4” தொலைக்காட்சியின் நம்பகத்தன்மை மற்றும் உள்ளடக்கம் தொடர்பில் சந்தேகத்தை தோற்றுவிக்கும் தொழில்நுட்ப பிரச்சினைகள் உள்ளதாக தெரிவித்துள்ளது. வேடிக்கை என்னவெனில், குறித்த ஒளி நாடாக்களை ஐக்கிய நாடுகள் சபையே பொறுப்பேற்று மரபணுச் சோதனை செய்து குறித்த ஒளி நாடாக்கள் உண்மையே என்று கூறியது. இதைவிட எந்தவகையில், புலன் விசாரணை தேவை என்று குறித்த குழு கேட்கிறதென தெரியவில்லை. ஒருவேளை, குறித்த ஒளி நாடாக்களை இந்தியாவிற்கு அனுப்பினால் தமக்கு சார்பாக சோதனையின் முடிவு வரும் என்று மனப்பால் குடிக்கிறார் மகிந்தா போலும்.
பொது மக்கள் வாழ்ந்த இடங்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது - யுத்த நடவடிக்கைகளை அமுல்படுத்துவது - குறித்த கொள்கைகளை வகுப்பதில் முக்கிய ஒரு காரணியாக அமைந்திருந்ததென்பதையும் பொதுமக்களின் இடங்களை வேண்டுமென்றே இலக்கு வைத்து தாக்குதல்களை மேற்கொள்வது ஒரு போதும் அக்கொள்கையின் ஓரங்கமாக இருக்கவில்லை என்று கூறுகிறது குறித்த அறிக்கை.
அப்படியானால், மருத்துவமனைகள், பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், சிறார் மற்றும் வயோதிபர்கள் வாழ்ந்த இல்லங்கள், அநாதை மடங்கள் போன்ற இடங்களைக் குறிவைத்து சிங்கள அரச படையினர் மேற்கொண்ட தாக்குதல் எதுவுமே சிங்கள அரச படையினருக்கு தெரிந்திருக்கவில்லையா? இதனை சிங்கள அரசு மறைக்குமானால், சிங்கள அரசு மென்மேலும் தமிழ் மக்களின் வெறுப்பிற்கு ஆளாக வேண்டிவரும்.
ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்கள் உட்பட பல உலக மற்றும் உள்நாட்டு மனித நேய அமைப்புக்கள் பல காலங்களாக குறித்த இடங்கள் குறித்த பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வேண்டுமென குரல் கொடுத்தார்கள். அத்துடன், குறித்த இடங்களின் அமைவிடத்தைப் பற்றி சிறிலங்கா அரசிற்கும் மற்றும் படைத்தரப்பிற்கும் வழங்கப்பட்டது. இறுதி யுத்தக் காலப்பகுதியில், பாதுகாப்பு பிரதேசமாக சிங்கள அரசு மற்றும் விடுதலைப்புலிகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இடங்கள் மீது குண்டுகளை வீசி பல்லாயிரம் மக்களை கொன்றதை சிங்கள அரசும், குறித்த ஆணைக்குழுவும் மூடி மறைக்க முயல்கிறதா? ஆயிரம் நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான் என்பது சிங்கள ஆட்சியாளர்களுக்கும் பொருந்தும்.
உலக நாடுகள் என்னதான் செய்யப்போகின்றன?
சிறிலங்கா அரசாங்கம் சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கும், காலத்தை இழுத்தடிப்பதற்குமாகவே நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்தது. உப்புச் சப்பு இல்லாத, உண்மைக்கு புறம்பான அறிக்கைக்காக ஒன்றரை வருடங்களுக்கு மேலாக காத்திருந்தார்கள் சில மேற்கத்தைய நாடுகள். அளிக்கப்பட்ட கருமங்களுக்கு மாறாக, தமக்கு சம்பளத்தை வழங்கிய சிங்கள அரசிற்கு விசுவாசமாகவும், விடுதலைப்புலிகளையும் மற்றும் தமிழர் தரப்பினரையும் குற்றம் சாட்டியே குறித்த அறிக்கை வெளிவந்துள்ளது.
ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை. அடிப்படை விடயங்கள் குறித்து ஆழ விசாரித்து, தக்க நடவடிக்கைகளை எடுப்பதுவே புத்திசாலித்தனம். பிரித்தானியர்கள் சிறிலங்காவிலிருந்து வெளியேறிய காலத்திருந்தே, குறிப்பாக ஆயுதப் போராட்டங்கள் ஆரம்பிப்பதற்கு முன்பதாகவே தமிழ் இனத்தின் மீதான இன அழிப்பு நடவடிக்கையினை காலத்திற்குக் காலம் ஆட்சிக்கட்டிலேறிய சிங்கள அரசாங்கங்கள் செய்தன. எனவே பிரித்தானியர் நாட்டை விட்டு வெளியேறிய காலத்திருந்தான ஆய்வினை சர்வதேசம் செய்யவேண்டும்.
சிங்கள ஆட்சியாளர்கள் காலத்திற்கு காலம் செய்து கொண்ட ஒப்பந்தங்களைப் பற்றியும், அவைகளுக்கு இறுதியில் என்னவாயிற்று என்பதைப் பற்றியும் விசாரணை வேண்டும். தேவையற்ற ஒரு பயிரை அழிக்க வேண்டுமாயின், அதன் வேரையே பிடுங்க வேண்டும். அதைப் போலவேதான், ஒரு பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமாயின் குறித்த பிரச்சினையின் மூல காரணியை அறிந்து அவற்றை சரிசெய்தால் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிடும்.
அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் குறித்த அறிக்கையை ஆவலாக எதிர்பார்த்தார்கள். அறிக்கை வந்தவுடன், அதிர்ச்சிக்குள்ளான நாடுகளும் இவைகளே. குறித்த அறிக்கையில் இறுதிக்கட்ட போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளைக் கொண்டிருக்கவில்லையென்று அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் விக்டோரியா நுலான்ட் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், நல்லிணக்க அறிக்கையை அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்தும் பரிசீலித்து வருவதாகவும், ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை மாத்திரம் அல்லாமல் அறிக்கையில் குறிப்பிடப்படாத விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்தை அமெரிக்கா வலியுறுத்துகிறது.
சிறிலங்காவிற்கான கனேடிய உயர் ஸ்தானிகர் புரூஸ் லெவி இவ்வாணைக்குழுவின் அறிக்கை குறித்து கருத்துக் கூறுகையில், “டிசெம்பர் 16-ஆம் திகதி வெளியிடப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையானது மிக அவசியமான அரசியல் நல்லிணக்கத்திற்கு முக்கிய பங்களிப்பாகும். அதேவேளை, அறிக்கை மீதான எமது ஆரம்ப, வாசிப்பின்படி, சிறிலங்காப் படையினரின் சில சக்திகளால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் பாரதூரமான சர்வதேச பிழையான செயல்கள் தொடர்பாக போதியளவு கவனம் செலுத்தவில்லை என்ற பார்வைக்கு ஆதரவளிக்கின்றன. இந்த அறிக்கை தொடர்பான பதிலளிப்பை துரிதப்படுத்துமாறு நாம் சிறிலங்கா அரசாங்கத்தை ஊக்குவிக்கின்றோம். முக்கியமான பொறுப்புடைமை விவகாரம் குறித்து கவனம் செலுத்துமாறும் சிறிலங்கா அரசாங்கத்தை கனடா தொடர்ச்சியாக வலியுறுத்துகிறது" என்றார்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும், அவுஸ்திரேலியாவும் நல்லிணக்கக் குழுவின் அறிக்கையை கவனமாக ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளன. இதன் பின்னரே அது தொடர்பில் கருத்துக்கூற முடியுமென்றும் அந்த நாடுகள் குறிப்பிட்டுள்ளன. உலகின் பல நாடுகள் வாய் மூடி மௌனிகளாகவே இதுவரை இருக்கின்றன. சிறிலங்கா உள்விவகாரத்தில் சிறிது காலம் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்த இந்திய நடுவண் அரசு, பின்னாளில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் பாரிய பங்களிப்பை சிறிலங்கா அரசிற்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
சிறிலங்காவின் அரசியல் பிரமுகர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் இந்தியா செல்வதும், அவர்களுக்கு இந்தியா தேவையான உபசரிப்புக்களைச் செய்வதுமாக நிகழ்வுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது. அத்துடன், இந்திய மற்றும் சிறிலங்காவின் புலனாய்வுத்துறையினர் இந்தியாவில் ஈழத்தமிழருக்கு எதிரான பல நாசகார காரியங்களைச் செய்து கொண்டிருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
இறுதி யுத்தத்தில் நடந்த பல சம்பவங்களுக்குச் சாட்சிகளாக இருக்கும் பல தமிழர்களை இலக்கு வைத்தே இப்போது காய் நகர்த்தல்களை இந்திய மற்றும் சிறிலங்காவின் உளவாளிகள் ஈடுபட்டுள்ளார்கள். ஈழத் தமிழரின் வாழ்வில் இந்தியாவிற்கு கரிசனை உண்டு என்று ஒருபுறத்தில் கூறிவிட்டு, மறுபுறத்தில் அவர்களுக்கு எதிரான பல நாசகார வேலைகளைச் சிங்கள அரசுடன் இணைந்து செய்வது உலகத்தமிழர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
சிங்கள அரசுகள் தொடர்ந்தும் தமிழருக்கு நீதியைப் பெற்றுத் தரப்போவதில்லை என்பதை யாவரும் அறிவர். பல தசாப்தங்களாக இடம்பெற்றுவரும் தமிழின விரோதப் போக்கை சிங்கள அரசுகளும் விட்டதாக இல்லை. தமிழரின் அரசியல் அறவழிப் போராட்டத்திற்கு ஆரம்பத்தில் எந்தவொரு நாடும் ஆதரவளிக்கவில்லை. 1983-ஆம் ஆண்டுக்கு பின்னரான சம்பவங்கள் இந்தியாவின் கவனத்தை ஈழத் தமிழர் சார்பாக திருப்பியது. முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்குப் பின்னர் பல உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது என்றால் மிகையாகாது.
சிங்கள அரசுகள் செய்யும் ஒவ்வொரு கண்துடைப்பு நாடகங்களையும் உலக நாடுகள் கவனித்துக் கொண்டே இருக்கின்றன. கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்குப் பின்னராவது சிங்கள ஆட்சியாளர்களின் உண்மையான முகத்தை உலகநாடுகள் அறிய வழிவகுத்துள்ளது. இதற்குப் பின்னராவது, ஏதாவது உருப்படியான வேலைத்திட்டங்களை வகுத்து தமிழரின் அரசியல் கோரிக்கையை பூர்த்தி செய்து, அவர்களுக்கு நீதியைப் பெற்றுத் தருமா உலக நாடுகள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அனலை நிதிஸ் ச. குமாரன்
nithiskumaaran@yahoo.com
தமிழரை ஏமாற்றும் சிறிலங்காவின் திட்டம் வெற்றியடையப் போவதில்லை!
பதிந்தவர்:
ஈழப்பிரியா
27 December 2011
0 Responses to தமிழரை ஏமாற்றும் சிறிலங்காவின் திட்டம் வெற்றியடையப் போவதில்லை!