தெற்கு சூடான் நாடு விடுதலை பெற்றும் பயனற்ற ஒரு நாடாகவே தனது அரசியல் முன்நகர்வை நடாத்திக் கொண்டிருக்கிறது. கடந்த ஒரு வார காலத்தில் 3000 பேர் மானிடப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். ரூவாண்டா, சிறீலங்கா போன்ற நாடுகளில் இடம் பெற்ற மானிடப் படுகொலைக்கு ஒப்பான செயல் இதுவாகும். இக்கொலைகள் சர்வதேச போர்க் குற்றத்தில் கொண்டுவரப்படக்கூடிய கொடுஞ் செயல் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஆண் – பெண் – குழந்தைகள் – முதியோர் என்ற போதம் பார்க்காமல் அனைவரையும் கொல்லும் எத்தனத்தில் ஒரு தாக்குதல் நடந்தால் அது சர்வதேச போர்க் குற்றமாகும். தெற்கு சூடானில் உள்ள ஜங்கிலி பகுதியில் இந்த அனர்த்தம் நடைபெற்றுள்ளது. ஒரு பகுதியில் உள்ள மக்கள் ஆண், பெண், குழந்தைகள் என்ற பேதமின்றி ஒட்டு மொத்தமாக கொன்றொழிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் 2182 பேர் பெண்களும் குழந்தைகளுமாவர்.
ஆண்கள் 959 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். தெற்குச் சூடானில் ஆயுத மோதலும், வறுமையும், குழு மோதல்களும், இடப் பெயர்வுகளும் தொடர்ந்தவண்ணமுள்ளன. தெற்கு சூடான் சர்வதேச அரங்கில் முற்றிலும் நம்பிக்கை இழந்த நாடாக மாறி வருகிறது. புலம் பெயர் நாடுகளில் உள்ள நாடுகடந்த தமிழீழ அரசு தெற்கு சூடானுடன் நட்புறவாக இருப்பதாக அவ்வப்போது செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இப்படியோர் அனர்த்தம் நடைபெற்றுள்ளபோதும் நாடுகடந்த அரசின் இது குறித்த பிரக்ஞை இதுவரை வெனிப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஆயுதம் தாங்கிய 6000 இளைஞர்கள் இந்தப் படுகொலைகளை நடாத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. சுமார் 30.000 பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.
இது இவ்விதமிருக்க சிரியாவில் சற்று முன்னர் தற்கொலைக் குண்டொன்று வெடித்துள்ளது. சிரிய தலைநகர் டமாஸ்கசிற்குள் அமைந்திருக்கும் மெய்டான் வட்டகையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இது மிகவும் பாதுகாப்பான பகுதியாகும். வெள்ளி தொழுகை முடித்து உருவேறிய நிலையில் புறப்படும் ஆர்பாட்டக்காரர் எவரும் இப்பகுதியால் போக கண்டிப்பாக அனுமதிக்கப்படுவதில்லை. காரணம் இங்குதான் சிரிய உளவுப்பிரிவு காரியாலயம் இருக்கிறது. உளவுப்பிரிவு காரியாலயம் அல்லது போலீஸ் நிலையத்தை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
இறந்தவர் விபரம் இன்னமும் வெளியாகவில்லை. சிரியா சுடுகாடானாலும் அதிகார மாற்றம் நடக்காது என்பதில் சிரிய சர்வாதிகாரி பஸார் அல் ஆஸாட் தெளிவாக இருக்கிறார். கடந்த ஒரு மாத காலமாக சிரியா தப்பான பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிட்டது.
0 Responses to தெற்கு சூடானில் சீரழிவு: ஒரு வாரத்தில் 3000 பேர் மானிடப்படுகொலை