சென்னை வரும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நானே கருப்புக் கொடி காட்டுவேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கத்தில் அணையின் மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடி வரை உயர்த்தலாம் என்று உச்சநீதிமன்றம் 2006ம் ஆண்டே ஆணையிட்டது. இதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. ஆனால் இன்று வரை நிறைவேற்றவில்லை. உச்சநீதிமன்றத்தின் ஆய்வில் இருக்கிறபோதே கேரள அரசு வேண்டுமென்றே முல்லைப் பெரியாறு பிரச்சனையை கிளப்பியது.
பழைய அணைக்கு பதிலாக புதிய அணை கட்டப்போவதாகவும், பழைய அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்றும் கேரள சட்டமன்றத்திலேயே தீர்மானம் போட்டனர். கேரளாவில் உள்ள தமிழர்கள் தாக்கப்பட்டனர். தமிழ்நாட்டிலிருந்து அங்கு சென்ற ஐயப்ப பக்தர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டனர். இவ்வாறு தொடர்ந்து தமிழர்களின் உயிருக்கும் பாதுகாப்பு இல்லை.
தமிழ்நாட்டிற்கு இந்திய அரசு தொடர்ந்து ஓர வஞ்சனை செய்து வருகிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகள், மீனவர்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள் என்று அனைத்து தரப்பு மக்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர். தேமுதிகவைச் சேர்ந்த தலைமைக் கழகப் பேச்சாளர் இடி முழக்கம் சேகர் முல்லைப் பெரியாறு பிரச்சனையில் தனது இன்னுயிரையே மாய்த்துக்கொண்டார்.
இவ்வாறு தமிழ்நாட்டு மக்களை வாட்டி வதைக்கும் போக்கினை மேற்கொண்டு விட்டு இந்திய அரசின் சின்னமாக இப்பொழுது பிரதமர் தமிழ்நாட்டிற்கு எந்த முகத்தோடு வருகிறார் என்பதே எங்கள் கேள்வி. மக்களின் கோரிக்கைகளையும், உணர்வுகளையும் மதிக்காமல் பிரதமர் தமிழ் நாட்டிற்கு ஏன் வரவேண்டும்? தமிழர்கள் என்றாலே இந்திய அரசைப் பொறுத்தவரையில் பிள்ளைப் பூச்சிகளாகவே கருதுகிறார்கள்.
ஆகவே, இந்திய பிரதமர் 25 மற்றும் 26ம் தேதிகளில் சென்னைக்கு வருகிற பொழுது தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த உணர்வை காட்டும் வகையில் தேமுதிக சார்பில் ஜனநாயக ரீதியில் அமைதியான முறையில் சென்னையில் 26ஆம் நாளன்று எனது தலைமையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பிரதமர் எந்த முகத்தோடு வருகிறார்? கருப்பு கொடி காட்டுவேன் விஜயகாந்த்
பதிந்தவர்:
தம்பியன்
22 December 2011
0 Responses to பிரதமர் எந்த முகத்தோடு வருகிறார்? கருப்பு கொடி காட்டுவேன் விஜயகாந்த்